சிந்தை செய்யும் விந்தை...!


சிந்தை செய்யும் விந்தை...!
x
தினத்தந்தி 16 Aug 2019 5:04 AM GMT (Updated: 16 Aug 2019 5:04 AM GMT)

சிந்தனை வளர்ச்சியின் அறிகுறி, சிந்திக்காதிருப்பதோ அழிவின் அறிகுறி என்றார் விஞ்ஞானி அப்துல்கலாம். மனிதன் சிந்திக்கும் ஆற்றலை அனுபவங்கள் மூலமாகவே பழங்காலத்திலிருந்து கற்று வந்திருக்கிறான்.

எதேச்சையாக கற்கள் உரசிக்கொண்டதால் நெருப்பினையும் உருண்டோடிய கற்களை கவனித்து சக்கரத்தினையும் கண்டுபிடித்தான் மனிதன். மழைக்காலத்துக்கு வேண்டிய உணவை கோடைக்காலத்திலேயே சேமித்து வைக்கிற எறும்புகளும், கூட்டுக்குள்ளே வெளிச்சம்பெற மின்மினிப்பூச்சியை விளக்காக பயன்படுத்தும் தூக்கணாங்குருவிகளும் சிந்திக்கின்றனவா என்றுகூட சிந்திக்க தோன்றுகிறது. சிந்தனை எங்கிருந்து வருகிறதென்றால் அறிவியல் மூளையிலிருந்து என்றும், ஆன்மிகம் இதயத்திலிருந்து என்றும் கூறுகிறது. சுவாமி விவேகானந்தர், நான் மூளை சொல்வதை கேட்காமல் இதயம் சொல்வதையே கேட்டு செயல்படுவேன் என்கிறார். ஆன்மிகம் இதயத்தை இதமாகவும், அறிவியல் மூளையை வேறுவிதமாகவும் சித்தரிக்கிறது.

மேலானவைகளை சிந்திப்போர் மேதாவிகள் என்றும், ஆழச்சிந்திப்போர் அறிஞர்கள் என்றும், வித்தியாசமாய் சிந்திப்போர் விஞ்ஞானிகள் என்றும், கலைநயத்தோடு சிந்திப்போர் கவிஞர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். வீழ்ந்த ஆப்பிளை ஆழ்ந்து சிந்தித்ததால் நியூட்டனும், ஆலய கோபுரத்தில் வானத்தை பார்த்து சிந்தித்ததால் கோபர்நிகோலஸ் என்ற வானவியலின் தந்தையும், அலங்காரவிளக்கின் அசைவினை அசையாமல் கவனித்ததால் தனிஊசல் கண்டறிந்த கலிலியோவும், ஆயிரம்முறை வந்த இருட்டு எனும் தோல்வியை வெளிச்சம் எனும் ஒரே வெற்றியால் தோற்கடித்த எடிசனும் நமக்கு கிடைத்தார்கள்.

சில வேளைகளில் விஞ்ஞானிகளின் சிந்தனையும் சில விசித்திரங்களை நிகழ்த்துவதுண்டு. விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட ஐயமுள்ள ஸ்டீனாக மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. ஒரு முறை பாரீசுக்கு சென்றிருந்த ஐன்ஸ்டீன் ஒரு பெரிய ஓட்டலில் தங்கியிருந்தார். மாலையில் ஊரைச்சுற்றி பார்க்க வேண்டுமென்கிற ஆசையில் வெகுதூரம் நடந்துசென்றவருக்கு திரும்பிவர வழிதெரியவில்லை. தங்கியிருந்த ஓட்டல் எது என்றும் மறந்துவிட்டார். போவோர் வருவோரிடமெல்லாம் ஐயா நான் தங்கியிருக்கும் ஓட்டல் எது என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்க ஆரம்பித்தார். எல்லோரும் சிரித்து, உன் பெயராவது ஞாபகம் இருக்கிறதா என்று கிண்டலடித்தார்கள். அது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஐன்ஸ்டீன் என்றார். அப்போதெல்லாம் இவர்பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்ததால், அவர்கள் திகைத்து அவரிடம் மன்னிப்புகோரி காவல்துறை உதவியுடன் ஓட்டல் அறையை கண்டுபிடித்தார்கள். பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும் தான்தங்கியிருந்த ஓட்டலை பிறர் உதவியாலேயே அன்று ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க முடிந்தது. ஞாபகமறதி என்பது பேரிழப்பு நிகழும்போது மட்டும் பேருதவியாய் இருக்கும்.

குழந்தைகளின் சிந்தனைச் சிறகுகளை பெற்றோர்களே கட்டிப்போடும் சூழலும் நிகழ்கிறது. படி படி என்று வற்புறுத்தப்படும் குழந்தைகள் ஒருபடிகூட வாழ்வில் முன்னேறாமல் போவதும், பிள்ளைகளின் சுயவிருப்பம் உணர்ந்து சுயமான அவர்களின் சிந்தனைக்கு வழிவிடும் பெற்றோர்கள் சாதிக்கும் பிள்ளைகளை காண்பதும் நடந்து வருகிறது.

சிறுபிராயத்திலிருந்தே குழந்தைகளை புத்தகங்களை படிக்கப்பழக்கும் பெற்றோர் புத்திசாலி சிந்தனையாளர்களை உருவாக்குகிறார்கள். ஐன்ஸ்டீன், நியூட்டன் மற்றும் எடிசன் போன்ற விஞ்ஞானிகள் பள்ளிப்படிப்பை விடுத்து பல புத்தகங்களைப் படித்தே புத்தாக்கம் பெற்றார்கள். இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் தன் பிள்ளைகளுக்கு செல்போன், கம்ப்யூட்டர் எதையும் கொடுக்காமல் புத்தகத்தை கொடுத்தே படிக்க பழக்கி வருகிறாராம். கண்களில் காணும் காட்சியும் செவிகளில் கேட்கும் செய்திகளும் மூளைக்குச் சென்று சிந்தனையைத் தூண்டி எண்ணமாக மாற்றி, செயல்வண்ணமாக உருவெடுக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ்டாண்ட்ஸ்ஜிக் என்கிற மாணவர் கணிதத்துறையில் படித்துவந்தார். ஒருநாள் அவர் வகுப்பிற்கு வர தாமதமாகிவிட்டது. வருவதற்குள் அன்றைய வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கிளம்பிவிட்டனர். கரும்பலகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் காணப்பட்டன. அவைகள் அன்றைய வீட்டுப்பாடம் என்று நினைத்து அவற்றை எழுதிச்சென்ற ஜார்ஜ், இரவு முழுவதும் சிந்தித்து அந்த இரண்டு கணிதத்திற்கும் விடையோடு வந்து ஆசிரியரிடம் காட்டினார்.

ஆசிரியர் மிகவும் வியப்படைந்து உலகில் எந்த மேதைகளாலும் தீர்க்கமுடியாத கணிதத்திற்கு விடை கண்டுபிடித்திருக்கிறாய் என்று பாராட்டினார். பேட்டியில் இதுகுறித்து கூறிய ஜார்ஜ், மேதைகள்கூட விடைகாண முடியாத கணக்கு என்று எனக்குத் தெரியாது. வீட்டுப்பாடம் என்று நினைத்து சுயமாக சிந்தித்ததால் விடைகாண முடிந்தது என்றார். மேதைகளாலேயே விடைகாண முடியாத கணக்கு என்று சொல்லிவிட்டு ஆசிரியர் எழுதிப்போட்டதால் மேதைகளாலேயே முடியாதது நமக்கு எங்கே முடியப்போகிறது என்று யாருமே முயற்சிக்கவில்லையாம்.

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகரத்து வீதியில் சந்திப்பவர்களை எல்லாம் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று சிந்திக்கத்தூண்டினார். எனவேதான் சற்றும் சிந்திக்காமல் கொடூர விஷம் கொடுத்து கொன்று விட்டு அவசரப்பட்டு ஒரு ஞானியை ஏதென்ஸ் இழந்துவிட்டதாக இன்றும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல சிந்திக்காத சிலப்பதிகார தீர்ப்புகள் இன்றும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவேதான் சிந்தனையின் மகத்துவத்தை உணர்ந்து அக்டோபர் 30-ந் தேதி உலக சிந்தனை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

சிந்தனையில் முற்போக்கு சிந்தனை, நேர்மறை, எதிர்மறை சிந்தனை, நற்சிந்தனை, சுயசிந்தனை, பகுத்தறிவு சிந்தனை, தீர்க்க சிந்தனை என பலவகைகள் உள்ளன. சிரிப்புகூட சிந்தித்தே சிரிக்க வைக்கிறது. சிந்தித்து சிரிப்பவர்களே சில்லரையை சிதறவிடுகிறார்கள். சிந்திக்காதோர் செல்லாக்காசாகிறார்கள். மனிதனுக்கு மட்டுமே சிரிப்பு என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மனஅமைதி பெற்றால்தான் சிந்தனைசக்தி அதிகரிக்கும். மன அமைதி பெற தியானம் ஒன்றே சிறந்த வழியாகும். தியானம் என்பது அலைமோதும் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி மனஅமைதி கொள்ளுதல் ஆகும். எளிமையான தியான முறையாக தினந்தோறும் அதிகாலை மற்றும் மாலைவேளைகளில் முதலில் 5 நிமிடம், தலை, கழுத்து, முதுகு நேர்க்கோட்டில் அமையும்படி நிமிர்ந்து பத்மாசன முறையில் அமர்ந்துகொண்டு, கைவிரல்கள் சின்முத்திரையில் அதாவது கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலை தொடும்படி செய்துகொண்டு, தனிமையான அமைதியான சூழலில் இயற்கை சார்ந்த பொருள் அல்லது இறைவனை மனதில் நிறுத்தி ஒரே சிந்தையில் இருந்து பழக வேண்டும்.

தியான நிலையில் மூச்சுக்காற்றை சீராக இழுத்துவிடவேண்டும். தொடர்ந்து 5, 10, நிமிடம் 30 நிமிடங்கள்வரை செய்து பழகினால் ஆழ்நிலை தியானம் எய்து சிந்தனை சிறகடித்து சிந்தனையில் தெளிவு பெறலாம். 

- கே.கோவிந்தசாமி, இயன்முறை மருத்துவர், ஆலங்குடி.

Next Story