சிறப்புக் கட்டுரைகள்

ஆசிரியர்களும், தகுதி தேர்வும் + "||" + Teachers and qualifying examination

ஆசிரியர்களும், தகுதி தேர்வும்

ஆசிரியர்களும், தகுதி தேர்வும்
ஒரு குழந்தையை சமூக மனிதனாக வளர்த்தெடுக்கும் மிக முக்கிய பொறுப்பு தான் ஆசிரியர் பணி. ஆதிசூத்திரரும், சூத்திரரும், பெண்களும் கல்வி பெற இயலாது என்று இருந்த காலத்தில் ஜோதிராவ் பூலே கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பள்ளிகள் திறந்தார்.
இந்திய பொதுப் பள்ளி முறைமையின் தந்தை என்ற பெருமைக்குரியவர் தான் மகாத்மா ஜோதிராவ் பூலே. பெண்களுக்கு கல்வி கற்றுத் தரவேண்டும் என்றவுடன் ஆசிரியர் பணிக்கு யாரும் வர முன்வரவில்லை. சவால்களை எதிர்கொண்டே பழகிவிட்ட ஜோதிராவ் பூலே, சற்றும் தளராமல் தன் மனைவி சாவித்திரிபா பூலேவை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள சொன்னார். சாவித்திரிபா பூலே பயிற்சியை முடித்து ஆசிரியர் பணியில் ஈடுபட்ட போது பெறும் எதிர்ப்பையும், அவமானங்களையும், சந்திக்க நேர்ந்தது. சாலையில் ஆண்கள் மறித்து நிற்பதும், தடையை தகர்த்துவிட்டு முன்னேறினால், மறித்து நின்றவர்கள் சும்மா விடவில்லை, கையில் கிடைத்ததை எல்லாம் அவர் மீது வீசத் தொடங்கினர். இவையனைத்தையும் சகித்துக் கொண்டு தான் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் சாவித்திரிபா பூலே. 19-ம் நூற்றாண்டில் ஜோதிராவ் பூலேவும், சாவித்திரிபா பூலேவும் நடத்திய மகத்தான போராட்டம் தான் இன்று எல்லோரும் சமமாக படிக்கும் வாய்ப்பை தந்துள்ளது. இந்திய கல்வி வரலாற்றில் மராட்டியத்தில் நடந்த இப்போராட்டம் மிக முக்கியமானது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற பள்ளிகள் திறந்திட கேரளத்தில் அய்யங்காளியும், தமிழ்நாட்டில் அயோத்திதாச பண்டிதரும் பெரும் போராட்டங்களை நிகழ்த்தினர்.

சிக்கல் எழும் இடத்தில் தான் தீர்வும் உண்டு. கேள்வி எழும் இடத்தில் தான் பதிலும் இருக்கும். தன்னுடன் உள்ள கேள்விக்கு தன்னிடமே பதில் உள்ளது என்பதை மக்கள் அறியாமலேயே இருப்பர். மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கே சொல்லுங்கள் என்ற கற்றல் முறையை 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் முன்வைத்தார்.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டின் பவுலோ பிராய்ரே 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளர். இன்றைய கல்வி முறையை வங்கி கல்வி முறை என்று விமர்சித்த இவர், உரையாடல் கல்வி முறையே சிறந்த கற்றல் முறை என்று கூறினர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளிவந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி தருவதாகவும், ஆசிரியர் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளதை காட்டுவதாகவும் புலம்புவோருக்கு மேற்சொன்ன கல்வி வரலாறு ஏதேனும் தெரியுமா? ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்வி தயாரித்தவர்களுக்காவது இந்த விவரங்கள் தெரியுமா? தகுதித் தேர்வில் முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளவர் 1882-ல் மில் ஹண்டர் கமிஷன் முன் ஜோதிராவ்பூலே தந்த மனுவை ஒரு முறை படித்திருப்பாரா?

கேட்கப்பட்ட கேள்விக்கு எதிர்பார்க்கப்பட்ட விடையை எழுதி இருந்தால் அவர் தகுதி பெற்றவர் என்று சான்றளிக்கும் தேர்வு முறையின் மூலம் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது.

தேர்ச்சி பெறாமல் போனவர்கள் பெற்ற கல்வியியல் பட்டம் / பட்டயம் செல்லாதா? அல்லது பட்டம் தந்த பல்கலைக்கழகம் / பட்டயம் தந்த தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தகுதியற்றதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும்.

ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாள். அதன்பின் மே மாதத்தில் மதிப்பீடு, மாணவர் தேர்ச்சி அறிவிப்பு என்று எல்லா பணியையும் முடித்து ஜூன் முதல் வாரத்தில் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது நியாயமற்ற அணுகுமுறை. ஆசிரியர்களை சிறுமைப்படுத்தவும், ஆசிரியர் பணி மேற்கொள்ள தகுதியற்றவர் என்று அறிவிக்கவுமே இந்த தகுதித் தேர்வு நடத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ஆசிரியர் பணிக்கு புத்தகத்தில் உள்ள? விவரங்கள் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. மாணவர்களை நேசிக்கவும், சமூகத்தில் உள்ள சிக்கல்களை உணர்ந்து பாகுபாடற்ற சூழலை மாணவர்களுக்கு உருவாக்கி தருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

சார்பியல் கோட்பாட்டை மட்டுமே கற்றுத் தருவதில்லை ஆசிரியர் பணி அறிவியல் பாடத்தில் வரும் சார்பியல் கோட்பாட்டை சமூக அறிவியலுடன் பொருத்திப் பார்க்க மாணவருக்கு உதவுவதே மெய்யான ஆசிரியர் பணி.

கண்ணியமிக்க இப்பணியை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை விடுத்து ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களை பணியில் அமர்த்தி, பணிக்காலத்தில் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்ற தேவைப்படும் பயிற்சிகளை வழங்கி அரசு முன்வர வேண்டும்.

ஆசிரியர் பணிக்கு வர விரும்புபவரை சிறுமைப்படுத்தும் சமூகம் ஒரு நாகரீகமான சமூகமாக இருக்க இயலாது.

தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட பணி ஆசிரியர் பணி. தங்கள் மகனை, மகளையாவது எப்பாடுபட்டும் ஆசிரியர் ஆக்கிவிட வேண்டும் என்ற கனவுகளோடு தன் காணி நிலத்தையும் விற்று ஆசிரியர் பயிற்சிக்கு தன் குழந்தையை அனுப்பிவைத்த தாயும் தந்தையும் பயிற்சி முடித்து ஆசிரியர் ஆகும் தகுதியான கல்வியியல் பட்டம், பட்டயம் பெற்றபின் மீண்டும் ஒரு தகுதி தேர்வு என்றவுடன் இடிந்து போய் அமர்ந்து விட்டனர் ஏழை விவசாயிகளும் தொழிலாளர்களும். பட்டம் பயனற்றதா? பட்டயம் பயனற்றதா? வீட்டை, நிலத்தை, நகையை அடகு வைத்து வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது? பெண்ணுக்கு வேலை கிடைத்தால் தான் திருமணம்? வாழ்க்கையே நொறுங்கி விட்டது என்ற தவிப்பில் உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்தி, ஆசிரியர் பணியின் பின்னணியில் உள்ள சமூக அரசியலை உணர்ந்து வரலாற்று பார்வையுடன் இச்சிக்கலை தீர்க்க உதவ முன்வர வேண்டும். தரமான கல்வி நம் குழந்தைகள் பெற, ஆசிரியர் பணியில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள சமூக அக்கறையுடன் குழந்தைகளை நேசிக்கும் கல்வியியல் படிப்பு முடித்த நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும். தங்களின் அணுகுமுறையினால் மாணவர்களை ஈர்த்து, அவர்களின் ஆர்வத்தை துண்டி, அவர்கள் கற்க உதவும் பண்பாட்டு ஊழியர்களே ஆசிரியர்கள் என்பதை புரிந்து செயல்படுவோம்.

- பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை.


தொடர்புடைய செய்திகள்

1. ”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.