தர(கு)வு வியாபாரம்


தர(கு)வு வியாபாரம்
x
தினத்தந்தி 16 Aug 2019 5:11 AM GMT (Updated: 16 Aug 2019 5:11 AM GMT)

உலகம் ஒரு நாள் ஒரு குடையின் கீழ் வருமா? என்று பல மன்னர்கள், சாம்ராஜ்ஜியங்கள், கொடுங்கோலர்கள் எல்லாம் முயன்று முடியாத ஒன்றை, ஒற்றை வார்த்தை இன்று உண்மையாக்கி உள்ளது. ஆமாம் தொழில்நுட்பம் என்ற ஒற்றை சொற்றொடரே அந்த உண்மையின் பெயர்.

இணையமும், தொலை(அலை)பேசிகளும் கையடக்க வடிவில் வரவர மனிதன் கருவிகளின் அடிமையாகத் தன்னை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக சரணடைய ஆரம்பித்தான். எப்போதாவது யோசித்தீர்களா?

ஏன் எனது தொலைபேசியிலும், இணையத்தொடர்பிலும், நான் சென்று தேடாமலேயே நமது விருப்பமான உடை, உணவு, அணிகலன், அரசியல், மதம் சார்ந்த செய்திகள் தேடு பொருள் பெட்டிகளின் வழியே வந்து விழுந்த வண்ணம் உள்ளன என்பதை?

ஒரு தனி மனிதனின் அத்தனைத் தரவுகளும் இன்று தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைக் கொண்டே மனித சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, மதம், இனம், மொழி, நாடு என்ற போர்வையில் பகை, வெறுப்பு என்று எல்லாவிதமான நச்சு விதைகளையும் அயல் மகரந்தச் சேர்க்கை போல விலங்குகள், பறவைகள் துணையின்றித் தொழில்நுட்பம் விதைத்து விட்டுச் செல்கிறது.

ஐ.நா.வின் பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரெஸ் சமீபத்தில் தனது டுவிட்டர் பதிவில் உலக முழுமையும் மக்களிடையே வெறுப்பை விதைக்கும் வேலையில் சமூக ஊடகங்களின் பங்கே ஆபத்தானது என்று அறிவித்து அதன் மீது போர் தொடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்று பேசுகிறார்.

காலை முதல் மாலை வரை குனிந்த தலை நிமிராமல் தனித்தனியே தீவுக் கூட்டமாய் மனித இனம் மாற ஆரம்பித்து சுமார் இந்தப் பத்து வருட காலத்தில் ஒருவன் தன்னை அறியாமலேயே தான் சார்ந்த எல்லாத் தரவுகளையும் பதிவிட்டே செல்கிறான். பின்னர் அதுவே அவனது நடை, உடை, பாவனைகளைத் தீர்மானிக்கிறது என்று தெரியாமல், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று ஒன்றும் இல்லாமல் அலைபேசியின் திரை ஒன்றே திசை என்று மாறிப்போய் விட்டான்.

மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசன அமர்வின் வழியாக உச்சநீதிமன்றம் சொன்னாலும், நடைமுறை அப்படி இல்லை. தொழில்நுட்பம் மூலமாக மக்களை மூளைச் சலவை செய்யும் அமைப்புகளே, தங்களைப் பற்றிய எதிர்ப்புக்குரல் எழாமல் செய்ய அந்தத் தொழில்நுட்பம் கொண்டே எல்லா இணைப்புகளையும் முடக்கி விடுகிறது.

ஒரு நாட்டின் தேர்தல் முடிவுகளை இணையதளங்கள் மாற்ற முடியும் என்ற செய்தியை 2016 அமெரிக்காவின் தேர்தல் காலத்தில் ரஷியாவின் உதவியோடு பேஸ்புக், கூகுள் போன்றவை செய்து ஹிலாரி கிளிண்டன் தோற்கடிக்கப்பட்டார் என்பதாக செய்திகள் வர, 56 மில்லியன் தரவுகளை ஒரு நிறுவனம் மூலமாகத் தவறான பிரசாரம் செய்யப்பட்டது என்ற செய்தி ஒருபுறம், தற்போது அமெரிக்க அதிபர் ‘டொனால்டு டிரம்ப்’ 2016 தேர்தலிலும், தற்போது வரவுள்ள 2020 தேர்தலிலும் தன்னைத் தோற்கடிக்க கூகுள் முயற்சிக்கிறது என்று, அதன் செயல் தலைவர் சுந்தர் பிச்சையை அழைத்துப் புகார் செய்கிறார்.

சீனாவின் ராணுவத்தோடு ரகசியக் கூட்டு என்றும் சொல்கிறார். எப்.டி.சி என்னும் அமைப்பு கடந்த மாதம் தான் தனிநபர் தரவுகளை வெளிபாட்டமைக்காத பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலரில் அபராதம் விதித்தது. பல ஐரோப்பிய நாடுகள் தமக்கான தேடு பொருள் எந்திரங்களைத் தயார் செய்து கூகுளின் பிடியிலிருந்து வெளியே வர முயன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாளில் அட்டைகளின் மூலம் நடத்தப்படும் எல்லாவித பரிவர்த்தனைகளும் சாத்தியமான பிறகு, தனி மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையும் யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்படும் நாள் வரும்.

குடி, கூத்து, காமம் என்ற திசைகளில் மனிதனை மடைமாற்றிவிட்டு, அதன் மூலமாகவே தொழில்நுட்பம் தனது அசுரக் கரங்களால் மனித இனத்தின் நடவடிக்கைகளைத் தனது கட்டுக்குள் கொண்டு செல்கிறது. இத்தனை வீச்சு கொண்ட தொழில்நுட்பத்தை இன்னும் தனது எல்லைக்குள் விடாமல் சீனா தடுப்பதின் பின்னணியிலும் வேறு அரசியல் உள்ளது.

மனிதனின் விரல் ரேகை, கண்விழிப்பதிவு, முகம் சார்ந்த பதிவுகள் அத்தனையும், கைப்பேசிகள் மூலமாக சேகரிக்கும் நிறுவனங்கள் அவற்றை எங்கே சேமிக்கின்றன? யாரோடு பகிர்கின்றன? என்ற எந்தத் தகவலும் தெரியாமலேயே நான் முகத்தைக் காட்டினால் எனது தொலைபேசி இயங்குகிறது என்ற காட்சிப் பிழைகளில் கரைந்து கொண்டிருக்கிறோம்.

இன்று ஒருவன் கண்விழித்த காலை தொடங்கிக் கண்மூடும் அத்தனை நகர்வுகளையும், எப்போது எழுந்தார்? எவ்வளவு நடந்தார்? என்ன சாப்பிட்டார்? எதை உடுத்தினார்? எந்த வாகனம் மூலமாக எங்கெல்லாம் சென்றார்? யாரை சந்தித்தார்? என்ன சிந்தித்தார்? அவர் தொடர்பில் உள்ள குழுக்கள் எவ்வளவு? அவர்கள் யார்? என்று இழுத்து விடுகின்ற மூச்சுக் காற்றின் கணக்கோடு தனிமனிதனைப் பின் தொடர்கிறது தொழில்நுட்பம். இனிமேல் அரசாங்கம் 2018 நவம்பர் மாத உத்தரவுப்படி அரசினுடைய பத்து துறைகளுக்கு இந்தியாவில் உள்ள எந்தக் குடிமகனையும் வேவு பார்க்கலாம் என்ற அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இதை இங்கிலாந்து அரசாங்கம் 2017-ம் ஆண்டே 48 துறைகளுக்குக் கொடுத்து 29-ந் தேதி ஜூலை மாதத்தில் அந்த நாட்டு நீதிமன்றம் அந்த உத்தரவு செல்லும் என்று அரசுக்கு சார்பாகத் தீர்ப்பளித்துள்ளது. பயங்கரவாதம் என்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளே எனினும், எவ்விதமான சார்பு நிலையுமற்ற, ஒரு தனிமனிதனின் சிந்தனை, செயல், வாழ்வு எல்லாம் ஒன்றின் கீழ் அடமானம் வைக்கப்படுகின்ற ஆபத்தினைத் தான் இந்தத் தொழில்நுட்பம் செய்கிறது. மனிதர்கள் பற்றிய தரவுகள், அதாவது அவரது மொத்த குணநலன்களையும் சேகரம் செய்யும் ஒரு நிறுவனம், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு இன்று வளர்ந்துவிட்டன. ‘நான்’ என்பது இனி ‘நான்’ இல்லை. ‘நாம்’ என்பதும் இனி நாம் இல்லை. எவனோ ஒருவன் வாசிக்கிறான்.. இருட்டில் இருந்து நான் யோசிக்கிறேன் என்று பாடு பொருளாக நம் வாழ்வு மாறிக்கொண்டே வரும்.

தமது வழிக்கு வராத தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், மக்கள் என இனி யாரையும் வழிக்குக் கொண்டு வருகின்ற தகவல் தொழில்நுட்ப சாலையின் பயணம் ஆபத்தே. எனினும் அசைக்க முடியாத அதிகாரமாக அது மாறிவிட்டது. ஆனால், காற்றிலும், கடலும், மலையிலும், நதியிலும் மகிழ்ந்து கிடந்த மனித சமூகம் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் கட்டப்பட்டுவிட்டது என்பதே மாறாத உண்மை.

ஆனால், எது கொண்டும் அறியாமல், புரியாமல் இனாமாகக் கிடைத்த செயலிகளின் பின்னால் சென்று செயலற்று போன மனித சிந்தனையின் அடுத்த நகர்வு என்பது இனிமேல் அவர்களிடம் இல்லை. உச்சநீதிமன்றமே கேட்டாலும் தகவல்களின் பிறப்பிடம் தோற்றுவாய் எது? என்பதை எங்களால் தர இயலாது என்று வாட்ஸ்-அப் நிறுவனமே சொன்னாலும், நாம் ‘ஓஹோ’ அப்படியா? என்று கடந்து போகிறோம். இப்படியே இது தொடர, நாமும் ஒன்றும் அறியாத உறங்க இனி ஒவ்வொரு தலைமீதும் தொழில்நுட்பம் எனும் கத்தி ரத்தம் உறைய உறைய காஷ்மீர் தொடங்கி, கன்னியாகுமரி வரை இறங்கும். வலியற்றுக்கிடக்க வேண்டுவதே வரமெனக்கொள்க.

- வே.பாலு, வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.

Next Story