உலக கோப்பையை வென்ற கபடி வீரர்


கபடி போட்டியில் கிடைத்த வெற்றிக்கோப்பைகளுடன் தனராஜ்; தாயார் உமாதேவியின் அன்பு முத்தம்
x
கபடி போட்டியில் கிடைத்த வெற்றிக்கோப்பைகளுடன் தனராஜ்; தாயார் உமாதேவியின் அன்பு முத்தம்
தினத்தந்தி 18 Aug 2019 8:50 AM GMT (Updated: 18 Aug 2019 8:50 AM GMT)

வடக்கு சாலைக்கிராமம். இந்த குக்கி ராமம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அங்கே 100 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஏழை மக்களைகொண்ட இந்த கிராமத்தில், சமீபத்தில் திருவிழா கொண்டாட்டமாக கரைபுரண்ட உற்சாகத்தோடு ஊரே திரண்டு வந்து ஒருவருக்கு வரவேற்பு கொடுத்தது. அந்த வெற்றி நாயகன் பெயர் தனராஜ். அவர் உலககோப்பையை வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்றவர். தங்கள் கிராமத்தை சேர்ந்தவர், கபடியில் தங்கப்பதக்கம் வென்றதால், அந்த கிராம மக்கள் அவ் வளவு உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்பு கொடுத்தனர்.

தனராஜின் பெற்றோர், பாலு-உமாதேவி. இவர்கள் கூலித்தொழிலாளிகள். 27 வயது நிரம்பிய எம்.பி.ஏ. பட்டதாரியான தனராஜ் கிராமத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்திசெய்துவிட்டு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

தனக்கு கபடி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது பற்றி தன்ராஜ் சொல்கிறார்:

‘‘நான் 12 -வயதில் இருந்து கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டிவந்தேன். பள்ளிவிட்டு வந்ததும் விளையாட சென்றுவிடுவேன். ஆனால் வீட்டில் ஏழ்மை தலைவிரித்தாடியதால் மாலை நேரங்களில் நான் ஏதாவதொரு வேலைக்கு சென்றால் குடும்ப செலவுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர். அதனால் நான் விளையாட எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் நான் தொடர்ந்து விளையாடி பரிசுகள் பெற்றேன்.

16 வயதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழக அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டேன். போட்டிக்களத்தில் என் திறமையை நிரூபித்து தங்கப்பதக்கம் பெற்று எனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டேன். கல்லூரி பருவத்தில் 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக அணிக்காக விளையாடினேன். அப் படியே படிப்படியாக முன்னேறினேன்” என்று கூறும் தனராஜ், இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்ற தருணத்தை நினைவு கூர்கிறார்.

‘‘கடந்த ஆண்டு இந்திய கபடி அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி பெங்களூரு, மைசூரு, புனே ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் இடம்பெற்ற 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வுபோட்டியில் கலந்துகொண்டனர். அதில் அதிக தன்னம்பிக்கையுடன் விளையாடி, இந்திய கபடி அணிக்கு தேர்வானேன். அந்த தருணம் உணர்ச்சிபூர்வமானது. இந்திய அணிக்காக 12 பேர் தேர்வு செய்யப்பட்டோம். அதில் தமிழ்நாடு சார்பில் நானும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அம்பேஸ்வரன், நெல்லையை பூர்வீகமாக கொண்ட ஆறுமுகம் ஆகியோர் தேர்வு பெற்றோம். இதில் ஆறுமுகம் இந்திய கபடி அணியின் கேப்டனாக செயல்பட்டார். தேர்வு செய்த உடனே உலக கோப்பை கபடி போட்டியில் பங்கேற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாது’’ என்கிறார்.

உலக கோப்பை கபடி போட்டி கடந்த ஜூலை மாதம் மலேசியாவில் உள்ள மலாக்கா என்ற இடத்தில் நடைபெற்றது. 16 நாடுகள் கலந்துகொண்டன. அதில் பாகிஸ்தானுடன் மோதியது மிகுந்த விறுவிறுப்பாக இருந்திருக்கிறது.

“அந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதில் என் பங்கும் இருந்தது. அரையிறுதி போட்டியில் நாங்கள் தைவான் அணியுடன் மோதி அமோக வெற்றிபெற்றோம். இறுதிப்போட்டியில் ஈராக்கை 57-27 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றோம். மக்கள் எனக்கு மறக்கமுடியாத வரவேற்பை தந்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கபடியும் இடம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதில் இந்திய அணி விளையாடினால் எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்’’ என்கிறார்.

தனராஜ் கபடியில் பதக்கங்களையும், பரிசுகளையும் வாங்கி குவித்தாலும் அவருக்கு தனது குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.

“வறுமையை போக்கும் வகையில் எனக்கு அரசு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விளையாட்டு துறையில் அதிக அளவில் வீரர்கள் உருவாகுவதற்கு அவர்களது வாழ்க்கை தரமும் உயர வேண்டும். அப்போதுதான் சாதனைகளும், பதக்கங்களும் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கும்’’ என்கிறார்.

தனராஜின் தயார் உமாதேவி பேச்சிலும் வருத்தம் எட்டிப்பார்க்கிறது. ‘‘தனராஜ் விளையாட்டில் கவனம் செலுத்தினால் படிப்பில் கோட்டை விட்டுவிடுவான் என்று பயந்தோம். அதனால் கபடி போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக சிறுவயதில் வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்து விட்டு நாங்கள் கூலி வேலைக்கு செல்வோம். ஆனால் நாங்கள் திரும்பி வந்து பார்க்கும் போது அவன் வீட்டின் ஓட்டை பிரித்து விட்டு போட்டிக்கு சென்று விடுவான். நாங்கள் கோபத்தில் இருக்கும்போது அவன் பரிசு கோப்பையுடன் வருவான். ஆரம்பத்தில் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தோம். ஆனால் தற்போது எனது மகன் இந்திய அணியில் விளையாடி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அவனுக்கு நிரந்தர வேலை கொடுக்க முன்வர வேண்டும்’’ என்கிறார்.

Next Story