தினம் ஒரு தகவல் : விண்வெளி பயண திட்டம்


தினம் ஒரு தகவல் : விண்வெளி பயண திட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 5:58 AM GMT (Updated: 22 Aug 2019 5:58 AM GMT)

சந்திரயான், மங்கள்யான் வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், ‘மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர் தான்!).

விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்க வைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்து விட்டு வீட்டுக்கு திரும்புவது மாதிரி.

விண்வெளி பயணம் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி தேவைப்படுகிறது. கோடிகளில் செலவு பிடிக்கிறது. ஒரு செயற்கை கோளை ராக்கெட்டில் வைத்து ஏவி புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதுகூட எளிது. ஆனால், அதை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது ஏவுவதைவிட செலவு எகிறும். ரிஸ்க் நிறைந்த கடினமான சவால். அதனாலேயே விண்வெளியில் செயற்கை கோள் பழுதடைந்தால், அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள். அதுவாகவே ஒரு நாள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விழுந்துவிடும். இது அப்படி அல்ல. ஒரு மனிதனை ராக்கெட்டில் அனுப்பி, சில நாட்கள் விண்வெளியில் சுற்ற வைத்து, அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும்.

முன்பு விண்வெளி வீரர்களுக்கு நீலப் பச்சை பாசி போன்ற திரவ வகை உணவுகளை பதப்படுத்திக் கொடுப்பார்கள். அப்படி பதப்படுத்தப்படும் உணவு, விண்வெளி வீரரின் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி விடாததாக இருக்க வேண்டும். அதனால் இப்போது கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த மாத்திரைகளை கொடுக்கிறார்கள். 12 நாட்கள் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றால் மனோதிட பயிற்சி அவசியம்.

இந்தப் பயணத்துக்கு பெரும்பாலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குத்தான் உயரம், வேகம் குறித்த நடுக்கமோ பயமோ இருக்காது. அதிநவீன கருவிகளை கையாளவும் தெரியும். விண்வெளியில் சிறிய அறை ஒன்றில், அமைதியாக இருக்க, அதுவும் தனிமையில் அமைதியாக இருக்க பெரும் பயிற்சி தேவைப்படும். அதுதான் பயிற்சியின் மிக முக்கியமான கட்டம்.

விண்வெளிக்குச் சென்ற பின், நேரம் காலம் தெரியாததால் ஒருவரது உடலில் இருக்கும் உயிர்ச்சூழல் கெடிகாரம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு குறையும். உப்பு கூடும். அந்தச் சிக்கல்களை எல்லாம் தானாகவே கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். இதற்காக பூமியிலேயே விண்வெளி போன்ற ஈர்ப்பு விசையற்ற நிலையை உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை முதலில் மணிக்கணக்கில் தங்க வைப்பார்கள். பிறகு ஒரு நாள், இரண்டு நாள், நான்கு நாள் என பயிற்சியை அதிகரிப்பார்கள். சமயங்களில் தனிமையில் கேப்சூலில் ஒரு மாதம் முழுக்க கூடத் தங்க வைப்பார்கள். அப்போதுதான் ‘சவாலே சமாளி’ மனதிடம் அதிகரித்து, விண்வெளியில் 12 நாள் தாக்குப்பிடிப்பார்.

Next Story