சிறப்புக் கட்டுரைகள்

லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும் “டோப்பமின்” + "||" + Dopamine, which makes the journey towards ambition

லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும் “டோப்பமின்”

லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும் “டோப்பமின்”
நீங்கள் எப்போதாவது உற்சாகம் குறைவாக, குழப்பமாக, தனிமையாக, பிரிவுத்துயரில் இருப்பது போன்று உணர்ந்தது உண்டா? இதற்கு மூல காரணம் ரசாய மாற்றங்களே.
டோப்பமின் (Dopamine) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ரசாயனங்களே லட்சியம், அன்பு பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய செயல்களில் பங்கெடுக்கின்றன.

நம் உடம்பில் ஏற்படும் உணர்வுகளும் உணர்ச்சிகளும், உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவுகள் தான் என்பது நாம் அறிந்ததே.

ஒரு கடினமான வேலையை நன்கு செய்து நாம் அடைய வேண்டிய இலக்கை அடைந்து முடித்தவுடன் கிடைக்கும் திருப்திக்கு காரணம், டோப்பமின் அவசரமாக உற்பத்தியாவது தான்.

சில ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி டோப்பமின் அதிகம் சுரப்பதால் நமது லட்சியங்களும் அதிகரிக்கும். உதாரணமாக டோப்பமின் அதிகம் செலுத்தப்பட்ட அல்லது உட்கொண்ட எலிகள் மிக அதிக உயரத்தில் இருந்த உணவுக் குவியலை தேர்வு செய்து அதிக உயரம் ஏறின. டோப்பமின் குறைவாக இருந்த எலிகள் சிறிய குவியல் உணவையே தேர்வு செய்தன. நம் மூளையின் வேலை செய்யும் திறனை இயக்குவதில் ஒரு சக்தி இயக்கியாக டோப்பமின் செயல்படுகிறது.

டோப்பமின் இல்லாமல் போனால் நாம் சாந்தமான ஒரு மிகச் சாதாரண மனிதராக ஆகி விடுவோம். ஏனெனில் டோப்பமின் நமது நடவடிக்கைகளுக்கும் உறவுகளுக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட உறவுகளுக்கும் முக்கிய விசையாக விளங்குகிறது.

“சந்தோஷத்தின் மூலக்கூறு” என்று அழைக்கப்படும் டோப்பமின், பல விஞ்ஞான விளக்கங்களுக்கு காரணியாக உள்ளது. குறிப்பாக ஏன் நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதற்கும், ஒரு சந்தோஷத்தை நாம் அனுபவிக்கும் போதும், நம்மில் டோப்பமின் செயல்பாடு தெரிகிறது.

ஒரு சந்தோஷமான, இன்பம் தரும் தருணங்களிலும் சூழ்நிலைகளிலும் இந்த டோப்பமின் வெளியிடப்படுகிறது. இதனால், ஒரு மனிதனை அவனுக்கு விருப்பம் தரும் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட வைக்கிறது. உதாரணமாக நமக்குப்பிடித்த உணவை விரும்பிச்சாப்பிடுவது, அல்லது நாம் விரும்பிய செயல்களை ஆர்வத்துடன் செய்து போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலும், நம் உடம்பில் உணர்வுகளின் விழிப்பையும், எச்சரிக்கை தன்மையையும் கட்டுப்படுத்த டோப்பமின் மிகவும் உதவுகிறது.

நல்ல ஓய்வு கொண்டவர்களையும் தூக்கமின்றி தவிப்பவர்களையும் ஆராய்ந்தபோது தூக்கம் இழந்து தவித்தவர்களின் டோப்பமின் ஏற்பிகளில் டோப்பமின் அளவு குறைந்திருப்பது காணப்பட்டது. நம் உடலின் இயக்கத்தையும் ஒருவகையில் அது கண்காணிக்கிறது.

மூளையில் டோப்பமின் அளவு குறைவாக இருப்பின் நம் உடல் முழுவதும் ஒருங்கிணைக்கப்படாத வகையில் நமது உடலின் இயக்கம் இருக்கும். இந்த பட்டியல் இத்துடன் நிற்கவில்லை. டோப்பமின் நமது ஒருங்கிணைந்த வேலைத் திறனை மேம்படுத்துகிறது, டோப்பமின் நமது ஞாபக சக்தியைப் பாதிப்பதால் நமது கற்றல் திறனும் நம் மூளையின் தகவலை தக்க வைக்கும் திறனையும் பாதிக்கிறது.

ஒரு நிகழ்வோ அல்லது அனுபவமோ நமக்கு நடக்கும் பொழுது டோப்பமின் இருந்தால் நம்மால் அந்த நிகழ்வையோ அனுபவத்தையோ நன்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். டோப்பமின் இல்லாமல் போனால் நாம் அந்த நிகழ்வை மறந்து விடுவது சாத்தியமே.

நம் மூளை என்னும் வெகுமதி தரும் மையத்தில் டோப்பமின் கட்டி வைக்கப்படுவதால் நம்மால் நமக்கு பிடிக்காத சில நடவடிக்கைகளையோ பிடிக்காத சில பாடங்களையோ ரசிக்காத போது டோப்பமின் அளவு குறையக்கூடும். ஆகவே நம்மால் பலதரப்பட்ட விவரங்களை மனதில் நிறுத்திக் கொள்ள விருப்பம் இல்லாமல் போகும்.

நம் உடலில் வேறு பல ரசாயனங்களும் நமது உணர்வு களுக்கு தாக்கம் விளைவிக்கின்றன. ஆனால் டோப்பமின் மற்றும் ஆக்சிடோசின் மட்டுமே மனிதர்களின் அன்றாட வாழ்வில் செல்வாக்கு மிகுந்த காரணிகளாய் திகழ்கின்றன.

முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.