மற்றொரு கோளை விழுங்கிய வியாழன் கிரகம்!


மற்றொரு கோளை விழுங்கிய வியாழன் கிரகம்!
x
தினத்தந்தி 19 Aug 2019 10:11 AM GMT (Updated: 19 Aug 2019 10:11 AM GMT)

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல ரகசியங்களையும், ஆனால் அதேசமயம் பல ஆபத்துகளையும் கொண்டது.

விண்வெளிக்குள் சென்று அந்த பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிந்தால்தான், நம் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய பல ஆபத்துகளைக் கண்டறிவது மட்டுமல்லாமல் அத்தகைய ஆபத்துகளில் இருந்து நம் பூமியை நாம் பாதுகாக்கவும் முடியும்.

நம் பிரபஞ்ச ரகசியங்களுள் முக்கியமானவை பூமியைப் போன்ற கோள்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பல அறிவியல் தகவல்கள். கோள்களின் தோற்றம்/வளர்ச்சி குறித்த அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்வதால் அல்லது சேகரிப்பதால் என்ன நன்மை என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். ஏராளமான நன்மைகள் உண்டு.

உதாரணமாக, நம் பூமி குறித்த லட்சக்கணக்கான ஆய்வுகளை பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட காரணத்தால்தான் தங்கம், வெள்ளி, இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்களைக் கண்டறிந்து, அவற்றின் உதவியுடன் இன்று விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் மனிதன் கொடிகட்டிப் பறக்கிறான்.

அதுபோலவே, பூமி தவிர்த்த இதர கிரகங்களிலும் என்னென்ன கனிம வளங்கள் இருக்கின்றன என்று கண்டறிவதன் மூலம் வேற்று கிரகங்களில் மனித வாழ்க்கை சாத்தியமா அல்லது நம் பூமியைப்போல பெரிய ஆபத்துகள் இல்லாமல் அங்கு நூற்றாண்டுகள் பல மனிதனால் தொடர்ந்து வாழ்ந்து சிறக்க முடியுமா உள்ளிட்ட உண்மைகளைக் கண்டறிய முடியும்.

விண்வெளியில் சென்று ஆய்வுகள் செய்யும் நவீன ராக்கெட்டுகள், விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஆகியவை அசுர வளர்ச்சி கண்டு வெகுவாக மேம்பட்டிருக்கும் இந்த காலத்தில், வேற்று கிரகங்களை முழுமையாக ஆய்வு செய்வது சற்றே சுலபமாகி வருகிறது.

அத்தகைய தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான கிரகங்களில் ஒன்றுதான் வியாழன் ( Jupiter) . ஏனெனில், பூமியைப்போல் மிகவும் கடினமான மற்றும் உறுதியான பாறைகளால் ஆன மையப்பகுதி கொண்டதாக அல்லாமல், ஹைட்ரஜன் வாயுவால் ஆன முட்டைகள் நிறைந்த வினோதமான பாறைகளைக் கொண்டது வியாழன் கிரகத்தின் மையப்பகுதி (Core) என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை.

தற்போது வியாழன் கிரகத்தைச் சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொண்டு, வியாழன் கிரகம் குறித்த அரிய பல உண்மை/தகவல்களை சேகரித்து வரும் ஜூனோ விண்கலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை ஜப்பான், சீனா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வானவியலாளர்கள் அடங்கிய ஒரு சர்வதேச ஆய்வுக்குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில், அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை அந்த ஆய்வுக்குழு சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

அது என்னவென்றால், சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வியாழன் கிரகத்துக்கும் வேறு ஒரு கோளுக்கும் இடையில் நிகழ்ந்த நேரடி மோதலின்போது வியாழன் கிரகமானது அந்த வேற்று கிரகத்தை அப்படியே விழுங்கி இருக்கக்கூடும் என்ற தகவல்தான் வெளியாகி உள்ளது.

என்ன, ஒரு கிரகத்தை இன்னொரு கிரகம் விழுங்கி விடுமா? இது உண்மையிலேயே சாத்தியமா? என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் நம்மை மூழ்க வைக்கும் இந்த புதிய தகவலானது, வியாழன் கிரகத்தின் மையப்பகுதி உறுதியில்லாத காற்று முட்டைகள் கொண்ட பாறைகளால் ஆகியிருப்பதற்கான காரணத்தை விளக்கும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட வானவியல் விஞ்ஞானிகள்.

முக்கியமாக, வியாழன் கிரகத்தின் மையப்பகுதி உறுதியற்ற பாறைகளால் ஆகியிருப்பதற்கு காரணம் மிகவும் அதிவேக காற்று/புயல்கள் அல்லது பாறைகளின் தோற்றத்தின்போதே அவற்றில் வாயு இருந்திருக்கலாம் என்பது போன்ற காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

சுவாரசியமாக, தற்போது ஜூனோ விண்கலம் சேகரித்துள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகளில், வேறு ஒரு கிரகமானது வியாழன் கிரகத்துடன் மோதியபோது, அந்த கிரகத்தை வியாழன் விழுங்கியிருந்தால் மட்டுமே வியாழன் கிரகத்தினுடைய பாறைகள் இப்படி உறுதியற்றவையாய் இருக்க முடியும் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒருவேளை, இவர்களின் கணிப்பானது உண்மை என்றால், தொடக்ககால சூரிய மண்டலமானது பல்வேறு கிரகங்கள் மோதிக்கொண்டு ஒன்றில் மற்றொன்று தொலைந்துபோகும் பண்புகள் கொண்ட மிகவும் ஆபத்தான ஒரு இடமாக இருந்திருக்கிறது என்பதே உண்மை என்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், வியாழன் கிரகத்துடன் மோதிய கிரகத்தை அது விழுங்கிவிட்டது போலவே, சனி கிரகமும் வேறு கிரகங்களை விழுங்கி இருக்கக்கூடிய வாய்ப்பு மிகமிக அதிகம் என்றும், அதனாலேயே வியாழனும், சனியும் வெவ்வேறு கட்டமைப்புகள் கொண்டவையாய் இருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Next Story