பங்குச்சந்தை பட்டியலில் ஸ்பாந்தனா ஸ்பூர்தி நிறுவனம்; முதல் நாளில் பங்கு விலை சரிவு


பங்குச்சந்தை பட்டியலில் ஸ்பாந்தனா ஸ்பூர்தி நிறுவனம்; முதல் நாளில் பங்கு விலை சரிவு
x
தினத்தந்தி 20 Aug 2019 8:07 AM GMT (Updated: 20 Aug 2019 8:07 AM GMT)

ஸ்பாந்தனா ஸ்பூர்தி பைனான்சியல் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கின் விலை லேசான சரிவை சந்தித்தது.

குறுங்கடன் நிறுவனம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்பாந்தனா ஸ்பூர்தி குறுங்கடன் நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், மூலதன இருப்பை அதிகரிக்கவும் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்குகள் வெளியிட்டது. அந்த வெளியீடு இம்மாதம் 5-ந் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 7-ந் தேதி (புதன்கிழமை) நிறைவடைந்தது.

அதில் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ.800 கோடி மதிப்பிலான பங்குகள் வெளியிடப்பட்டன. மேலும் ரூ.400 கோடிக்கு புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. புக் பில்டிங் எனும் ஏலமுறையில் நடைபெற்ற இப்பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.853-856-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தனிப்பட்ட ஒதுக்கீடு நீங்கலாக மொத்தம் 98.22 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில் 1.03 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அது வெளியீட்டு அளவைக் காட்டிலும் 1.05 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே வெளியீடு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது. அந்த நிலையில் ஸ்பாந்தனா ஸ்பூர்தி நிறுவனம் ரூ.1,200 கோடி திரட்டிக் கொண்டது. பின்னர் ஒரு பங்கின் இறுதி வெளியீட்டு விலை ரூ.856-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பட்டியலிடப்பட்டன

ஸ்பாந்தனா ஸ்பூர்தி பைனான்சியல் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.824-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.865-க்கும், குறைந்தபட்சமாக ரூ.690-க்கும் சென்றது. இறுதியில் ரூ.848.40-ல் நிலைகொண்டது. வெளியீட்டு விலையுடன் (ரூ.856) ஒப்பிடும்போது இது 0.88 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.825-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.866-க்கும், குறைந்தபட்சமாக ரூ.691.10-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் 0.95 சதவீதம் சரிந்து ரூ.847.80-ல் நிலைகொண்டது.

Next Story