சிறப்புக் கட்டுரைகள்

நீரின்றி அமையாது உலகு வள்ளுவரை மேற்கோள் காட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான குடி நீர் -பிரதமர் மோடி + "||" + ₹3.5 trillion to be spent under Jal Jeevan Mission: PM Modi

நீரின்றி அமையாது உலகு வள்ளுவரை மேற்கோள் காட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான குடி நீர் -பிரதமர் மோடி

நீரின்றி அமையாது உலகு வள்ளுவரை மேற்கோள் காட்டி  ஒவ்வொரு வீட்டிற்கும்  குழாய் மூலம் சுத்தமான குடி நீர் -பிரதமர் மோடி
நீரின்றி அமையாது உலகு வள்ளுவரை மேற்கோள் காட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான குடி நீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
புதுடெல்லி,

2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன்  இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ’தூய்மை இந்தியா’  திட்டத்தை  உருவாக்கி நாடு முழுவதும் செயல்படுத்தினார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ள நரேந்திர மோடி  அரசு அனைவருக்கும் சுத்தமான குடி தண்ணீர் என்ற  திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்காக ’ஜல் ஜீவன்’ மிஷன் தொடங்கப்பட்டு உள்ளது.

ஜூலை 5-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டில் ‘ஜல் ஜீவன்’ திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்கு தயாராக உள்ளது என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி  இன்று 73-வது சுந்தந்திர தின உரையில்  கூறும் போது,

நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காகவும் நதிகள்,குளங்களை தூர் வாரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருவள்ளுவர் என்ற மகான் தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே சிந்தித்து ’நீரின்றி அமையாது உலகு’ என்று கூறினார். 

பல வருடங்களுக்கு முன்பே, ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது.

நீர் பிரச்சினையை  தீர்க்க ’ஜல் ஜீவன் மிஷன்’ என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ’ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர ஜல் ஜீவன் மிஷனுக்கு ரூ .3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  

தண்ணீரின் அவசியம் குறித்து இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் . வறுமையில் உள்ளவர்களே சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள். இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள், நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது என மோடி கூறினார்.


Today I announce, in the coming days we are going to start Jal Jeevan Mission with an allocation of 3.5 lakh crore rupees and both Center and States are going to work together on this Mission: PM @narendramodi

Watch live 
YouTube: https://t.co/ZJT25f7y9s#IndependenceDayIndiapic.twitter.com/kHEVYHBzRH

— PIB India (@PIB_India) August 15, 2019

2024-க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் 18 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் நீர் வழங்கபட்டு வருகிறது. பாரதிய ஜனதா (பிஜேபி) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் இதனை ஐந்து மடங்காக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகமாகும்.

"ஹர் கர், நல் சே ஜால்" என்ற கோஷத்துடன் விளம்பரப்படுத்தப்பட்ட  ஜல் ஜீவன் மிஷனுக்கான வரைபடம், "ஒவ்வொரு வீட்டிற்கும்  குழாய் மூலம் தண்ணீர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது,ஏற்கனவே செலவின நிதிக் குழு மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அமைச்சரவை ஒப்புதல் மட்டுமே நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் ’ஜல் ஜீவன் மிஷன்’ குறித்து அமைச்சர் கஜேந்திர சேகாவத் கூறும் போது  “இந்த திட்டத்திற்கான வரைபடம் தயாராக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நாளில், நாங்கள் அதற்கான பணிகளைத் தொடங்குவோம்.“ என கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது :-

“நீர் பாரமரிப்பு என்பது ஒரு மாநிலத்தின் கையில் உள்ளது. மத்திய அரசுக்கு ஜல் ஜீவன் திட்டத்தை சாதிப்பது எளிதான பணியாக இருக்காது. மாநில நிர்வாகங்களுக்கு இது ஒரு சவாலாக அமையும். எந்த மாநிலத்திற்கு, அதிகபட்ச  நிதி ஒதுக்க வேண்டும் என முடிவு செய்வதே மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக இருக்கும். நாங்கள் அனைத்து  தலைமை செயலாளர்களிடமும் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகச் செய்யுமாறு பேசியுள்ளோம். நீர் ஆதாரம்  ஒரு மாநிலத்தின் சொந்த விஷயமாக இருப்பதால், அதை செயல்படுத்த மாநிலங்கள் தான் செயல்பட வேண்டும். அவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் முன்னுரிமை அளித்து இதற்கு பணியாற்ற வேண்டும், அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் உள்ளோம், ”என்று கூறினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன், நீடித்த நீராதாரத்துடன் நிலத்தடி சேமிப்பு வசதியை உருவாக்குதல், நீர் வீடுகளுக்கு குழாய் பதிக்கப்படுவதை உறுதிசெய்தல், பராமறித்தல் மற்றும் மறுபயன்பாட்டிற்கான வழிகளை வகுத்தல்.  விவசாயம் போன்ற செயல்களில் வெளியெற்றபட்ட நீரை மீண்டும் பயன்படுத்துதல் ஆகியற்றை மத்திய மாநில அரசுகள் செம்மைப்படுத்த வேண்டும்.

ஏறக்குறைய 163 மில்லியன் இந்தியர்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை, இது மிக அதிகமான எண்ணிக்கையாகும், இதனால் இந்த திட்டம் ஒரு சவாலாக இருக்கும் என அரசு சாரா அமைப்பான ’வாட்டர் ஏட்’ கூறியுள்ளது

இது குறித்து, ”டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீரின்றி போகும், இது 100 கோடி மக்களை பாதிக்கும். 2030 ஆம் ஆண்டில் நாட்டின் நீர் தேவை இரட்டிப்பாகும் என்பதால் விஷயங்கள் மோசமடைய வாய்ப்புள்ளது, இது 2050 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படும்”. என லோக் அயுக்தா கூறி உள்ளது.

அடிக்கடி ஏற்படும் வறட்சி பயிர் கருகலுக்கும் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கிராமப்புற விவசாயிகளின் துயரங்களுக்கும் வழிவகுத்துள்ளது, விவசாயிகளில்  மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே நம்பகமான நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்துகின்றனர்.

ஜல் சக்தி அமைச்சின் தரவுகளின்படி, பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், 5 சதவீதத்திற்கும்  குறைவான கிராமப்புற குடும்பங்கள் தண்ணீர் குழாய் வசதியை பெற்று உள்ளன. , சிக்கிமில்  99 சதவீத  கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் நீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு போதுமான நீர் வழங்கல் இல்லாத சந்தர்ப்பங்களில் சுற்றி உள்ள  கிராமங்களில் இருந்து நீர் திரட்டப்பட்டு பகிரப்படும்.

ஜல் சக்தி அமைச்சகத்தில் தயாரித்து மதிப்பாய்வு செய்த   இந்த திட்டம்,  கிராம சபைகளுக்கும் அவற்றின் துணைக்குழுக்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் . தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  ஒத்துழைப்புடன்  உள்ளூர் நீர்வழங்கல் முறையின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை  நிர்வகிக்க இது உதவும். கிராமப்புற குடிநீர் பணிக்காக, அரசு அதன் ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு ரூ .8,201 கோடியிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் ரூ .10,001 கோடியாக உயர்த்தியது.

அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் குறித்த தெற்காசியா வலையமைப்பின் அதிகாரி ஹிமான்ஷு தாக்கர் கூறியதாவது:- 

நீர் தொடர்பான எந்தவொரு தேசிய கொள்கையிலும் நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.நீர் தொடர்பான எந்தவொரு தேசியக் கொள்கையும் நிலத்தடி நீரைச் சார்ந்தே இருக்க வேண்டும், ஏனெனில் நிலத்தடி நீர் இந்தியாவின் நீர் உயிர்நாடியாகும் என கூறினார்.

மொத்தத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் தகவல்படி  இந்தியாவில் உள்ள மொத்தம் 725 மாவட்டங்கள் ளில் 255 மாவட்டங்கள் , 756 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் நிறுவனங்கள் போல நாடு முழுவதும் 1,597 தொகுதிகள் கடுமையான நீர் நெருக்கடியையும், குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றன. கண்மூடித்தனமான பிரித்தெடுத்தல், ஒழுங்கற்ற பருவமழை மற்றும் அங்கீகரிக்கப்படாத வளர்ச்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டங்களில் கடுமையான சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.