ஜூலை மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவு - எப்.ஏ.டீ.ஏ. தகவல்


ஜூலை மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவு - எப்.ஏ.டீ.ஏ. தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2019 8:30 AM GMT (Updated: 20 Aug 2019 8:30 AM GMT)

ஜூலை மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.ஏ.டீ.ஏ) தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

மோட்டார் வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 16,54,535 மோட்டார் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 17,59,219-ஆக இருந்தது. ஆக, விற்பனை 6 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இதே காலத்தில் பயணிகள் வாகனங்கள் சில்லரை விற்பனை 11 சதவீதம் சரிவடைந்து (2,74,772-ல் இருந்து) 2,43,183-ஆக குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரிவடைந்து 23,118-ஆக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அது 26,815-ஆக இருந்தது.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்து (14,03,382-ல் இருந்து) 13,32,384-ஆக குறைந்து இருக்கிறது. அதே சமயம் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 55,850-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 54,250-ஆக இருந்தது.

இவ்வாறு வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி ஜூலை மாதத்தில் 2,00,790 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,90,931-ஆக இருந்தது. ஆக, விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. இதில் கார்கள் விற்பனை 36 சதவீதம் சரிவடைந்து (1,91,979-ல் இருந்து) 1,22,956-ஆக குறைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள்

ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார், ராயல் என்பீல்டு ஆகிய 5 நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள் துறையில் முன்னணியில் உள்ளன. டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் வர்த்தக வாகனங்கள் பிரிவில் முன்னிலையில் இருந்து வருகின்றன. 


Next Story