சிறப்புக் கட்டுரைகள்

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? + "||" + Is the award given? Purchased?

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா?

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா?
அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது.
 ‘தேசிய விருதுகளை விட படங்களை பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்’ எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்கு பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும் பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்.

ஒரு துறையில் சமமான திறமை கொண்டவர் பலர் இருக்கலாம். ஆனால் விருது ஒருவருக்கு தான் கொடுக்கமுடியும். இந்தச் சூழலில் ஒருவர் விருது பெறும்போது விருது பெறாதவர்களின் குமுறலும், கோபமும் அதிகமாக இருக்கும். அவர் எப்படியோ வாங்கிவிட்டார் என்ற குமுறல் வெளிப்படும். எனக்கு ஏன் வழங்கவில்லை என்னும் கோபம் கொந்தளிக்கும். ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு வாங்கியபோது பாரதியார் அப்படித்தான் கோபப்பட்டாராம். ‘உடனே கொல்கத்தாவுக்கு டிக்கெட் எடு. தாகூர் வாங்கிய விருதைச் சபையில் வைக்கட்டும். எங்கள் இருவர் கவிதையும் கேட்டபின் யாருக்கு அந்த விருது பொருந்தும் எனச் சபை முடிவு செய்யட்டும்’ என்றாராம். எனினும் பாரதியாரின் இந்தக் கோபம் நெடுநேரம் நீடிக்கவில்லை.“ நம்முடைய தாகூர் தானே வாங்கியுள்ளார்”. என அமைதி கொண்டு விட்டாராம். ஆனால் நம்மால் அமைதி கொள்ள முடியவில்லையே! உலகப் பெருங்கவிஞர் எனப் போற்றப்பட வேண்டிய பாரதியாருக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை?

பாரதியாருக்குப் பின்னர் அவர் வழியில் ஏறு நடையிட்ட எழுச்சிப் பாவலர் பாரதிதாசனுக்கு அவர் வாழும் காலத்தில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1969-ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது. கவிதையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப் புரட்சிக் கவிஞர் இறந்த பின்னரும் கவிதைக்கான விருது அவருக்கு வழங்கப் படவில்லை. பிசிராந்தையார் என்னும் நாடகத்திற்காகவே பாரதிதாசனுக்கு விருது வழங்கப்பட்டது. நல்ல வேளையாகக் கண்ணதாசன் தாம் இறப்பதற்கு ஓராண்டு முன்னரே (1980) விருது பெற்றார். ஆனால் அவரும் கவிதைக்கான சாகித்ய அகாடமி விருது பெறவில்லை. சேரமான் காதலி என்னும் நாவலுக்காகவே அவர் விருது பெற்றார் .இரு பெரும் கவிஞர்களும் கவிதைக்காக விருது வழங்கப்படாதது எவ்வளவு பெரிய தவறு? கண்ணதாசன் கவியரசராகக் கோலோச்சிய காலத்தில் 1968-ம் ஆண்டு தமிழ்க்கவிதைக்காக அகாடமி விருது பெற்றவர் அ.சீனிவாசன் என்னும் ஆங்கிலப் பேராசிரியர் என்னும்போது அழுவதா? சிரிப்பதா?

முதன் முதலாகத் தமிழ் எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீடம் விருது வழங்கிய போது பத்திரிகைகளில் அவருக்கு பாராட்டு குவிந்ததை விட அவருக்கு வழங்கப்பட்டது தவறு என்னும் கண்டனக் கணைகளே மிகுதியாக வெளி வந்தன. சாண்டில்யன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய கோபத்தைப் பார்த்து ஞானபீட அமைப்பே பயந்துபோனது. அதன்பின் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கியம் ஞானபீடம் பெறாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத விருது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்னும் நல்லெண்ணம் நிலவுவதால் பல ஆண்டுகளாக பல விருதுகள் வழங்கப்படாமலே போவதும் உண்டு.

விருது வாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர் யார் தெரியுமா? “எனக்கு இந்த விருது வேண்டாம்; என்னை விடத் தகுதி வாய்ந்தவர் இருக்கிறார்கள்; அவருக்கு கொடுத்துவிடுங்கள்” என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் விருதுபெறத் தகுதி வாய்ந்தவர்கள். இதனை விளக்குவதை போல ஒரு கதை, நம் அவ்வையாரை மையமாகக் கொண்டு வடமொழியில் வழங்குகிறது.

நாரத முனிவர் அவ்வையாரை நாடி வருகிறாராம் “அவ்வையே! சிறந்த அறிஞர் என்னும் விருது உங்களுக்கு வழங்க எண்ணுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாராம். அவ்வையார் தயங்காமல் உடனே சொல்கிறார். “நானா சிறந்த அறிவாளி! எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் தலைவர் அகத்தியர் இருக்கிறார். அவருக்குத் தான் இந்த விருது பொருந்தும்”. “நாரதர் அகத்தியரைப் போய் பார்த்து அவ்வை கூறியதைச் சொல்கிறார். அகத்தியர் சிரித்துவிட்டு அவ்வையாரை விடவா நான் அறிவாளி?” என்று கூறியவர், சரி! அவர்கள் ஏற்கவில்லை யென்றால் இந்திரனுக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள். இப்போதுதான் அவர் ஐந்திரம் என்றொரு நூல் எழுதியுள்ளார். அவருக்கு இந்த விருது மிகவும் பொருந்தும் என்றாராம். நாரதர் இந்திரனிடம் போய் விருது வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இந்திரன் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். கலைமகளின் அருள் இல்லாவிட்டால் இந்த நூலை என்னால் எழுதியிருக்கமுடியுமா? என்று கேட்டு விருதைக் கலைமகளிடம் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் கலைமகளும் விருது பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். ‘என்னைப் படைத்து என்னையாளும் தலைவன் பிரம்மன் தான் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்கிறார். பிரம்மன் திருமாலையும், திருமால் லட்சுமியையும், லட்சுமி ஈஸ்வரியையும் பொருத்தமானவர்கள் எனக் கைகாட்டிவிடுகின்றனர். ஈஸ்வரி எல்லாம் வல்ல பரமசிவனைக் கைகாட்டக் கடைசியில் பரமசிவன் சொல்கிறாராம். “எனக்குப் பிரணவ மந்திரம் கற்றுக்கொடுத்த முருகனுக்கே இந்த விருது பொருந்தும்“ என்கிறார். கடைசியில் முருகனும் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். முருகன் என்ன சொன்னார் தெரியுமா? “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் அவ்வையாரே இந்த விருதுக்குத் தகுதியானவர்” எங்கெல்லாமோ சுற்றிய விருது தொடக்கத்தில் அடக்கத்துடன் விருது பெற மறுத்த அவ்வையாருக்கே பொருத்தமாக அமைந்தது. தன்னை விட அறிவாளி இவ்வுலகில் இருக்கிறார் என்று தன்னடக்கம் கொள்பவர்களே தலைசிறந்த அறிவாளிகள் என்னும் கருத்தை இந்தக் கதை அருமையாக உணர்த்துகிறது. எல்லோரும் இதனை உணர்ந்துகொண்டால் விருதுகளுக்காக வீண் சண்டைகள் வராமல் போய்விடும் அல்லவா?.

- மறைமலை இலக்குவனார், முன்னாள் சிறப்பு வருகை பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம்.