புதிய சாதனை அளவை எட்டியது; துணிகர-தனியார் பங்கு முதலீடு 830 கோடி டாலராக அதிகரிப்பு


புதிய சாதனை அளவை எட்டியது; துணிகர-தனியார் பங்கு முதலீடு 830 கோடி டாலராக அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 8:01 AM GMT (Updated: 20 Aug 2019 8:01 AM GMT)

கடந்த ஜூலை மாதத்தில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு புதிய சாதனை அளவை எட்டி 830 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

அமோக வளர்ச்சி

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது.

துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டை ஈர்க்கும் நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சி கண்ட பின் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு கணிசமான லாபத்துடன் முழுமையாகவோ, பகுதி அளவோ வெளியேறுகின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் 106 ஒப்பந்தங்கள் வாயிலாக 830 கோடி டாலர் அளவிற்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்த முதலீடு 180 கோடி டாலராக (70 ஒப்பந்தங்கள்) இருந்தது. ஆக, முதலீடு 361 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2019 மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 710 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதத்தில், 10 கோடி டாலர் மற்றும் அதற்கு அதிக மதிப்பில் சுமார் 14 ஒப்பந்தங்கள் நிறைவேறி உள்ளன.

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஜனவரி-ஜூன்) துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டில் இருந்து விலகிய தொகை ஏறக்குறைய 5 மடங்கு சரிவடைந்து 409 கோடி டாலராக இருக்கிறது. 85 ஒப்பந்தங்கள் மூலம் இந்த நிதி வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 1,959 கோடி டாலராக (145 ஒப்பந்தங்கள்) இருந்தது.

புதிய பங்கு வெளியீடுகள்

பொதுத் தேர்தல் காரணமாக நம் நாட்டில் கடந்த ஜூன் மாதம் வரை புதிய பங்கு வெளியீடுகள் குறைந்து இருந்தது. எனவே துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் பல நிறுவனங்களில் இருந்து வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. தேர்தல் முடிந்து மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி நிலைபெற்று இருக்கும் நிலையில் இனி வரும் மாதங்களில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story