சிறப்புக் கட்டுரைகள்

உலகின் முதல் கப்பற்படையை உருவாக்கிய சோழ மன்னன் + "||" + Chola king who developed the world's first shipping fleet

உலகின் முதல் கப்பற்படையை உருவாக்கிய சோழ மன்னன்

உலகின் முதல் கப்பற்படையை உருவாக்கிய சோழ மன்னன்
இந்திய நாட்டின் மீது அந்நியர்கள் பலர் தொடர்ந்து படையெடுத்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தியதை வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தில் ஐந்து நூற்றாண்டு காலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்கள் கடல் கடந்து சென்று தமிழர்களின் வீரத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டியதை வரலாற்றின் ஒரு சிறிய நிகழ்வாகவே குறிப்பிடுகின்றன.
சோழப்பேரரசின் மிகச்சிறந்த மன்னராக விளங்கிய முதலாம் ராஜராஜன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் உலகமே வியக்கும் வண்ணம் மிக உயர்ந்த கோவிலை குறுகிய காலத்திற்குள் கட்டிவித்து திறமையான உள்ளூர் நிர்வாகத்தால் பெரும் பெயர் பெற்றான். தந்தை ராஜராஜனுக்கு இணையாக உலகம் போற்றும் மகனாக திகழ்ந்தவர் முதலாம் ராஜேந்திர சோழன். சிவசரணசேகரன், பூம்புகார்த் தலைவன், செங்கோல் வளவன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் பல பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டவர் ராஜேந்திர சோழன். ஆடித் திருவாதிரைத் திருநாளில் பிறந்த ராஜேந்திர சோழன் மட்டுமே இந்திய அரசர்களில் கடல் கடந்து சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மன்னர் ஆவார். தந்தை ராஜராஜனின் வலக்கரமாக விளங்கிய ராஜேந்திர சோழன் 1012-ம் ஆண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். இரண்டு ஆண்டுகள் தந்தையிடம் ஆட்சி நிர்வாகத்தை கற்றுக்கொண்ட ராஜேந்திர சோழன் எப்போதும் படை வீரர்களுடன் தனது காலத்தை கழித்தார். இதனால் செழிப்பு மிகு தஞ்சையை விடுத்து வறண்ட நிலப் பகுதியான கங்கை கொண்ட சோழபுரத்தில் தலைநகரை உருவாக்கினார். இப்பகுதியில் இவரது படையில் வீரர்கள் அதிகம் இருந்தனர். வெற்றி நகரமாக கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கி எழிலார்ந்த சிவன் கோவிலொன்றையும் சோழகங்கம் என்ற ஏரியையும் இந்நகரில் உருவாக்கினார்.

இலங்கையில் சோழர் ஆட்சியை நிலைநாட்டியதுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீன எல்லை வரை சோழப்பேரரசின் ஆதிக்கத்தை ஏற்படுத்த உலகின் முதல் கடற்படையை தோற்றுவித்த பெருமை ராஜேந்திர சோழனைச் சாரும். இப்பொழுது கோரமண்டல் என குறிக்கப்படும் வங்களா விரிகுடா சோழர்களின் ஏரி என அக்காலத்தில் வழங்கப்பட்டது. சோழமண்டல கடற்கரையே பின்னர் தவறாக கோரமண்டல கடற்கரை ஆனது.

ராஜேந்திர சோழன் கடல் கடந்து சோழர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக ஆட்சிப்பொறுப்பேற்ற சில ஆண்டுகளில் சோழப் படைகளுக்கு தலைமையேற்று தமிழகத்தின் வடபகுதியிலிருந்த அரசுகள் மீது படையெடுத்தார். முதலில் கர்நாடக பகுதியிலிருந்த இரட்டபாடி, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மானியக்கடகம் ஆகிய பகுதிகளில் இருந்த அரசுகளை வென்று சோழரின் மேலாண்மையை ஏற்கச் செய்தார். இவரது படையில் ராஜராஜனின் தளபதியாக இருந்து தஞ்சாவூர் கோவிலின் திருச்சுற்று மாளிகையை முழுவதுமாக கட்டிய கிருஷ்ணன் ராமன் படைத்தளபதியாக செயலாற்றினார். ராஜேந்திர சோழரின் படைகள். ஆந்திர பகுதியின் துங்கபத்திரை நதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட இடைதுறை நாட்டை கைப்பற்றினார். சாளுக்கிய படைகளைத் தோற்கடித்து மேலும் முன்னேறிய ராஜேந்திர சோழனின் படைகள் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்த அரசுகளையும் வெல்லத்திட்டமிட்டன.

இதற்கு இடையில் சோழரின் கடற்படை இலங்கை மீது படையெடுத்து ஐந்தாம் மகிந்தன் என்ற மன்னரை வீழ்ச்சியுற செய்தது. தனது தந்தை ராஜராஜன் காலத்தில் இலங்கை வீழ்த்தப்பட்டிருப்பினும் ஐந்தாம் மகிந்தன் சோழரின் ஆதிக்கத்திற்கு எதிராகப் படைகளைத் திரட்டியதை அறிந்த ராஜேந்திரன் அம்மன்னனை வீழ்த்த கடற்படையை ஏவினார். ஐந்தாம் மகிந்தன் சோழரின் படைகளைக் கண்டு பயந்து காட்டில் ஒளிந்து கொண்டார். ராஜேந்திர சோழனின் வட இந்திய படையெடுப்பு மீண்டும் தொடர்ந்தது. கலிங்க நாட்டை கடந்து ஒட்டர தேசம், கோசல நாடு, தண்டபுக்தி ஆகிய நாடுகளின் அரசுகளை அடிபணியச் செய்தது. வங்காள நாட்டை ஆட்சி செய்த கோவிந்த சந்தன் என்ற மன்னன் சோழரின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்தார். உத்தர லாடத்தை ஆட்சி செய்த மகிபாலனை வென்று சோழர் படைகள் கங்கையை அடைந்தது. தோல்வி கண்ட மன்னர்களை கங்கை நீரைக் கொணரச் செய்து அந்நீரினைக் கொண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தைப் புனிதமடையச் செய்தார் மன்னர் ராஜேந்திரன். வட இந்திய படைகளுடன் தாயகம் திரும்பிய ராஜேந்திரனின் படைகளை கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் திரைலோகி என்ற இடத்தில் மக்கள் வெற்றி முழக்கமிட்டு வரவேற்று பெருமை சேர்த்தனர்.

ராஜேந்திர சோழனின் கடல் கடந்து சென்ற கடாரப் படையெடுப்பு 1026-ம் ஆண்டு தொடங்கியது. ராஜேந்திரன் கடற்படை பல கப்பல்களையும், சிறிய படகுகளையும் கொண்ட பெரும்படையாகும். இவரது கடற்படை கிழக்கு கடற்கரையில் பல துறைமுகங்களில் இருந்து செயல்பட்டன. குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகம் முதன்மைக் கடற்கரைத் துறைமுகமாக விளங்கியது. காவேரிப்பூம்பட்டினம் துறைமுகமும் இம்மன்னனின் காலத்தில் முக்கிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இவரது பட்டப்பெயரான “பூம்புகார்த் தலைவன்” இதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கேடா அல்லது கடாரத்தை ஆட்சி செய்த சங்கராம விஜயதுங்க வர்மன் ராஜேந்திரனின் கப்பற்படைகளுக்கு முன் அடிபணிந்ததுடன் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட மன்னராக நட்பு பாராட்டினார்.

ஸ்ரீவிஜயம் (சுமத்ரா), பண்ணை (பானிசுமத்ராவின் கிழக்கு பகுதி), மலையூர் (மலேயா), மாயிருடிங்கம் (மலேயாவின் நடுப்பகுதி), லங்கசோகம், மாப்பாளம் (பர்மா), மேவிளம்பகம், வளைப்பந்துரு (பாலம்பெங்பகுதி), தலைத் தக்கோலம் (தக்கோபா), மாடமாலிங்கம், இலாமுரி தேசம் (சுமத்ராவின் வடக்கு பகுதி), மாநக்காவரம் (நிக்கோபார்) ஆகிய பகுதிகளை சோழர் கடற்படை கைப்பற்றியது.

ராஜேந்திர சோழன் பல கப்பல்களை கடலில் செலுத்தி மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளிலும் சோழர் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அம்மன்னர்களுடன் நட்புறவுடன் நடந்து கொண்டமை அவரது ஆட்சி நிர்வாகத்திறமையை எடுத்தியம்புகிறது. கடல் கடந்து வெற்றி பெற்ற நாடுகளில் நேரிடை ஆட்சி செய்வது என்பது இயலாத காரியம் என நன்கறிந்த மன்னர் ராஜேந்திர சோழன். எனவே அம்மன்னர்களை அடிபணியச் செய்து ஆட்சியை அவர்களிடமே ஒப்படைத்தார். இவ்வனைத்து வெற்றிகளையும் சேர்த்து கடாரம் கொண்டான் என பட்டம் பெற்றார். இப்பெயரை அவர் மதிப்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் தமிழர்கள் முதன் முதலில் வணிகர்களாகவும், பணியாளர்களாகவும் குடியேறிய பகுதி கடாரம் ஆகும்.

இத்துறைமுக நகரம் இன்றைய பினாங்கு நகருக்கு வெகு அருகில் உள்ளது. இப்பகுதியில் தாதுப் பொருள்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் காழகம் என வழங்கப்படும் துறைமுக நகரம் இதுவே ஆகும். அக்காலத்தில் தமிழ் வணிகர்களும் இரும்பையும், பொன்னையும் வெட்டி தாதுப்பொருள்களையும், கருவிகளையும் உருவாக்கும் கலையை தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். காழகத்துப் பொன் உலகெங்கிலும் பேசப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் கடல் வாணிகம் மேற்கொண்டனர்.

இத்துறைமுகம் மலைகள் சூழ்ந்த பாதுகாப்பு பகுதியில் இருந்த மிகச் சிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது.

சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் செல்லும் கப்பல்கள் இத்துறைமுகம் வழியாகவே சென்று வந்தன. சங்க காலம் முதல் தமிழர்களின் கடல்வாணிகம் சிறந்த நிலையில் இப்பகுதியில் நிலவி வந்தது. 11-ம் நூற்றாண்டில் இப்பகுதியில் சீன வணிகர்களின் அச்சுறுத்தல்கள் மிகுந்தன. தமிழ் வணிகர்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இதனால் பல இன்னல்கள் நிகழ்ந்தன. ஸ்ரீவிஜயத்தை ஆண்ட அரசர்களும் சீன அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்க மாமன்னன் ராஜேந்திரன் பெரும் கப்பற்படையை உருவாக்கி இவ்வரசுகளை அடிபணியச் செய்து தமிழர்களுக்கும், தமிழ் வணிகர்களுக்கும் ஆதரவு நல்கினார். உலகத் தமிழரின் வாழ்வு சிறக்க கடற்படையைத் திரட்டி பார் போற்றும் மன்னராக இன்றளவும் விளங்கி வருபவர் ராஜேந்திர சோழன்.

- சு.ராஜவேலு, பேராசிரியர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.