திருமணத்தால் அதிக பலன் ஆண்களுக்கா.. பெண்களுக்கா..?


திருமணத்தால் அதிக பலன் ஆண்களுக்கா.. பெண்களுக்கா..?
x
தினத்தந்தி 18 Aug 2019 5:34 AM GMT (Updated: 18 Aug 2019 5:34 AM GMT)

ஆராய்ச்சியில் புதிய தகவல்கள்.

திருமணங்கள் ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடந்துகொண்டிருந்தாலும் அதில் கணவன்- மனைவியாக இணையும் ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். ‘எல்லோரும் சொல்கிறார்கள் அதை நம்பி எங்கள் வாழ்க்கையை தொடங்குகிறோம்’ என்ற மனஓட்டத்திலே அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் எளிதாக யாரும் திருமணம்செய்துகொள்ள சம்மதிப்பதில்லை.

இளைஞர்களிடமும் இந்த மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் எவ்வளவோ நச்சரித்தாலும் சில இளைஞர்கள் பிடிவாதமாக மறுத்துவருகிறார்கள். ‘திருமணம், ஒரு மனிதனை அடிமையாக்கிவிடும், அவனது எல்லா மகிழ்ச்சி, சுதந்திரத்தையும் பறித்துவிடும், திருமணத்தால் பலன் பெறுபவர்கள் பெண்களே’ என்பது திருமணத்தை மறுக்கும் இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

திருமணம் என்பது சுமையானது. அதனால் திரு மணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் ‘லிவ்-இன்’ முறையை நாடலாம் என்ற மனோபாவம் இளைஞர்களிடம் பெருகி வருகிறது. ஆகவேதான் முடிந்தவரை திருமணத்தைத் தள்ளிப்போட நினைக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள்.

‘அப்படி அவர்கள் சொல்வது சரியல்ல’ என்பதே வாழ்வியல் ஆய்வு நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்னவென்றால், “திருமணம் என்பது, ஆண் களின் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. காரணம், மனைவிகள் கணவன்மார்களின் நலத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார்கள். கணவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதால், மனைவியால் துணைவரின் இதய நோய், சர்க்கரைநோய் போன்ற வற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடியும்.

திருமணம், மனஅழுத்தத்தில் இருந்து ஆண்களைக் காக்கிறது, அதேநேரத்தில் மணமான ஆண்களுடன் ஒப்பிடும்போது மணமான பெண்கள் இருமடங்கு மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அனைத்து வயதினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், மனைவிகளை விட கணவன்மார்கள் திருமண வாழ்வில் அதிகபட்சத் திருப்தியை வெளிப் படுத்துகிறார்கள்” என்கிறார்கள்.

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

“இருக்கிறது. மனைவியுடன் வாழும் ஆண்களைவிட மனைவியை இழந்த ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மனைவி இறந்துபோனால் கணவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆனால் கணவர் இறந்துபோனால் அது பெரும்பாலும் மனைவியின் உடல்நிலையை பாதிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது. அப்படிப்பார்த்தால் திருமணத்தால் அதிக பலன்களை அனுபவிப்பது ஆண்கள்தான்” என்று ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மிகவும் மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்வை அனுபவிப்பவர்கள் திருமணமான ஆண்களே (88 சதவீதம் பேர்) என்று தெரியவந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் துணையைவைத்திருக்கும் ஆண்கள் குறைவான சந்தோஷத்தையே அனுபவிக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

அதனால் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது. திருமணம் செய்துகொண்டு, மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வது எப்படி தெரியுமா?

உங்களுக்கு பிடித்தவரை மட்டுமே திருமணம் செய்துகொள்ளவேண்டும். உங்களுடன் கரம் கோர்ப்பவர், உங்களை விரும்புபவராக இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பின் எல்லாம் சரியாகிவிடும் என்று கற்பனைக்கோட்டை கட்டாதீர்கள்.

உங்களுக்கும், உங்கள் வருங்காலத் துணைக்கும், அவரது பெற்றோருக்கும் எந்தளவுக்குப் பொருந்திப் போகும் என்று திருமணத்துக்கு முன்பே சோதித்துக் கொள்ளுங்கள். ஒருவர் திருமண வாழ்வில் எப்படி இருப்பார் என்பதற்குச் சரியான அடையாளம், அவர் பிறந்த குடும்பத்தில் எப்படி இருக்கிறார் என்பது. ஆண் செய்யும் வேலைகளைத்தான் ஆண் செய்ய வேண்டும், பெண் செய்யும் வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உதறுங்கள். எப்போதுமே வாழ்க்கைத் துணைக்கு நம்பிக்கையானவராகவும், அவரை நம்புபவராகவும் இருங்கள்.

Next Story