தினம் ஒரு தகவல் : கண் பரிசோதனை


தினம் ஒரு தகவல் : கண் பரிசோதனை
x
தினத்தந்தி 16 Aug 2019 5:37 AM GMT (Updated: 16 Aug 2019 5:37 AM GMT)

கண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு அட்டவணையை (சார்ட்) காட்டி படிக்கச் சொல்வார்கள்.

சிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துகள், எண்கள் இருக்கும். எழுத்துகளை எளிதாக படித்து விடலாம். ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சினை இருந்தால் எழுத்துகளை படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

சிரமத்தை அறிந்து லென்ஸ்களை மாற்றி, மாற்றி எந்த லென்ஸ் அணியும் போது உங்களுக்கு சரியாக படிக்க முடிகிறது என்பதை கண்டுபிடிப்பார்கள். பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இப்போது நாம் பார்க்கப்போவது பார்வை பிரச்சினை பற்றியது அல்ல. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் அந்த அட்டவணையை (சார்ட்) பற்றியது தான். கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் அதனை உருவாக்கியது யார் தெரியுமா? பெர்டினண்ட் மோனோயெர் என்பவர்தான் இதனை கண்டுபிடித்தார்.

பிரான்சில் 1836-ம் ஆண்டு பிறந்த இவருக்கு தானும் ஒரு கண் மருத்துவராக வேண்டும் என்று ஆசை. அதற்காக படிக்க ஆரம்பித்தார். பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதினார். பல பல்கலைக்கழகங்களுக்கும் பயணித்து கண் பரிசோதனைக்கான டையாப்டர் முறையை கண்டுபிடித்தார்.

கண்ணுக்கும், எழுத்துக்கும் இருக்கும் தூரத்தை கணக்கிடுவதுதான் டயாப்டர் முறை. அந்த எழுத்துகளை எளிதாக கண்டுபிடிக்க ஒரு சார்ட்டை உருவாக்கினார். எழுத்துகளை சிறியதில் இருந்து பெரியது என வெவ்வேறு எழுத்துகள் நடுவே சில எண்கள் என அவர் உருவாக்கியது தான் இன்று வரை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். தன்னுடைய பெயரான மோனோயர் என்பதை சார்ட்டில் இருக்கும்படி முதலில் உருவாக்கினார். கீழிருந்து மேலே நோக்கிச் செல்லும் எழுத்துகள் பெரியது முதல் சிறியது வரை இருக்கும்.

மேலே செல்ல செல்ல எழுத்துகளின் அளவு குறைந்து கொண்டேயிருக்கும். அந்த அட்டவணையில் இடது புறத்தில் இருக்கும் முதல் எழுத்துகளை எல்லாம் சேர்த்தால் மோனோயர் என்ற வார்த்தை வரும். மோனோயருக்குப் பிறகு அந்த அட்டவணையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 1862-ம் ஆண்டு நெதர்லாந்தை சேர்ந்த ஹெர்மன் ஸ்னெல்லன் என்பவர் எழுத்துகளுடன் பல வடிவங்களையும் சேர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1976-ம் ஆண்டு சில நவீன மாற்றங்களை கொண்டு வந்தனர். இப்படித்தான் கண் பரிசோதனைக்காக சார்ட் உருவாக்கப்பட்டது.

Next Story