சிறப்புக் கட்டுரைகள்

குறையும் கார் விற்பனை: பொருளாதார சுணக்கத்தின் அறிகுறியா? + "||" + Declining car sales: a sign of economic downturn?

குறையும் கார் விற்பனை: பொருளாதார சுணக்கத்தின் அறிகுறியா?

குறையும் கார் விற்பனை: பொருளாதார சுணக்கத்தின் அறிகுறியா?
கடந்த சில மாதங்களாக கவனத்திற்கு உள்ளாகிவரும் ஒரு தகவல், நம் நாட்டில் கார் மற்றும் வண்டிகள் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது என்பதுதான்.
கார் வண்டிகள் என்றால், சொந்த பிரயாணங்களுக்கான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர், மொபட் போன்ற ‘பயணிகள் வாகனங்கள்’ மற்றும் லாரி, டிரக், பேருந்து, ஆட்டோ போன்ற வியாபாரத்துக்கான, ‘வியாபார வாகனங்கள்’.

இரண்டு வகை வாகனங்களின் உள்நாட்டு விற்பனையுமே கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மோட்டார் வாகனங்கள் துறையின் சுணக்கம் என்பது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது.

சிலர், ‘பெரிய அளவில் விற்பனை சுணக்கம் எல்லாம் இல்லை’ என்றும், முன்பு மிக அதிக அளவில் வாங்கச்சொல்லி உற்பத்தியாளர்கள், டீலர்களைக் கட்டாயப்படுத்தினார்கள். ‘அடமானம் இல்லாத கடன்’ தாராளமாக கிடைத்த காரணத்தால் டீலர்களும் வாங்கி அவர்கள் இடங்களில் நிறுத்திக்கொண்டார்கள்.

அப்படி கூடுதலாக வாங்கி வைத்துக்கொண்டதில் ஒரு பகுதி டீலர்களிடம் தேங்கிவிட்டது. தவிர, ஐ.எல்.எப்.எஸ். பிரச்சினைக்கு பின், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் முன்பை போல அடமானம் இல்லாத கடன் கிடைப்பதில்லை. இவற்றின் காரணமாக டீலர்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் அளவை கடந்த சில மாதங்களாக சற்றே குறைத்திருக்கிறார்கள்.

ஒரு நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் கடந்த ஓராண்டில் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தாததால், கார்களின் மீது மோகம் கொண்ட வசதிபடைத்தவர்களும் கூட 2020-க்கு பிறகு வெளிவரவிருக்கும் புதிய மாடல் வண்டிகளுக்காக காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் என்கிறார்கள். ஆனால், புள்ளிவிவரங்கள் நிச்சயம் அச்சமூட்டுவதாகத்தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத மொத்த விற்பனையைக் (ஹோல்சேல்) காட்டிலும் இந்த 2019 ஏப்ரலில் மொத்தமாக வண்டிகள் விற்பனை 16 சதவீதம் குறைவு. அதே வகையில், மே, ஜூன் மாதங்களிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் எல்லா வாகனங்களும் சேர்த்து விற்பனை, 22 லட்சத்து 45 ஆயிரத்து 223. இந்த ஜூலை மாதம் 18 லட்சத்து 25 ஆயிரத்து 148 தான். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனையைக் காட்டிலும் 4 லட்சத்து 20 ஆயிரம் வண்டிகள், அதாவது பதினெட்டே முக்கால் சதவீதம் குறைவு.

குறிப்பாக கடந்த 12 மாதங்களாக விற்பனை தொடர்ந்து இறங்கு முகம். அதுவும் இரட்டை இலக்கில். விற்பனை குறைந்து வருவதற்கான காரணங்களாக பலவும் சொல்லப்படுகின்றன.

பொதுவாகவே மக்களிடம் ‘வாங்கும் சக்தி’ குறைந்திருக்கிறது. அவர்களிடம் போதிய பணம் இல்லை; நாட்டில் வாகனங்கள் வாங்குவோரில் 100-க்கு 70 பேர் கடன் வாங்கித்தான் வாங்குகிறார்கள். தாராளமாக கடன் கொடுக்கும் அளவு பொதுத்துறை வங்கிகளிடம் பணம் இல்லை என்பது ஒரு தரப்பினர் சொல்லும் காரணம்.

மேலும், பெருநகரங்களில் சாலை போக்குவரத்தில் அதிகரித்திருக்கும் வாகன நெரிசல்கள், பார்க்கிங் சிக்கல்கள், கூடவே எளிதாகியிருக்கும் ஓலா, ஊபர், ரெட் போன்ற வாடகை கார் வசதிகள், மெட்ரோ ரெயில் போன்ற புதிய சேவைகள் ஆகியவற்றால் முன்பெல்லாம் வாங்கியது போல, நடுத்தர வர்க்க மக்களில் ஒரு பகுதியினர் கொஞ்சம் வசதி வந்ததும் அவர்களது முதல் காரை வாங்க ஆர்வமாக இல்லை.

உச்சநீதிமன்றம், வண்டிகள் வாங்கும்போது மூன்றாண்டுகளுக்கு காப்பீடு எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, அதனால் புது வண்டிகளின் ‘ஆன் ரோட்’ விலை உயர்ந்திருக்கிறது.

தவிர, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வண்டிகள் கூடாது என்று சட்டம் விரைவில் வந்துவிடும் என்கிற அச்சம் பரவியிருக்கிறது. அதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் 6 என்ற மாசுக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் உயர்நிலையில் தயாரிக்கப்படும் வண்டிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று வண்டிகள் வாங்குவதை பலரும் தள்ளிப்போடுகிறார்கள்.

மின்சார எரிபொருளில் ஓடும் வண்டிகள் வாங்க பெறும் கடனுக்கான வட்டித்தொகையில், லட்சத்து 50 ஆயிரம் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்குமென்பதால், பேட்டரி மின்சாரத்தில் ஓடவிருக்கும் வண்டிகள் வரட்டும், வாங்கிக்கொள்ளலாம் என்று வேறு சிலர் காத்திருக்கிறார்கள்.

இப்படியாக பல்வேறு யூகங்கள், காரணங்கள் எதுவாகவும் இருக்கட்டும். விளைவுகள் என்ன? விவசாயத்துக்கு அடுத்தபடியாக பலருக்கும் வேலைவாய்ப்பு தருவது உற்பத்தித்துறைதான். கார், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், லாரிகள், டிராக்டர்கள், டிரக்குகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றுக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் டீலர் நிறுவனங்கள், உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்கள் என்று ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்த தொழில்-வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

சுமார் 3.7 கோடி பேர் நேரடியாகவோ வேறு விதங்களிலோ இந்த துறையில் வேலை செய்கிறார்கள். இளைஞர்கள் பலரும் இந்த துறையில் வேலை மற்றும் வியாபார வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கிறார்கள். இப்போதைய விற்பனை குறைவு காரணமாக பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ‘பாரத் ஸ்டேஜ் 6’ என்கிற உயர் தரத்தில் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களும் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறார்கள். போதாதற்கு வண்டிகள் பதிவு கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலைகளில் விற்பனை சரிவை நிறுத்தவும், அதன் மூலம் பலரும் வேலை இழப்பதை தவிர்க்கவும் அரசு உதவி நிச்சயம் வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேட்கிறார்கள்.

குறிப்பாக வாகனங்களுக்கும், அதன் உதிரி பாகங்களுக்கும் 28 சதவீதத்துக்கு பதிலாக 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை, குறிப்பிட்ட காலத்திற்காகவாது குறைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படி செய்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அரசு எப்படிப்பட்ட முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை.

பல ஆண்டுகளாக நல்ல விற்பனையையும், தொடர் வளர்ச்சியையும் பார்த்த இந்திய மோட்டார் வாகனத்துறை, புதிய மாசு கட்டுப்பாடு விதிமுறைகள், உயர்த்தப்பட்ட பாதுகாப்பு தேவைகள், தொடர்ந்து குறைந்து வரும் டீசல் வண்டிகள் விற்பனை, மின்சார பேட்டரி வண்டிகள், ஓலா, ஊபர் போன்ற புதிய போக்குவரத்து வசதிகள் மற்றும் ‘சந்தாதாரர் முறை’ எனும் புதிய வாகன பயன்பாட்டு முறை போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் ‘அசைத்துப் பார்த்தல்’ எனும் ‘டிஸ்ரப்ஷன்’, என பல்வேறு சவால்களை ஒரு சேர எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

- டாக்டர் சோம வள்ளியப்பன்