சிறப்புக் கட்டுரைகள்

அக்கா கணவரின் தவறான தொடர்பை கையும் களவுமாக பிடித்த மைத்துனி + "||" + Abusive relationship with sister husband relationship find investigate Sister in law

அக்கா கணவரின் தவறான தொடர்பை கையும் களவுமாக பிடித்த மைத்துனி

அக்கா கணவரின் தவறான தொடர்பை கையும் களவுமாக பிடித்த மைத்துனி
நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்கள்.
மூத்தவள் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலைதேடிக்கொண்டிருந்தபோது, அவளை வசதிபடைத்த குடும்பம் ஒன்றில் இருந்து பெண்கேட்டு வந்தனர். பெரிய இடத்தில் இருந்து பெண்கேட்டு வருகிறார்களே என்று இவர்கள் முதலில் தயங்கினாலும், பின்பு திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள்.

புதுமாப்பிள்ளை விளையாட்டு பிரியர். தினமும் காலையில் எழுந்ததும் டென்னிஸ் பயிற்சிக்கு மைதானத்திற்கு சென்றுவிடுவார். பயிற்சியை முடித்துவிட்டு, அங்கேயே குளித்து புதிய உடை அணிந்துகொண்டு, அப்படியே அலுவலகம் சென்றுவிடுவார். மாலையிலும் மைதானத்திற்கு சென்று பயிற்சியை முடித்துவிட்டு, இரவில் தாமதமாக வீடு திரும்புவார்.

தனது விளையாட்டு பயிற்சிக்கு தேவையான பொருட்களையும், உடைகளையும் ஒரு பெரிய பேக்கில் வைத்திருப்பார். அது எப்போதும் காரிலே இருக்கும். அதில் இருந்து பழைய துணிகளை மட்டும் வெளியே எடுத்துவருவார். அவைகளை துவைக்கபோட்டு விட்டு புதிய துணிகளை அதில் கொண்டுபோய் வைத்துவிடுவார். அந்த பேக்கை வீட்டிற்குள் எடுத்துவரமாட்டார். அது கார் டிக்கியிலேதான் இருக்கும்.

அன்று அவர் விளையாட்டு பயிற்சி முடிந்ததும் வியர்வை நிறைந்த துணிகளை எல்லாம் துவைப்பதற்காக அள்ளிக்கொண்டுவந்து போட்டார். அதில் பெண்ணின் ‘பிரா’ ஒன்று கிடந்தது. அதை அவள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. கணவரிடமும் அதுபற்றி கேட்கவில்லை.

அவளது தங்கை இன்னொரு ஊரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி, வக்கீலுக்கு படித்துக்கொண்டிருக்கிறாள். விடுமுறை நாளில் அவள், அக்காளின் வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது தனது கணவரை பற்றிய சுவாரசியமான விஷயங்களை அவள் தங்கை யிடம் பகிர்ந்துகொண்டிருந்தபோது, அந்த பிரா விஷயத்தையும் சொன்னாள். அதோடு காருக்குள்ளே இருக்கும் பெரிய பேக் பற்றியும் சொல்லி வைத்தாள்.

தங்கைக்கு கார் ஓட்டத்தெரியும். அடுத்த நாள் இரவில் தாமதமாக வந்த அக்காளின் கணவர் தூங்கச்செல்ல, இவள் மட்டும் ரகசியமாக கார் சாவியை எடுத்துக்கொண்டு போய், டிக்கியை திறந்து அந்த பேக்கை துழாவினாள். அங்கேயே நாலைந்து வெளிநாட்டு தயாரிப்பு ஆணுறைகளும், மது பாட்டில்களும், லிப்ஸ்டிக்கும் இருந்தன.

உடனே அவள் பிராவையும், ஆணுறையையும், லிப்ஸ்டிக்கையும் முடிச்சுபோட்டுபார்த்தாள். அக்காவின் கணவர் ஏதோ தவறான தொடர்பில் இருக்கிறார் என்பது அவளுக்கு புரிந்துவிட்டது.

அடுத்த சில வாரங்களில் அவர்களது ஊரில் கோவில் திருவிழா. அக்காள் தனது கணவரையும் திருவிழாவுக்கு வரும்படி அழைத்தாள். அவர், அவளை மட்டும் முதலில் போகசொல்லிவிட்டு, தான் மறுநாள் வருவதாக சொன்னார். இந்த விஷயத்தை அவள், தனது தங்கையிடம் சொல்லிவிட்டு ஊருக்கு தனியாக சென்றுவிட்டாள்.

பொதுவாக ஆண்கள் மனைவி ஊரில் இல்லாத நாளில்தான் தப்புதண்டா செய்வார்கள் என்பதை உணர்ந்த தங்கை, அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டாள்.

தனது அக்காள் ஊரில் இல்லாத அன்று, தனது தோழியின் காரை ஓட்டிக்கொண்டு தனியாக அக்காள் கணவரின் அலுவலகத்தை நோக்கி விரைந்தாள். அவரது காரை ரகசியமாக பின்தொடர முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை. கார், அவளைதாண்டி எங்கோ சென்றுவிட்டது. இரவாகிவிட்டது. தனது முதல் முயற்சி தோல்வியடைந்தபோதும், அவள் பின்வாங்கவில்லை.

அடுத்து அக்காள் கணவரின் வீட்டை நோக்கி காரை ஓட்டினாள். அப்போது திடீரென்று அவரது கார் எங்கிருந்தோ வந்து அவளை முந்திக்கொண்டு கடந்துபோனது. மீண்டும் பின்தொடர்ந்தாள். கார், அவரது வீட்டின் முன்பு போய் நின்றது. ஒரு பெண்ணுடன் அவர் இறங்கி, வீட்டிற்குள் சென்றார்.

சில நிமிடங்கள் கழித்ததும் இவள் வீட்டின் அருகில் காரை நிறுத்திவிட்டு, இறங்கி வீட்டை நோக்கி நடந்து, கதவை தட்ட, கதவைத் திறந்த அக்காள் கணவர் இவளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவளை வீட்டிற்குள்ளே அனுமதிக்காமல் சிரித்து பேசி, அவளை கிளப்பி விடும் மனநிலையில் இருந்திருக்கிறார்.

இவள், ‘ஊருக்கு போகும் வழியில் காரில் இங்கே வந்தேன். அவசரமாக பாத்ரூம் செல்லவேண்டும்’ என்றபடி அவரை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய, உள்ளே யாரும் இல்லை. அந்த பெண் எங்கேபோனாள் என்று தேடியபடி பாத்ரூமுக்குள் நுழைய அங்கே அவள் ஒளிந்திருப்பது தெரிந்திருக்கிறது.

அவர் கையும், களவுமாக சிக்கிக்கொள்ள ‘இதை யாரிடமும் சொல்லிவிடாதே. எங்கள் குடும்ப மரியாதை போயிடும். என்னை முழுமையாக நம்பும் உன் அக்காளும் மனதொடிந்து போய்விடுவாள். என் மானத்தைக் காப்பாற்று. இனிமேல் இ்ந்த தப்பை செய்யமாட்டேன்’ என்று கையெடுத்து கும்பிட்டிருக்கிறார். அந்த பெண்ணை தனது செல்போனில் படம் எடுத்துவிட்டு, இவள் விரட்டிவிட்டிருக்கிறாள்!

இப்படி உளவு பார்த்து, கையும் களவுமாக பிடிக்கும் மைத்துனிகளும் இருப்பதை ஆண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- உஷாரு வரும்.