சிறப்புக் கட்டுரைகள்

தேனீக்கள்: வியப்பூட்டும் தகவல்கள்...! + "||" + Bees: Amazing information ...!

தேனீக்கள்: வியப்பூட்டும் தகவல்கள்...!

தேனீக்கள்: வியப்பூட்டும் தகவல்கள்...!
தேனீ பூச்சி இனங்களில் முதன்மையானது. இது எறும்பு, குளவி இனங்களோடு நெருக்கமான உறவுடையது. அண்டார்டிகா தவிர பூமியின் அனைத்து கண்டங்களிலும் இது காணப்படுகிறது.
தேனீக்களால்தான் தாவரங்களில் மகரந்த சேர்க்கை சாத்தியமாகிறது. தாவர இனம் விரைந்து பெருகுகிறது. உறிஞ்சுக்குழல் போன்ற இதன் நீண்ட நாக்கு மலர்களின் உள்ளிருந்து தேனை எடுப்பதற்கு உதவுகிறது. இவற்றிற்கு இரண்டு சிறகுகளும் இரண்டு உணர்ச்சிக் கொம்புகளும் இருக்கின்றன. தலை, மார்பு, வயிறு ஆகிய தனித்துத் தெரியும் மூன்று உடல்பகுதிகள் உள்ளன. தேனீக்கள் தரும் தேன் சுவை மிகுந்தது மட்டும் அல்ல. மருந்தாகவும் பயன்படுகிறது. தேனைத் தரும் தேனீக்களில் சில கொட்டினால் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு. தேனீக்கள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடனமாடி தேன் இருக்கும் திசையையும், தூரத்தையும் மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்கும்.

ஒரு குழுவில் ராணித்தேனீ, ஆண்தேனீ, வேலைக்காரத் தேனீ ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றின் உடலமைப்பிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. இவைகளின் கூட்டமைப்பினால் தான் தேன் கூடு உருவாகிறது. ஒரு கூட்டில் ஒரே ஒரு ராணித் தேனீ இருப்பதையே ஒரு தேன் கூடு என்கிறோம். ஒரு தேன் கூட்டில் ஆண் தேனீ நூற்றுக்கணக்கிலும், வேலைகாரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கிலும் இருக்கும்.

ராணித் தேனீக்கும், வேலைக்கார தேனீக்களுக்கும் கொடுக்குகள் உள்ளன. ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு இல்லை. தேன் சேகரிக்கும் உறுப்பும் இல்லை. எனவே, ஆண் தேனீக்கள் ராணித்தேனீயுடன் உறவுகொண்ட பிறகு இறந்துவிடும். உறவின் மூலம் ஆயிரக்கணக்கான உயிரணுக்களை அது பெற்றுக் கொள்கிறது. தன் வாழ்நாள் முழுவதுமாக முட்டையிடும் பணியை அது மேற்கொள்கிறது. நாள் ஒன்றுக்கு 1500 முட்டைகள் வரை ராணித் தேனீ இடுகிறது. ஒரு ராணித்தேனீக்கு வயதாகிவிட்டதும், உடனடியாக இன்னொரு ராணித்தேனீயை உருவாக்கும் பணி நடக்கிறது. ராணித்தேனீ ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அதில் இனப்பெருக்கம் செய்கிறது. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி எனப்படும் ஊட்டச்சத்து மிகுந்த திரவம் தொடர்ச்சியாகத் தரப்படுகிறது. இந்த திரவத்தைப் பெற்ற ஒரு தேனீ மட்டுமே நல்ல வளர்ச்சி பெற்று ராணித் தேனீயாக மாறுகிறது. முதலில் வரும் ராணித் தேனீ அடுத்து வரும் ராணித் தேனீக்களைக் கொன்றுவிடுகிறது.

வேலைக்காரத் தேனீக்கள் பெண் தேனீக்களாகும். தேனீக் குஞ்சுகளுக்கு உணவூட்டுவது, ராணித் தேனீயின் தேவைகளை நிறைவேற்றுவது, தேன் கூட்டைத் தூய்மை செய்வது, உணவு சேகரிப்பது, தேனீ கூட்டத்தைப் பாதுகாப்பது, தேன்கூட்டைக் கட்டுவது என்று தேன் கூட்டிற்கான அனைத்துவிதமான பணிகளையும் இவைகளே செய்கின்றன. மலரிலிருந்து மகரந்தத்தை சேகரித்து எடுத்துக் கொண்டுவரும் வகையிலான உடலமைப்பை வேலைக்காரத் தேனீக்கள் பெற்றுள்ளன. வேலைக்காரத் தேனீக்களுக்கு ஜீரண உறுப்புடன் நான்கு ஜோடி மெழுகு சுரப்பிகளும் உள்ளன. இவற்றிற்கு தேன் வயிறு என்ற ஒன்று தனியாக உள்ளது.

தேன் கூடு அறுங்கோண வடிவில் அமைந்திருக்கும். சிறந்த பொறியாளர்களைப் போல செயல்பட்டு இந்தத் தேன்கூட்டினை தேனீக்கள் கட்டுகின்றன. தேனீ ஒருவரைக் கொட்டினால் அந்தத் தேனீயின் விஷப்பையில் இருக்கும் விஷம் உடல் முழுவதும் பரவி தேனீயும் உயிரிழந்துவிடுகிறது.

தேன் என்பது என்ன?

மலர்களில் இருந்து தேனீக்களால் உறிஞ்சி எடுக்கப்படும் மது, அவற்றின் வயிற்றிலிருந்து வரும் சுரப்புடன் சேர்ந்து உருவாவதுதான் தேன். மலர்ந்திருக்கும் மலர்களில் இருந்து எடுத்துவரப்படும் தேனில் 80 முதல் 95 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. ஐந்து முதல் 20 சதவீதம் சுக்ரோஸ் எனும் சர்க்கரைச் சத்து இருக்கிறது. எடுத்துவரப்பட்ட தேனை தேன் கூட்டிற்கு மாற்றும் போது தேனீக்களின் வயிற்றில் சுரக்கும் இன்வர்டேஸ் எனப்படும் சுரப்பு நீர் சுக்ரோஸை சிதைத்து பிரக்டோஸ், குளுகோஸ் எனும் இரண்டு சாதாரண சர்க்கரைகளாக மாற்றுகிறது. இந்த சர்க்கரைக் கரைசலில் உள்ள தண்ணீர் ஒரு தேனீயிடம் இருந்து இன்னொரு தேனீக்கு தரப்படும் போது சிறிது சிறிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. தேனீக்கள் இறகுகளை விசிறுவதாலும் தேனில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இதனால் தேன் கெட்டியாகிறது. ஏறத்தாழ 18 சதவீதம் மட்டுமே தண்ணீர் கொண்ட சுவையான பிசுபிசுப்பான தேன் உருவாகிறது. தேனுக்கு மருத்துவ குணம் மிகுதியாக இருக்கிறது. இந்தியாவில் நான்கு வகை தேனீக்கள் உள்ளன.

1.மலைத்தேனீ: இவை, மலைப்பாறைகளிலும், உயர்ந்த மரங்களிலும் பெரிய அளவில் கூடு கட்டி வாழும். கொட்டும் தன்மை உடையவை. இவற்றின் விஷம் கொடியது. இவை அதிகமான தேனை சேகரிக்கும். தேனீ வளர்ப்பிற்கு இவை உகந்தவை அல்ல.

2.கொம்புத்தேனீ: இவை சிறிய வகை தேனீக்கள். சிறிய மரக்கிளைகளிலும், புதர்களிலும் கூடு கட்டி வாழும். தேன் மிகக் குறைவாகக் கிடைக்கும். கொட்டும் தன்மையுடையது. வளர்ப்பதற்கு ஏற்றதல்ல.

3. அடுக்குத்தேனீ அல்லது இந்தியத்தேனீ: இந்த வகைத் தேனீக்கள் மலைத் தேனீக்களை விடவும் அளவில் சிறியதாகவும், கொம்புத் தேனீக்களை விட பெரியதாகவும் இருக்கும். தேன் அடைகளை அடுக்கடுக்காகக் கட்டிக்கொண்டு வாழும். கொட்டும் தன்மையுடையது. தேன் நன்றாகக் கிடைக்கும். வளர்ப்பதற்கு ஏற்றது.

4.கொசுத்தேனீ: இந்த வகை தேனீக்கள் கொசுக்களைப் போன்று சிறியவை. மெல்லிய உடலமைப்பு கொண்டவை. மரப்பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும். வாயினால் கடிக்கும் தன்மை கொண்டவை. சிறிதளவு தேன் கிடைக்கும். வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தேசிய தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

- ஆ.தண்டபாணி, வனச்சரக அலுவலர் (பணி நிறைவு)

தொடர்புடைய செய்திகள்

1. அரக்கோணம் அருகே, தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவ, மாணவிகள் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை
அரக்கோணம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.