சிறப்புக் கட்டுரைகள்

ஆகஸ்டு... மன அழுத்தம் நிறைந்த மாதம் + "||" + The month of August Its been a stressful month in the special story pages

ஆகஸ்டு... மன அழுத்தம் நிறைந்த மாதம்

ஆகஸ்டு... மன அழுத்தம் நிறைந்த மாதம்
அருண் ஜெட்லி என்னுடைய நீண்ட நாள் நண்பர் - எம்.வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி.
கடந்த 11-ந்தேதி டெல்லி மருத்துவமனையில் அவரை நான் சந்தித்தபோது, விரைவில் பூரண குணம் அடைந்துவிடுவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்தேன். என் மீது கைகளை வைத்தவாறு, உற்றுநோக்கியபடி நலமுடன் இருக்கிறேன் என்று அவர் செய்கையில் தெரிவித்தார். அவருடன் கைகுலுக்குவது இதுதான் கடைசியாக இருக்கும் என்று அப்போது நான் நினைக்கவே இல்லை. பிரியா விடை கொடுத்துவிட்டு இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு விலகிச்செல்வார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவர் இனி ஒருபோதும் பணிக்கு திரும்பமாட்டார் என்பதை என்னுடைய மனம் ஏற்க மறுக்கிறது. எங்களுடைய கல்லூரி நாட்களில் இருந்தே சுமார் 40 ஆண்டுகளாக அவருடைய அறிவாற்றல் மற்றும் மதிநுட்பத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன். 1974-ம் ஆண்டு மாணவர்கள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் தான் நான் முதல் முறையாக அருண் ஜெட்லியை சந்தித்தேன். அவர் டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்க வந்திருந்தார். நான் ஆந்திரா பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்றேன். அதில் இருந்து ரத்த உறவுகளைப்போன்று, பரஸ்பர உரிமை மற்றும் சார்பு உள்ளிட்ட செயல்பாடுகளுடன், எங்களுடைய அரசியல் பயணம் மற்றும் நட்பு ஒருசேர தொடர்ந்து கொண்டேதான் வந்தது.


விதியின் கொடுமையால் இப்படி ஒரு உயிர் நண்பனை திடீரென இழந்து தவிக்கிறேன். என் நண்பனின் மரணம் என்னை உலுக்கிவிட்டது. அருண் ஜெட்லி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார். பரந்து விரிந்த அறிவாற்றலால் சமகால இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட அருண் ஜெட்லி 66 வயதில் நம்மை விட்டு மறைவார் என்று யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. அவருடைய தூய சிந்தனை, தகவல்தொடர்பு திறமைகள், முற்போக்கு திறமை உள்ளிட்டவற்றால் அவர் உயர்ந்த நிலையை எட்டினார். அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் சிறந்த செய்தித்தொடர்பாளராக விளங்கினார்.

அவருடைய மறைவால் இந்த நாடு முற்போக்கு குரலை இழந்துவிட்டது. சட்டப்படிப்பு படித்ததோடு, அதில் பயிற்சியும் பெற்றவர் என்பதால் வாதாடி வெற்றி பெறும் கூர்மையான அறிவாற்றல் உடையவராக திகழ்ந்தார். பொதுமக்கள் சார்ந்த முக்கிய விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று ஆராய்ந்து முடிவு எடுப்பதில் ‘ஹால்மார்க்’ ஆக திகழ்ந்தார். பல்வேறு விவகாரங்கள் சார்ந்த அவருடைய வலைப்பதிவுகள் தகவல் மற்றும் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை பலரின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

1974-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக இருந்தார். 1977-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்துக்கு பின்னர் ஜனதா கட்சி நிறுவப்பட்டபோது அதன் தேசிய செயற்குழுவில் இடம்பெற்ற இளமையமான உறுப்பினரும் அவர்தான். அதில் இருந்து நமது நாட்டின் அரசியலில் கொடி கட்டி பறந்தார். அவர் 1991-ம் ஆண்டில் இருந்து பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகியாக இருந்தபோது கட்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளை பல்வேறு வழிகளில் கூறலாம். நான் பா.ஜ.க. தலைவராக இருந்தபோது கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய பிரிவான நாடாளுமன்ற குழுவில் சுஷ்மா சுவராஜ் உடன் அவரையும் உறுப்பினராக நியமித்தேன். பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில், தனக்கே உண்டான திறமையை கையாண்டு எண்ணற்ற தீர்மானங்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

நிதித்துறை, பாதுகாப்புத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, கப்பல் போக்குவரத்துத்துறை, ஒலிபரப்பு துறை உள்ளிட்ட அவர் மந்திரியாக பொறுப்பு வகித்த துறைகளில் முத்திரை பதித்தவர். ஜி.எஸ்.டி. சட்டம், பண மோசடி மற்றும் ஊழல் செய்வதை தடுப்பதற்கான சட்டங்களை இயற்றுதல் என பொருளாதார வளர்ச்சிக்காக அவர் ஊக்கம் கொடுத்ததன் மூலம் பல்வேறு சட்டங்களை இயற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். உடல் நலிவடைந்த நிலையில் 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை நிதி மந்திரியாக இருந்தபோதும் அரசியல் பொருளாதாரத்தை மிகவும் நயமாக கையாண்டார். அந்த காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சியாக பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்திருக்கிறார். 2009-ம் ஆண்டு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக யார் இருக்கவேண்டும்? என்ற விவகாரம் எழுந்தது. அப்போது நாங்கள் இரண்டு பேரும் மாறி, மாறி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினோம். நிறைவாக அவரே ஏற்றுக்கொண்டார். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மேலவையில் நிறைவேற அவர் முக்கிய பங்காற்றினார். பொதுமக்களுக்கான உரிமைகள் இயக்கத்திலும் தன்னார்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவசரநிலையை எதிர்த்ததற்காக 1977-ம் ஆண்டு என்னை போன்றே அவரும் 19 மாதங்கள் சிறை வாசத்தை அனுபவித்தார். இந்தியாவை உயர்த்துவதற்கு தன்னுடைய தகுதியை மீறி அரும்பாடுபட்டவர். சிறு வயது முதலே பொதுவாழ்க்கையில் கண்ணியத்துடன் செயல்பட்டார். ஜெய பிரகாஷ் நாராயண் 1973-ம் ஆண்டு தொடங்கிய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் துடிப்புடன் பங்கேற்றார். பின்னர் லோக்பால் மசோதாவுக்காக அண்ணா ஹசாரே நடத்திய போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்தார். நிதி மோசடிகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றுவதற்கு அருண் ஜெட்லியின் ஊழலுக்கு எதிரான அவருடைய செயல்பாடுகள் காரணமாக அமைந்தது. அருண் ஜெட்லி சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார்.

2014 முதல் 2019-ம் ஆண்டு வரை மந்திரியாக பதவி வகித்த காலக்கட்டத்தில் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதங்களில் சிறந்து விளங்கினார். அடிப்படை பொறுப்பில் இருந்து அரசு மற்றும் தன்னுடைய கட்சிக்கு சமரசம் செய்யாமல் தீர்வுகளை வழங்குவதில் உள்ளார்ந்தவராகவும், தனித்துவமானவராகவும் திகழ்ந்தார். மாநிலங்களவை ஸ்தம்பிக்கும் நேரத்திலும் அவர் சிறப்பாக செயல்படுவதை அவையின் தலைவராக இருந்து பார்த்திருக்கிறேன். உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்களை அறிவாற்றலால் புரிந்துகொண்டு சிறப்பாக செயல்படுபவர். இதுதான் மற்றவர்களுக்கும், அவருக்கும் உள்ள வேறுபாடு. ஆழ்ந்த அறிவுசார்ந்த, பகுத்தாயும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவை அவருக்கு எழுச்சிமிகுந்த குரலை கொடுத்தது. அதை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அந்த குரல் தற்போது நம்மிடம் இல்லை. ஆனால் அது நம்மிடம் சொத்தாக இருந்து, நம்மை வழிநடத்தும். கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அலுவலகத்துக்கு செல்ல முடியாது என்பது நீதியாகாது என்பதை உணர்ந்து அரசிடம் இருந்து விலகியே இருந்தார். இவர் ஒரு விசித்திரமான மனிதர். தனிப்பட்ட முறையில் நாங்கள் 2 பேரும் உணவுப்பிரியர்கள். எங்களுடைய தொடக்க நாட்களில் பிரபலமான ஓட்டல்களுக்கு சென்று உணவு வகைகளை சாப்பிடுவோம். பல்வேறு தருணங்களில் என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வருபவர். தனிப்பட்ட முறையில் சமூக, கலாசார நிகழ்வுக்காக நான் செல்லும் ஒரே இடம் அருண் ஜெட்லியின் வீடு தான். சாப்பிடும்போது நாங்கள் 2 பேரும் வளர்ந்து வரும் சிக்கல்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். வழக்கமாக நாங்கள் சந்திக்கும்போது சாப்பாடு பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்போம்.

இந்த ஆகஸ்டு மாதம் மிகவும் மன அழுத்தம் நிறைந்த மாதமாக உருவெடுத்துவிட்டது. அருண் ஜெட்லியின் மறைவுக்கு முன்பு சுஷ்மா சுவராஜ் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோரை குறுகிய இடைவெளியில் நாம் இழந்துவிட்டோம். இந்த 3 தலைவர்களும் திறமைசாலிகளாக இருந்ததோடு, சிறந்த நாடாளுமன்றவாதிகளாக பொதுவாழ்க்கையிலும் அளப்பரிய பங்களிப்புகளை கொடுத்தவர்கள். நீண்ட கால நண்பராக இருந்த அருண் ஜெட்லியை விதி பிரித்தது, என்னையே சிதைத்துவிட்டது. இது தனிப்பட்ட முறையில் எனக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு. அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.

- எம்.வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி