ஆண் பெண்ணுக்குள் அலையடிக்கும் ஆசைகள்


ஆண் பெண்ணுக்குள் அலையடிக்கும் ஆசைகள்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM GMT (Updated: 24 Aug 2019 5:44 AM GMT)

இளைய தலைமுறையின் திருமண ஆசைகள் இப்போது புது மாதிரியாக இருக்கின்றன. முன்பு ‘அதை எல்லாம் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள்’ என்று கூறிக்கொண்டு, எதையும் வெளிப்படையாக பேசாமல், அமைதிகாத்தவர்கள் இப்போது, தங்கள் ஆசைகளை எல்லாம் மனந்திறந்து பேசு கிறார்கள்.

சட்டப்படி ஆண்கள் 21 வயதிலும், பெண்கள் 18 வயதிலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் திருமணத்திற்கு வயது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்பது இளையதலைமுறையில் ஒருதரப்பினரின் கருத்தாக இருக் கிறது. ‘எங்களின் வயதை மட்டும் கணக்கில்வைத்துக் கொண்டு சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று யாரும் எங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. வயது அதுபாட்டுக்கு கடந்துகொண்டிருக்கட்டும். எங்களுக்கு எப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்வோம்’ என்று அவர்கள் பெற்றோரிடம் வெளிப்படையாக சொல் கிறார்கள்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 76 சதவீத இளைய தலைமுறையினர் 25 முதல் 30 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 11 சதவீதம் பேர் மிகுந்த துணிச்சலோடு 30 முதல் 35 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டால் போதும் என்கிறார்கள். 13 சதவீத பெண்கள் 25 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணத்தில் இணையும் ஆணைவிட, பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாக கருதப் படுகிறது. இப்போது அந்த சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐதராபாத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயருக்கு பெற்றோர் பெண் தேடினார்கள். அழகான பெண்ணை தேர்வும் செய்தார்கள். இருவருக்கும் பிடித்துப்போய், அவர்கள் மனம்விட்டு தினமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த நிலையில் பெற்றோர் புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பிவிட்டார்கள். அதாவது ‘பையனைவிட பெண்ணுக்கு ஒரு வயது அதிகம். எங்கள் குடும்பத்தில் எந்த ஆணும் இப்படி தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்ததில்லை’ என்றார்கள். ஆனால் அந்த இளைஞனோ, அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை. இது ஐந்து வருடங்களுக்கு முந்தைய சம்பவம்.

இப்போது தன்னைவிட ஒரு வயது, இரண்டு வயது அதிகமுள்ள பெண்களையும், இளைஞர்கள் மகிழ்ச்சியோடு திருமணம் செய்துகொள்கிறார்கள். வயதில் மூத்தபெண் என்றால் அவள் கணவனை அடக்கி ஆள்வாள் என்ற கருத்து திணிப்பெல்லாம் இப்போது எடுபடுவதில்லை.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பங்குபெற்றவர்களில் 49 சதவீதம் பேர், ‘வயதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. மனப்பொருத்தம் இருந்தால் போதும்’ என்று சொல்கிறார்கள். 34 சதவீதம் பேர், ‘ஏற்கனவே நமது முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கும் நெறிமுறைகள் சரிதான். ஆணைவிட பெண் வயது சற்றாவது குறைந்தே இருக்கவேண்டும். கூடுதலாக இருந்தால் வெளியே ஜோடியாக செல்லும்போது, இது உன் அக்காளா? என்ற கேள்வியை எதிர்கொள்ளவேண்டியதாகி விடும்’ என்று கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். ‘எங்களுக்கு பிடித்திருந்தால் வயதிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மணவாழ்க்கையில் இணைந்துவிடுவோம்’ என்பது 17 சதவீதத்தினரின் அழுத்தமான கருத்தாக இருக்கிறது.

எப்படியோ காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இளையதலைமுறை யினரின் கல்யாண ஆசை தொடர்புடைய கருத்துக்களும் மாறிக்கொண்டிருக்கின்றன.

ஆணை, பெண்ணும்- பெண்ணை, ஆணும் புரிந்துகொள்வது என்பது இப்போது ரொம்ப சிக்கலான விஷயமாக இருக்கிறது. முன்பு பெண்பார்க்க செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டார் முன்பு சுவீட், காரம் போன்றவை வைக்கப்படும். அந்த பெண் காபி எடுத்துவருவாள். அவைகளை சாப்பிட்டு, காபியை குடிக்க அதிக பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். அந்த நேரத்திற்குள் பெண்ணை பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை சொல்லவேண்டும்.

அந்த பழைய தலைமுறை கதை எல்லாம் இன்றைய இளையதலைமுறையிடம் எடு படுவதில்லை. ‘சாப்பிட்ட இனிப்பு ஜீரணமாவதற்குள் வாழ்க்கைத் துணையை முடிவு செய் என்று எங்களுக்கு யாரும் கட்டளை போட முடியாது’ என்கிறார்கள். அப்படியானால் இதில் உங்கள் ஆசைதான் என்ன? என்று கேட்டால், சர்வேயில் பங்குபெற்றவர் களில் 39 சதவீதம் பேர், ‘குறிப்பிட்ட காலம் காதலித்து நன்றாக புரிந்துகொண்ட பிறகே திருமணத்திற்கு சம்மதிப்போம்’ என்கிறார்கள். ‘நாங்கள் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறோமோ அவரிடம் குறைந்தது ஆறு மாதமாவது பழகவேண்டும்’ என்று 48 சதவீதம் பேர் சொல்கிறார்கள். 13 சதவீதம் பேர் மட்டும் ‘பழைய காலத்து முறையே போதும். நாங்கள் பெற்றோரோடு சேர்ந்து லட்டு, மிக்சர் சாப்பிட்டுவிட்டு அவர்கள் விரும்பினால் ‘ஓகே’ சொல்லிவிடுவோம்’ என்கிறார்கள்.

Next Story