மலை இளவரசியின் மடியில்..(காட்டுக்குள் ஒரு பயணம்)


கெத்தேசால் மலைக் கிராமத்தில் குச்சிகளில் சேறுபூசி கட்டப்பட்டிருக்கும் வீடு
x
கெத்தேசால் மலைக் கிராமத்தில் குச்சிகளில் சேறுபூசி கட்டப்பட்டிருக்கும் வீடு
தினத்தந்தி 18 Aug 2019 7:20 AM GMT (Updated: 18 Aug 2019 7:20 AM GMT)

கெத்தேசால் மலைப்பகுதியில் சோளகர் சமூக மக்களும், ஊராளி சமூகமக்களும் இணைந்து வாழ்கிறார்கள்.

காளிதிம்பம், இட்டரை, தடசலட்டி, பெஜலட்டி, மாவநத்தம், பங்களாதொட்டி, சென்டர்தொட்டி, அதேபாளையம், புதுத்தொட்டி, மாவல்லம், தேவர் நந்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஊராளிகள் வசிக்கிறார்கள். ஊராளிகளில் 12 குலங்கள் உள்ளன. இதில் பல குலங்கள் தற்போது மறைந்து விட்டன.

குருநகர் குலம், சம்பர்குலம், வெள்ளகர் குலம், பேரதவர் குலம், கல்பட்டி குலம், போரிகர் குலம், புங்கர் குலம் ஆகியவை உள்ளன. வீரபத்திரசாமி, பிரம்மதேவர், மாரியம்மன் போன்றவை இவர்களின் குல தெய்வங்கள்.

அதே குலத்தில் திருமணம் செய்யும் வழக்கம் இவர்களிடம் இல்லை. இதில் குருநகர் குலத்தினருக்கு பேரதவர் குலத்தினர் பங்காளி குலம், சம்பர் குலத்துக்கு கல்கட்டி குலத்தவர் பங்காளிகள். இந்த பங்காளி குலத்திலும் திருமணங்கள் செய்வது இல்லை. மற்றபடி இவர்களின் திருமண வழக்கங்கள் சோளகர் களைப்போன்றுதான் உள்ளது.

இதோ இப்போது நாம் கெத்தேசால் எல்லையை தொட்டுவிட்டோம். இது கொன்னூர் சாமி மலையடிவாரத்து கிராமம்.

‘‘இந்த மலைதான் எங்கள் சாமி. மலையின் உச்சியில் கோவில் இருக்கிறது. அங்கு மாதேவன் என்பவர் பூஜை செய்கிறார். மலையடிவாரத்தில் முதல் வீடு அவருடையதுதான். அவருடைய வீட்டின் அருகில் அவரது உறவுப் பெண் ஒருவரின் வீடும் உள்ளது’’ என்று கூறி, அந்த இரண்டு வீடுகளையும் நமக்கு காட்டினார்கள்.

நாம் அருகில் சென்று நின்றால் நமது உயரம்தான் இருக்கிறது அந்த வீடுகள். குடிசைதான். ஆனால் ஓடு வேயப்பட்டு இருக்கிறது. காட்டில் கிடைக்கும் மரக்குச்சிகளை சுவர்போல கட்டி மண்ணை சேறாக குழைத்து அதில் பூசி இருக்கிறார்கள். தற்போது அந்த பெண் வசித்து வரும் குடிசை 30 ஆண்டு களுக்கு முன்னால் கட்டப்பட்டது. கதவு எப்போதும் சற்று திறந்த நிலையில்தான் இருக்கிறது. அது முழுமையாக பூட்ட முடியாத நிலையில் இருக்கிறது.

அவர்களுக்கு வனவிலங்குகளை பற்றிய பயமெல்லாம் இல்லை. ‘திடீரென்று யானை வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது, ‘‘யானை வந்தால் அப்படியே போய் விடும். கொன்னூர் சாமிகிட்டே இருக்கிறோம். அவர் அருள் எங்களுக்கு இருக்கிறது அல்லவா..!’’ என்கிறார்கள். அந்த அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த கொன்னூர் சாமிக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் விழாவின்போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சென்று படையலிட்டு வழிபடுகிறார்கள். அந்த ஒரு நாள்தான் சாமிக்கு பூஜை, விளக்கு எல்லாம்!

நாம் ஏற்கனவே பார்த்த பூசாரியின் குடிசை மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா குடிசைகளுமே மரக்குச்சிகளில் சேறு பூசி கட்டப்பட்டவைகளாகத்தான் இருக்கின்றன. ஆசனூர் ஊராட்சி சார்பில் இங்குள்ள 40 பேருக்கு தமிழக அரசின் நிதியுடன் கூடிய வீடுகள் கட்ட உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியை காண்டிராக்ட் எடுத்தவர், எல்லா வீடுகளையும் பாதி வேலையோடு நிறுத்திக்கொண்டு, அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டார். மக்கள் அதை பயன்படுத்த முடியாமல் அல்லல்படுகிறார்கள். வீடுகளில் போடப்பட்டு இருக்கும் தளத்தை பார்த்தால் அதுவிரைவில் பழுதடைந்துவிடும் என்பது தெரிகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள்தானே இவர்களுக்கு என்ன தெரியும் என்ற எண்ணத்தில் காண்டிராக்டர் பணியை பாதியில் முடித்துவிட்டு சென்று விட்டார் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.

கெத்தேசாலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சுற்றுவட்டார பகுதிகளுக்காக இங்குதான் உண்டு உறைவிட பள்ளிக்கூடம் செயல்படுகிறது. கேர்மாளம், கோட்டாடை, கானக்கரை என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவ-மாணவி கள் 10-ம் வகுப்புவரை இங்கு கல்விகற்கலாம். அதற்காக 3 மாடிகளைகொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டும் பணி இன்னும் முடியவில்லை. அந்த கட்டிடமும் தரமில்லாமல் போய்விடுமோ என்பது அங்குள்ள மக்களின் கவலையாக இருக்கிறது. இதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கவனித்துக்கொள்வார்கள் என்பதால், மலைச்சரிவு பாதையில் மெல்ல நடந்தோம்.

சுற்றி அடிக்கும் காற்று தென்றலாகவும் அல்லாமல், பெருங்காற்றாகவும் அல்லாமல் தேகத்தை தீண்டி செல்கிறது. செல்போன் இணைப்புகள் கிடைக்காததால் வெளி உலகத்தொடர்பு முற்றிலும் துண்டித்துப்போகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அங்குள்ள மக்கள் வசித்து வருகிறார்கள்.

நாவல் பழங்கள் தரையில் விழுந்து மிதிபடுகின்றன. அவர்கள் தரமான பழங்களை சேகரித்துவைத்து நமக்கு சாப்பிடத்தருகிறார்கள். சந்தையில் பெரிது பெரிதாக பார்த்துப்பழகிய நாவல்பழம் அங்கு சிறிதாகவே இருக்கிறது. ஆனால் நாவில் பட்டால் சுவை! இத்தனை சுவையானதா நாவல் பழம் என்று நாக்கு கேள்வி எழுப்புகிறது. மரத்தில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக தொங்குகின்றன.

அங்குள்ள மக்கள் முதலில், அறிமுகமற்றவர்களிடம் தள்ளியே நிற்கிறார்கள். நாம் பேச ஆரம்பித்த பின்பு அவர்களும் அன்போடு பேச முன்வருகிறார்கள்.

சந்தன மர கடத்தல் வீரப்பனை பற்றி பேசும்போதுதான் அவர்களுக்குள் சற்று திகில் எட்டிப்பார்க்கிறது. நாம் அவரை பற்றி அழுத்தமாக கேட்ட பின்பு, சற்று தூரம் நம்மை அழைத்துச்சென்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார்கள். இதோ இந்த இடம்தான் 4 பேரை வீரப்பன் கொன்று போட்ட இடம் என்று கைகளை நீட்டினார்கள். அந்த பகுதி மக்களால் பயன்படுத்தப்படாத இடமாகவே அது இன்றும் உள்ளது.

அந்த நினைவுகளை சொல்ல முடியுமா?, என்று கேட்டதும், ‘‘அது வந்து..’’ என்று சற்று தடுமாறினார்கள். இன்னும் வீரப்பன் மீதான அச்சம் இந்த கிராமத்தை விட்டு அகலவில்லை. ‘‘பொம்மன், தாசன், பசுவன், குன்னன், மாதன், ராமன் ஆகியோரை கொல்ல முயன்றார்கள். அதில் ராமன் என்பவர் உயிர் தப்பினார். அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்’’ என்றார்கள்.

ராமனை பார்க்க வேண்டும் என்றோம். சற்று நேரம் யோசித்து, சற்று தூரம் அழைத்துச்சென்று ஒரு பெரியவரை நம் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

நீங்க தான் ராமனா?, என்றதும் தயக்கத்துடன் ஆமாம் என்றார்.

அவர் தனது வலது கன்னப்பகுதியை காட்டினார். வாயோடு சேர்ந்து பெரிய காயத்தழும்பு தெரிந்தது. கால்களில் தொடைப்பகுதியை காட்டினார். 2 இடங்களில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த அடையாளம். காலங்கள் கடந்தாலும் வடுக்கள் ஆறாமல் இருக்கும் ராமன் அன்றைய தினம் நடந்த சம்பவத்தை விவரிக்க தொடங்கினார்.

-தொடரும்.

Next Story