நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் : மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்


நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் : மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2019 12:32 PM GMT (Updated: 22 Aug 2019 12:32 PM GMT)

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எண்ணெய், தங்கம்

நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் சரக்குகள் ஏற்றுமதியை 35,000 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் ஏற்றுமதி 33,102 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. அது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளர்ச்சியாக மட்டுமே இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் (2019-20) நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி காணும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் அனூப் வாத்வான் கூறி உள்ளார். கொல்கத்தாவில், அண்மையில் பொறியியல் துறை கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார்.

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

முதல் 4 மாதங்களில்...

நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஜூலை) 0.37 சதவீத சரிவுடன் மொத்தம் 10,741 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இதே காலத்தில் இறக்குமதி 3.63 சதவீதம் குறைந்து 16,680 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை (6,527 கோடி டாலரில் இருந்து) 5,939 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. 

Next Story