தங்கக் கோபுரங்களைக் கண்டு வியந்த சீனத்தூதர்


தங்கக் கோபுரங்களைக் கண்டு வியந்த சீனத்தூதர்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM GMT (Updated: 23 Aug 2019 9:02 AM GMT)

பழங்காலத்துக் கம்போடியாவைப் பற்றிய தகவல்களை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அங்கு கட்டப்பட்ட கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து மட்டுமே ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

கம்போடிய நாட்டின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பழைய இலக்கியங்களோ அல்லது ஆவணங்களோ ஏதும் இல்லாத நிலையில், கடந்தகால நிகழ்வுகளைச் சொல்லும் எழுத்து ரூபமான ஒரே ஆவணமாகக் கொண்டாடப்படுவது, அங்கே சென்று வந்த சீனத்தூதர் ஒருவர் எழுதிய குறிப்புகள் தான்.

தெற்கு சீனாவில் உள்ள ‘வென்சவ்’ என்ற நகரைச் சேர்ந்தவர், சவ் தா குவான். இவர், அங்கே ஆட்சியில் இருந்த மங்கோலிய மன்னர் தைமூர் கான் என்பவர் அரசவையில் அதிகாரியாக இருந்தவர்.

இவரும் மற்றும் சில அதிகாரிகளும் சேர்ந்து, 1296-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீனாவில் இருந்து கப்பல் மூலம் கம்போடியாவுக்கு அரசு முறை தூதுக்குழுவாகச் சென்றனர்.

அப்போது அந்த நாட்டின் தலைநகராக இருந்த அங்கோர் தாம் நகருக்குச் சென்ற அந்த தூதுக்குழுவினர், அங்கே 11 மாதங்கள் தங்கி இருந்தனர்.

நாடு திரும்பிய 15 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன தூதர் சவ் தா குவான் கம்போடியாவுக்குச் சென்று வந்த தனது அனுபவங்களை ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி அவற்றைத் தொகுத்து குறிப்புகளாக எழுதினார்.

5 நூற்றாண்டுகளாக சீன அரசின் ஆவணக்குவியல்களில் கிடந்த அந்தக் குறிப்புகள், 523 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரெஞ்சிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு ‘கம்போடியாவின் பழக்க வழக்கங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

சீனத்தூதர் சவ் தா குவான் கம்போடியாவுக்குச் சென்ற போது, அங்கே ஆட்சியில் இருந்தவர் மூன்றாம் இந்திரவர்மன் என்ற மன்னர் ஆவார்.

720 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மன்னரின் ஆட்சியில் வாழ்ந்த கம்போடியா மக்களின் பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன என்பதை சீனத்தூதர் சவ் தா குவான் எழுதிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

எழுதி முடிக்கப்படாத இந்தப் புத்தகம், 40 அத்தியாயங்களைக் கொண்டது. அவற்றில் சவ் தா குவான் கூறியுள்ள முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்:

கம்போடியாவின் தலைநகர் அங்கோ தாம், மிகப்பெரிய சதுர வடிவில் அமைந்துள்ளது. அந்த நகரைச்சுற்றி ஆழமான அகழியும், மிக உயர்ந்த மதில் சுவர்களும் உள்ளன. நகருக்குள் செல்வதற்கு அகழியின் மீது ஐந்து இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பாலத்தைக் கடந்ததும், 75 அடி உயர கோபுர வாசல் தென்படுகிறது. அதில் உள்ள கதவுகள், இரவு நேரத்தில் மூடப்பட்டு காலையில் திறக்கப்படுகின்றன.

நாய்களும், குற்றவாளிகளும் நகருக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. (குற்றவாளிகளுக்கு கால் விரல்கள் வெட்டப்பட்டுவிடும் என்பதால், இதை அடையாளமாக வைத்து குற்றவாளிகள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டனர்).

வாசல் கோபுரத்தில் மிகப்பிரமாண்டமான 5 மனிதத்தலை சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு தங்கத்தகடு போர்த்தப்பட்டு இருக்கிறது.

சற்று தூரத்தில், நகரின் நடுவே உள்ள மிகப்பெரிய கோபுரம் தங்கத்தால் தக, தகக்கிறது. (பெயோன் கோவிலை சுட்டிக்காட்டுகிறார்.)

அதை அடுத்து மேலும் உயரமான கோபுரம் உள்ளது. (பாபுவான் கோவில்). இந்தக் கோபுரம் வெண்கலத் தகடுகளால் போர்த்தப்பட்டு இருக்கிறது.

தலைநகருக்குத் தெற்கே அங்கோர் வாட் என்ற கோவில் இருக்கிறது.

(அங்கோர் வாட் பற்றி சீனத்தூதர் வேறு விரிவான தகவல் களைத் தரவில்லை. அவரது பயணக்காலத்தில் அங்கோர் வாட் கோவிலுக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், சீனத்தூதர் அங்கே செல்லவில்லை போலும்).

‘ஜெய தடாகம்’ என்ற ஏரியின் நடுவே தீவு போன்ற பகுதியில், தங்கத்தால் ஆன ஒரு கோவிலும் வேறு சில கோவில்களும் இருக்கின்றன.

கிழக்குப் பகுதி ஏரியில் கல்லால் கட்டப்பட்ட ஒரு கோவில் உள்ளது. அங்கே வெண்கலத்தால் ஆன பெரிய புத்தர் சிலை உள்ளது. (விஷ்ணு சிலையைத் தான் புத்தர் சிலை என்று அவர் தவறாகக் கருதி இருக்கிறார்).

குடிமக்கள் யாருக்காவது அழகிய பெண் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளை அரண்மனை பணிக்கு அனுப்பிவிட வேண்டும்.

இவ்வாறு பணியில் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான இளம் பெண்கள் அரண்மனைக்குள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

இந்தப் பெண்கள், அடையாளத்துக்காக வித்தியாசமான தலை அலங்காரம் செய்து இருக்கிறார்கள்.

மன்னரின் அந்தப்புரத்தில் குறைந்தது 5 ஆயிரம் இளம் பெண்கள் இருந்தனர். இவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெற்றார்கள்.

மன்னரின் அரண்மனையில் அதிக அளவில் காவல் போடப்பட்டு இருந்தது. நாங்கள் தூதர்கள் என்றாலும் அரண்மனையின் ஒரு பகுதிக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டோம். அரண்மனையின் உள்பகுதிக்குள் சென்று பார்க்க எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மதத்தலைவர்கள் ஆட்சியில் அதிக செல்வாக்குடன் இருக் கிறார்கள்.

வானசாஸ்திரம் அறிந்த நிபுணர்கள் இருக்கிறார்கள். எப்போது சந்திர கிரகணம் ஏற்படும், எந்த தேதியில் சூரிய கிரகணம் வரும் என்பதை துல்லியமாகக் கணித்து சொல்கிறார்கள்.

மக்களிடம் எழுத்து மொழி இருக்கிறது. மான் தோலைப் பதப்படுத்தி அதில் கருப்பு சாயம் பூசி வெள்ளை நிறத்தில் எழுதுகிறார்கள். (பனை ஓலைச் சுவடி பயன்பாட்டில் இருந்ததா என்பது பற்றி சீனத் தூதர் ஏதும் குறிப்பு தரவில்லை).

மாதந்தோறும் ஏதாவது விழா நடத்து கிறார்கள். சித்திரை மாதம் புத்தாண்டு விழா வாண வேடிக்கையுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் ஓடு போட்டவைகளாக உள்ளன. மற்ற அனைவர் வீடுகளிலும் ஓலைக்கூரை வேயப்பட்டுள்ளது.

அனைவர் வீட்டு தரையிலும் பாய் விரிக்கப்பட்டு காணப்படுகிறது. அந்தப் பாயிலேயே படுத்து உறங்குகிறார்கள். கட்டிலோ, மேஜையோ, நாற்காலிகளோ ஏதும் இல்லை.

பெண்கள், மூன்று கற்களை முக்கோண வடிவில் வைத்து அடுப்பாக பயன்படுத்துகிறார்கள். அடுப்பு மீது பீங்கான் பாத்திரத்தை வைத்து சமையல் செய்கிறார்கள்.

கட்டைகளை விறகாக வைத்து நெருப்பு மூட்டுகிறார்கள். வாயால் ஊதியும், விசிறியால் விசிறியும் நெருப்பை அதிகப்படுத்து கிறார்கள்.

தேங்காய் சிரட்டையின் ஒரு பாதியில் குச்சியை சொருகி, அதனை அகப்பையாகப் பயன் படுத்துகிறார்கள்.

(இந்தப் பழக்கங்கள் எல்லாமே தமிழகத்தில் இருந்து சென்றவையாகக் கருதப்படுகின்றன).

நடுத்தரக் குடும்பங்களில் தண்ணீர், சூப் ஆகியவற்றை அருந்து வதற்கு தகரத்தால் ஆன குவளையும், சாதாரணமானவர்கள் வீடுகளில் மண் குவளையும் உள்ளன.

அரிசி, தேன், ஒருவிதமான இலைகள், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு மது தயாரித்து அனைவரும் அருந்து கிறார்கள்.

ஆண்கள், பெண்கள் யாருமே மேலாடை அணிவது இல்லை. இடையில் சிறிய துணியை மட்டும் ஆடையாகக் கட்டி இருக்கிறார்கள்.

யாரும் காலணி அணிவதும் இல்லை. வெறுங்காலுடன் நடந்து செல்கிறார்கள்.

பெண்கள் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். உடல் உறவில் அதிக நாட்டம் உள்ளது. குழந்தை பெற்ற இரண்டு நாட்களிலேயே மீண்டும் உடல் உறவுக்குத் தயார் ஆகிவிடுகிறார்கள்.

வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற கணவர், 10 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என்றால், ‘நான் ஒன்றும் பிசாசு அல்ல; எப்படி தனிமையில் படுப்பது’ என்று அங்கலாய்க் கிறார்கள்.

பெண்கள் காலில் கொலுசு, கை விரல்களில் மோதிரங்கள் அணிந்து, வாசனை திரவியம் பூசிக்கொள்வதை அதிகம் விரும்புகிறார்கள்.

20 அல்லது 25 வயது கம்போடியப் பெண்கள், சீனாவின் 50 வயதுப் பெண்கள் போன்ற கிழட்டு தோற்றத்தில் காட்சி அளிக் கிறார்கள்.

கடை வீதிகளில் பெண்கள் மட்டுமே வியாபாரம் செய்கிறார்கள். வீதியின் ஓரத்தில் பாய் அல்லது துணியை விரித்து, அதில் தங்களது பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய் கிறார்கள்.

ஆண்கள், பெண்கள் யாருக்கும் பெயர் வைக்கப்படுவது இல்லை. குடும்ப பெயரும் கிடையாது. ஒவ்வொருவரும் எந்த கிழமையில் பிறக்கிறார்களோ, அந்தக் கிழமை பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.

அடிமைகளைப் பயன்படுத்தும் வழக்கம் அங்கே இருக்கிறது. பணக்காரர் வீடுகளில் குறைந்தது 100 அடிமைகளை வைத்து வேலை வாங்குகிறார்கள். சாதாரணமானவர்கள் வீடுகளில் குறைந்தது 10 அடிமைகளாவது இருப்பதைக் காணமுடிகிறது.

தப்பிச் செல்ல முயலும் அடிமைகளைப் பிடித்து வந்தால், அவர்கள் மீண்டும் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களை சித்ரவதை செய்து, கால் அல்லது கழுத்தில் இரும்பு வளையம் மாட்டுகிறார்கள்.

மன்னரின் அரண்மனை முன்பு 12 சிறிய கோபுரங்கள் உள்ளன. எந்தக் குடும்பங்களுக்கு இடையிலாவது பிரச்சினை ஏற்பட்டு வழக்காக மாறினால், இரண்டு தரப்பிலிருந்தும் ஒவ்வொருவரை அழைத்து வந்து, அந்த கோபுரத்தில் அடைக்கிறார்கள். அங்கு இருக்கும் நாட்களில் யாராவது உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவரே குற்றவாளி என்று மன்னர் தீர்ப்பு கூறுகிறார்.

மிகப்பெரிய குற்றங்களுக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுகின்றன.

கள்ளக்காதலில் ஈடுபடுபவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு தனது சொத்து முழுவதையும் கொடுக்கும் வரை சித்ரவதை செய்யப்படுகிறார்.

உயிருள்ள மனிதர்களின் பித்தப்பையை பறிக்கும் வழக்கம் ஏற்கனவே இருந்ததாம். இரவில் தனியாக நடந்து செல்பவர்களை வழி மறித்து அவர்களது வயிற்றைக் கீறி பித்தப்பையை எடுத்து விடுவார்கள். அதிக சக்தி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்தப் பித்தப்பையை மதுவில் ஊற வைத்துக் குடிப்பார்கள். ஆனால் நான் சென்ற சமயம் இந்தப் பழக்கம் குறைந்து இருந்தது.

மன்னர் தினமும் இரண்டு முறை பொது மக்களை சந்திப்பது உண்டு. இந்த நிகழ்ச்சிக்காக அவர் வரும் போது, தூரத்தில் முரசுகள் முழங்கப்படும். அந்த சத்தத்தைக் கேட்ட உடன், அங்கே கூடி இருக்கும் மக்கள், இரு கைகளையும் கூப்பியபடி தலையை மண் மீது வைத்து வணங்க வேண்டும். முரசு சத்தம் நின்ற பிறகே அவர்கள் தலையை உயர்த்த வேண்டும்.

விழா நாட்களில் மன்னரின் அலங்கார ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

முதலில் குதிரைப்படை அணிவகுத்து வரும். அவர்கள் பின்னே இசைக் கலைஞர்கள் இசை எழுப்பியபடி வருவார்கள்.

அவர்களைத் தொடர்ந்து, அழகிய உடை அணிந்த 500 இளம் பெண்கள், கைகளில் எரியும் மெழுகுவர்த்தி ஏந்தி வருவார்கள். அவர்களின் பின்னே, தங்கம் மற்றும் வெள்ளியிலான பாத்திரங்களை அரண்மனைப் பெண்கள் எடுத்து வருவார்கள்.

அவர்களைத் தொடர்ந்து பெண்களைக் கொண்ட பாதுகாப்பு படையினர் வருவார்கள். அந்த பெண்கள் கைகளில் வாள் மற்றும் கேடயம் ஏந்தி இருப்பார்கள்.

அடுத்து அமைச்சர்கள், இளவரசர்கள் யானைகளின் மீது ஏறி வருவார்கள். அவர்களைச் சுற்றி பாதுகாப்பாக வரும் வீரர்கள், தங்கத்திலான அலங்கார குடைகளைப் பிடித்து இருப்பார்கள்.

அதன் பிறகு ராணி, இளவரசிகள், அந்தப்புர அழகிகள் ஆகியோர், யானை, பல்லக்கு, அல்லது அலங்கார வண்டி ஆகியவற்றில் அணிவகுத்து வருவார்கள்.

இறுதியாக மன்னர், மிகப்பெரிய யானை மீது நின்றபடி கையில் தங்க வாள் ஏந்தி மிடுக்குடன் வருவார். மன்னரைச் சுற்றி பாதுகாப்பு வீரர்கள் அரணாக இருப்பார்கள்.

மன்னரை பார்த்ததும் அவருக்குக் குனிந்து மரியாதை செய்ய வேண்டும். அவ்வாறு மரியாதை செய்யத் தவறுபவர்களைக் கண்காணித்துப் பிடிக்க தனியாக ஆட்கள் இருப்பார்கள்.

மன்னர் வரும்போது வாணவேடிக்கை, அரங்கமே அதிரும் வகையில் நடத்தப்படும். இந்தக் காட்சிகளைப் பார்க்க நகர மக்கள் அனைவரும் அங்கே திரண்டு இருப்பார்கள்.

இவ்வாறு சீனத்தூதர் சவ் தா குவான் வெளியிட்ட தகவல்கள் மூலம் அந்தக்கால கம்போடிய மன்னர்கள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய கம்போடிய மன்னர்களும், அப்போது இருந்த கலைஞர்களும் உருவாக்கிய கலைச்சிறப்பு மிக்க கோவில்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அடுத்து தொடர்ந்து பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்).

கூவி விற்கப்படும் குட்டிப்பாம்பு வறுவல் ஒரு டாலர்

கம்போடியர்களின் முக்கியமான உணவு அரிசியும் மீனும் ஆகும். அரிசி மாவை மூங்கில் குழாயில் வைத்து அவித்து விற்கப்படும் புட்டு, குழிப்பனியாரம் போன்றவையும் அங்கே அதிக அளவில் விற்கப்படுகின்றன.

அதே சமயம் அவர்கள், சிலந்தி, தேள் உள்பட எல்லா விதமான பூச்சிகளையும், கடலில் கிடைக்கும் அத்தனை உயிரினங்களையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நமது ஊர்களில் தள்ளு வண்டியில் வைத்து வறுகடலை விற்பது போல, எல்லா இடங்களிலும் சிறிய நத்தைகளை வறுத்து குவித்து, வண்டிகளில் வைத்து விற்பதைக் காண முடியும்.

மீன்களின் தலை மற்றும் குடல் பகுதியை எடுக்காமல், அப்படியே ‘கிரில்’ அடுப்பில் வேக வைத்து சாப்பிடு கிறார்கள்.

அதே போல, வாழைப்பழத்தை உரித்து அதையும் ‘கிரில்’ அடுப்பில் வேக வைத்துக் கொடுப்பது வித்தியாசமாக இருக்கிறது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களில், அரை அடி நீளம் உள்ள குட்டிப்பாம்புகளையும், கருந்தேள்களையும் தலா ஒரு டாலர் என்று கூவிக்கூவி விற்கிறார்கள்.

இந்தக் காட்சியைப் புகைப்படம் எடுக்க நினைக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் அரை டாலர் கட்டணம் வசூலிக்கும் இளம் பெண்களையும் சிறுவர்களையும் அதிக அளவில் பார்க்கலாம்.

Next Story