கொசு இல்லாத உலகம் சாத்தியமா?


கொசு இல்லாத உலகம் சாத்தியமா?
x
தினத்தந்தி 20 Aug 2019 5:54 AM GMT (Updated: 20 Aug 2019 5:54 AM GMT)

இன்று (ஆகஸ்டு 20-ந் தேதி) உலக கொசு ஒழிப்பு தினம். கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, உலக கொசு ஒழிப்பு தினமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.

சர் ரொனால்டு ராஸ் என்ற இங்கிலாந்து மருத்துவர் மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரி அனாபிலஸ் பெண் கொசுவினால் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசும் பெற்றார். அந்த தினத்தைத்தான் உலக கொசு ஒழிப்பு தினமாக நாம் அனுசரித்து வருகிறோம்.

கொசுக்கள் பூச்சியினத்தை சேர்ந்தவை ஆகும். இவை, டைனோசர் காலத்திலிருந்தே இருந்திருக்கின்றன. ஆக, இவை 210 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்பே கொசுக்களினால் நோய் பரவும் என்பதற்கான ஆதாரங்களும், குறிப்புகளும் கிடைத்துள்ளன. ஆனால், அந்தக்காலத்தில் இருந்த கொசுக்களுக்கும் இப்போதுள்ள கொசுக்களுக்கும் பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கொசு இனங்களில் சுமார் 3,500 சிற்றினங்கள் இருக்கின்றன. சில நாட்டில் நோயை பரப்புவனவாகவும், சில காட்டில் நடமாடுபவர்களிடமும், அங்குள்ள விலங்குகளிடம் நோயைப் பரப்புவனவாகவும் உள்ளன.

கொசுக்கள் ஆப்பிரிக்காவில் உருவாகி, உலகமெங்கும் பரவியதாக கூறுகிறார்கள். ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் தென் அமெரிக்க மக்கள் தான் கொசுக்களால் பரவும் நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆண் கொசுக்கள் சைவம். இவை தாவரச்சாற்றை மட்டுமே பருகும். பெண் கொசுக்கள் தான் அசைவம். மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சும் பழக்கத்தை பழகிவிட்டன. தங்களது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கின்றன.

ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே உயிர் வாழக்கூடியன. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கும். கருவுற்று, முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்ய வேண்டியது இருப்பதால் இவற்றின் ஆயுள் கொஞ்சம் அதிகம். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று முக்கியமான கொசுக்கள் க்யூலெக்ஸ், அனாபிலஸ், ஏடிஸ் ஆகியவை தான். இந்தக் கொசுக்கள் அளவிலும், உடல் அமைப்பிலும், நீர் நிலைகளில் வாழும் விதத்திலும் வேறுபட்டவை. க்யூலெக்ஸ் கழிவு நீர், சாக்கடையில் முட்டையிடும். அனாபிலஸ் தெளிவான நீரில் முட்டையிடும். ஏடிஸ் மிக குறைந்த அளவே உள்ள தூய நீரில் முட்டையிடும். பெரும்பாலான கொசுக்கள் இரவில் கடிக்கும். ஏடிஸ் கொசுக்கள் பகல் டூட்டி தான் பார்க்க விரும்பும்.

கொசுக்களின் வாழ்க்கைச்சுழற்சியில் நான்கு முக்கியப் பருவங்களைக் கொண்டுள்ளன. அவை முட்டை, லார்வா, பியூபா, வளர்ந்த கொசு ஆகும். இவற்றின் முட்டைகள் மிகவும் உலர்ந்த இடங்களிலும், மிகவும் குளிர்ந்த இடங்களிலும் கூட கெடாமல் நீண்ட காலம் நிலைத்திருக்கும். பிறகு, நீர் கிடைக்கும்போது இவை லார்வா நிலையை அடைந்து கொசுவாகிவிடும். இவற்றின் உருமாற்ற நிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலின் வெப்பநிலை, சிற்றினத்தைப் பொறுத்து வேறுபடும். 430 நாட்கள் வரையிலாக இதன் பருவ உருமாற்றம் நிகழ்கிறது. கொசுக்கள் ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.

க்யூலெக்ஸ் வகை கொசுக்கள் யானைக் கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை பரப்புகின்றன. அனாபிலஸ் வகை கொசுக்கள் மலேரியா காய்ச்சலை பரப்புகின்றன. ஏடிஸ் வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் பாதிப்பு ஆகியவை பரவ காரணமாக இருக்கின்றன. வருடந்தோறும் 700 மில்லியன் மக்கள் கொசுவினால் பரவும் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சுமார், ஒரு மில்லியன் மக்கள் இறந்துபோகிறார்கள்.

தேங்கிய நீர்நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், திறந்த கிணறு, திறந்து வைக்கப்படும் சிமெண்டு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், நீருள்ள வாளிகள், தெரு குப்பைத்தொட்டிகள், கூவம் ஆகியவை கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருகின்றன. உலக நாடுகள் ஏதேதோ திட்டம் போட்டும் இவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அதனாலே முடிந்த அளவு கட்டுப்படுத்தலாம் என்ற அளவிற்கு வந்துவிட்டார்கள். இப்போது நாம் ரசாயன பூச்சிகொல்லி புகை எந்திரம் மூலம் அடிக்கிற புகையெல்லாம் அதற்கு பாடி ஸ்ப்ரே மாதிரி இருக்கு. கொசுக்களை அழிக்க முடிவதில்லை. இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டது தான் இதற்கு காரணம்.

இதற்காக நாம் வீட்டில் வைக்கும் கொசுவத்தி சுருள், திரவ மருந்து போன்றவற்றையும் கண்டு கொசுக்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், இவற்றிலுள்ள அலெத்ரின் என்ற ரசாயனம் நம் உடலைத்தான் பாதித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், கொசுக்கடிக்கு எதிரான களிம்பு மருந்தையும் பயன்படுத்தி வருகிறோம். தினமும் சில கொசுக்களை கொசு மட்டை வைத்து அடித்துவிட்டு தூங்குகிறோம். இரவில் இன்னும் எத்தனை படை எடுத்து வரும் என்று தெரியாமல்... ஜன்னல்களுக்கு வலை போடுதல், படுக்கையில் கொசுவலை கட்டுதல் போன்றவற்றின் மூலமும் தப்பிக்க பார்க்கிறோம். குளம், குட்டை ஆகிய இடங்களில் கம்பூசியா மீனை வளர்ப்பதால் இவை நன்னீரில் வளரும் கொசுக்களின் லார்வாவை உண்டு கொசு பெருக்கத்தை குறைக்க உதவும். வால்பாஷியா கிருமி மூலம் மலட்டுத்தன்மை உள்ள ஆண் கொசுக்களை உருவாக்கி அவற்றை வெளியே விடுவதன் மூலம் அவை சேரும் பெண் கொசுக்களின் முட்டையில் இருந்து புதிய கொசுக்கள் உருவாகாமல் தடுக்கப்படும். இந்த புதிய தொழில்நுட்ப முயற்சிகளும் தொடருகிறது. இவை பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலையை (தேங்கிய நீர்நிலைகள்) முதலில் தவிர்க்க வேண்டும். கொசு ஒழிப்பு என்றாலே, இது அரசாங்கத்தின் வேலை என்று நினைத்து பழியை போடுகிறோம். இது தவறான அணுகுமுறை. கொசுக்களின் ஒழிப்புப் பணிக்காக மட்டும் தமிழக அரசு ரூ.13 கோடியை ஒதுக்கியுள்ளது என்பதிலிருந்தே கொசு ஒழிப்பின் முக்கியத்துவம் நமக்கு விளங்கி விடும். மக்களும், அரசாங்கமும் இன்னும் கைகோர்த்து செயல்பட்டால் தான் கொசுக்களின் பெருக்கத்தையும், அவற்றால் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்த முடியும்.

- டாக்டர் சு.முத்து செல்லக்குமார், பேராசிரியர், தனியார் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை.

Next Story