சிறப்புக் கட்டுரைகள்

தென் இந்தியர்களின் தங்க மோகம் + "||" + Golden lust of the South Indians

தென் இந்தியர்களின் தங்க மோகம்

தென் இந்தியர்களின் தங்க மோகம்
தங்கம் அந்தஸ்தின் சின்னமாகவும், முதலீடாகவும், சட்ட விரோத சொத்துகளை பதுக்கவும் பயன்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்க வேட்டை பல போர்களுக்கு காரணமாகவும், நாகரிகங்களை உருவாக்கவும், உறவுகளை கெடுக்கவும் வகை செய்துள்ளது. ஆனாலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. முக்கியமாக இந்தியாவில்,

இந்தியாவில், ரிசர்வ் வங்கி தங்கத்தை சேகரிக்கிறது. தொழில் அதிபர்கள் சட்ட விரோதமான பணத்தை சேமிக்கவும், நிழல் உலக குற்றவாளிகள் பதுக்கவும், நடுத்தர வர்க்கத்தினர் இதை வாங்கி, அணிந்து, பெருமை அடிக்கவும், முதலீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடவுள்களும் இதில் இருந்து தப்புவதில்லை. கோவில்களில் உள்ள விக்கிரகங்களுக்கு தங்கம் அளிக்க பக்தர்கள் போட்டியிடுகின்றனர்.

மனித வரலாற்றில் பணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பல நாகரிகங்களில் தங்கம் ஒரு மதிப்பு மிகுந்த உலோகமாக கருதப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகளை போல் அல்லாமல், தங்கம் உலகெங்கும் ஏற்கப்படுகிறது.

தங்கம் இல்லாமல் திருமணங்கள் நடைபெறுவதில்லை. முக்கியமாக தென் இந்தியாவில், தங்க மோகம் மிக அதிகம். 

வரலாற்றாசிரியர் கபில் குமார் கூறுகிறார், ‘‘இந்தியர்கள் மட்டுமே தங்கத்தின் மீது மோகம் கொண்டவர்கள் அல்லர். தங்கம் ஒரு விலைமதிப்பு மிகுந்த, அபூர்வமான பண்டம். வரலாற்று பூர்வமாக பார்க்கையில், அது செல்வச் செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் சின்னமாக மாறியுள்ளது. தங்கத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது. சேமிக்க மிக எளிமையானது. பண்டைய காலங்களில் மதிப்பு மிகுந்த பண்டமாக கருதப்பட்டது. தங்கத்தின் மூலம் பணம் செலுத்துவது சுலபமானது. பழைய அமைப்புகளில் லஞ்சமும் இதன் மூலம் அளிக்கப்பட்டது. இந்த சவுகரியங்கள் அதிக மாற்றமில்லாமல் இன்றும் தொடர்கின்றன.’’

செல்வத்தின் சின்னம்

1982–ல் இந்தியாவின் ஆண்டு நுகர்வு 65 கோடியாக இருந்தது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை 71.31 கோடி. 2018–ல் தங்க நுகர்வு 760.4 டன்களாக அதிகரித்தது. கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டு தங்க நுகர்வு 700 டன்களாக உள்ளது. மக்கள்தொகை இரண்டு மடங்கான நிலையில், தங்க நுகர்வு 10 மடங்கு அதிகரித்துள்ளது. 

செல்வ செழிப்பு அதிகரித்து வருவதால், தங்கத்திற்கு இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. நாட்டின் கலாசாரத்தில் தங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சேமிப்புகளை பாதுகாக்கவும், செல்வ செழிப்பு மற்றும் அந்தஸ்தின் சின்னமாகவும், பல முக்கிய சடங்குகளின் அடிப்படை அம்சமாகவும் திகழ்கிறது. தங்கத்தை எளிதில் எடுத்து செல்ல முடிவதாலும், பாதுகாப்பான முதலீடாக இருப்பதாலும் கிராமப்புற மக்களிடம் தங்க மோகம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு சிறு நகரத்திலும், பல நகை கடைகள் இருப்பதை காண முடியும். சிறு மற்றும் குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள நகை வியாபார துறையில், சமீப காலங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. டாடா நிறுவனத்தின் தனிஷ்க் இதில் இறங்கியுள்ளது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் திட்டங்களுடன் இவை தங்கத்திற்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளன. 

விரிவடையும் தங்க சந்தை

இந்தியாவில் திருமண காலங்களில் அதிக அளவில் தங்க விற்பனை நடக்கிறது. பிராந்திய புத்தாண்டு தினம், அட்சய திரிதியை அல்லது தனதேரஸ் மற்றும் தீபாவளி ஆகிய மங்களகரமான தினங்களில் தங்கம் வாங்குவது வழக்காக உள்ளது. பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும், புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் பரிசளிப்பர். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. இந்தியர்கள் அனைத்து வகை விசே‌ஷங்களையும், தங்கம் வாங்க ஒரு வாய்ப்பாக கருதுகின்றனர். 

இப்போது நகைக்கடைகள் இந்த விசே‌ஷ நாட்களை, சிறப்பு சலுகை திட்டங்கள் மூலம் தீவிரமாக விளம்பரம் செய்து, தங்களின் விற்பனையை கூட்ட முயல்கின்றனர். நகை மற்றும் ரத்தின கற்கள் துறை, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 7 ஆயிரத்து 500 கோடி டாலர் என்று கணிக்கப்படுகிறது. இது 2015–ல் 10 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7 சதவீதத்தை அளிக்கிறது. 

இந்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்திய ‘‘இந்தியாவின் தங்க சந்தையை மாற்றி அமைத்தல்’’ என்ற ஆய்வு, இந்திய உள்நாட்டு உற்பத்தியில், தங்க நகை துறையின் பங்களிப்பு தற்போது உள்ள 1.3 சதவீதத்தில் இருந்து 2022–ல் 3 சதவீதமாக உயரும் என்று கூறுகிறது. இதேபோல் இந்த துறையில் தற்போது உள்ள 61 லட்சம் வேலை வாய்ப்புகள், 2022–ல் 100 கோடியாக உயரும் என்று கருதப்படுகிறது. 

சமீபத்தில் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்ட சுங்க வரியினால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 3 சதவீத ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்படும் போது, உலக சந்தையை விட இங்கு 15.5 சதவீதம் விலை அதிகரிக்க செய்கிறது. ஆனால் பன்னாட்டு சந்தையில் தங்கம் விலை அதிகரித்தாலும் சரி, இந்திய அரசு, உள்நாட்டு தங்க கொள்முதலை குறைப்பதன் மூலம் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த, இறக்குமதி வரியை அதிகரித்தாலும் சரி, இந்தியர்கள் மேலும் மேலும் தங்கம் வாங்குகின்றனர். ஆண்டுக்கு 15 சதவீதம் இது அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் தங்க நுகர்வு

‘‘90களில், அன்னிய முதலீடுகளுக்கு இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்டபோது, நாம் புதிய வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டோம். புதிய வேலை வாய்ப்புகள், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பல்வேறு இதர வாய்ப்புகள் உருவாகின. ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தினரை இது உருவாக்கியது. இயல்பாகவே இவர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான, சுலபமாக பணமாக மாற்றத்தக்க சொத்தாக கருதுகின்றனர்’’ என்று 15 ஆயிரம் கோடி ரூபாய் விற்று முதல் கொண்ட கல்யாண் ஜூவல்லரியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான டி.எஸ்.கல்யாணராமன் கூறுகிறார்.

மற்றொரு முக்கிய தங்க நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான ஜாய் ஆலுக்காஸ் இதற்கு 1991–ல் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலை காரணமாக சொல்கிறார்.

‘‘அதிகரிக்கும் அன்னிய முதலீடுகள், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட சந்தைகள், இறக்குமதி மற்றும் இதர வரிகள் குறைப்பு ஆகியவற்றினால் பொருளாதாரம் உந்தப்பட்டு, 1990–கள் மற்றும் 2000–களில் பெரும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்தது’’ என்கிறார். வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றமும், அதிகரிக்கும் வருமான விகிதங்களும் மக்களை தங்கம் வாங்க தூண்டியது.

தாராளமயமாக்கல், தங்க நகை கடை குழுமங்கள், நாடு முழுவதும் விரிவுபடுத்த உதவியது. கிராமப்புற பகுதிகளில் வரலாறு காணாத தங்க நுகர்வுக்கு வகை செய்தது. இந்த காலகட்டத்தில் பெரு நிறுவனங்கள் நாடு முழுவதும் தம் கிளைகளை பரப்பினர். மாநில அளவிலான பெரு நிறுவனங்களும் உருவாகின. 

தங்க நுகர்வில் 50 சதவீதம் நகைகளாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள தங்க பாளங்கள் மற்றும் தங்கக்காசுகள், 25 சதவீத பங்கை கொண்டுள்ளன. தங்கத்தை யார் வாங்குகின்றனர் என்பதே கேள்வி. நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகம் வாங்குகின்றனர் என்பது ஒரு பொது கருத்து. 

பொருளியல் அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா மாறுபடுகிறார். ‘‘அதீத தங்க நுகர்வு, சமூகத்தின் மேல் தட்டில் இருந்து வருகிறது. மிகப்பெரும் பணக்காரர்கள். தாராளமயமாக்கலுக்கு பிறகு இவர்களின் வருமானம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த போக்கு தொடர்கிறது. இவர்கள் தான் அதிக அளவில் தங்கம் வாங்குகின்றனர்’’ என்கிறார்.

தங்கம் வாங்க தூண்டும் சமூக அழுத்தம்

இந்தியாவின் மொத்த செல்வத்தில் 60 சதவீதம், ஒரு சதவீத குடும்பங்களிடம் குவிந்துள்ளது. ‘‘வரலாற்று பூர்வமாக சமமற்ற பகிர்ந்தளிப்பையே நாம் கண்டு வருகிறோம். தாராளமயமாக்கலுக்கு பிறகு இது பல மடங்கு அதிகரித்துள்ளது. சட்ட விரோதமாக சொத்து சேர்ப்பதும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் ஒரு பெரும் பகுதி தங்கம் வாங்க செலவிடப்படுகிறது’’ என்கிறார் பேராசிரியர் ஆதிரேயா.

இவரின் கருத்துகளை எதிரொலிக்கும் வரலாற்றறிஞர் குமார் ‘‘அதிக வருமானம் கொண்டவர்கள் திருமணங்களில் அதிக செலவு செய்கின்றனர். அவற்றை மிக ஆடம்பரமாக நடத்துகின்றனர். இது செல்வ செழிப்பை பறைசாற்ற ஒரு வாய்ப்பு. தங்க நகைகள் மற்றும் நவரத்தினங்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவது இப்போது நாகரிகமாகிவிட்டது.

சமூகத்தில் இருந்து வரும் அழுத்தம், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் இதை பின்பற்ற செய்கிறது. இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும், இவர்களின் நுகர்வு அதிகமில்லை. அதீத நுகர்வு, சமூகத்தின் மேல் மட்டங்களில் இருந்தே வருகிறது’’ என்கிறார்.

புவிசார் மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகள் நிச்சயமற்றதாக உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, சீனாவுக்கும்–அமெரிக்காவுக்கும் நடக்கும் வர்த்தக போர் தீவிரமடைவது. மத்திய கிழக்கு பகுதிகளில் கொந்தளிப்பான சூழல், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் அணு ஆயுத ஏவுகணைகள் போட்டியை தீவிரப்படுத்த வகை செய்யும் வகையில், ஏவுகணை சோதனைகள் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் தன்னிச்சையான வெளியேற்றம், ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்கள், வட கொரியாவுடனான ஏவுகணை ஒப்பந்தம், பொருளாதார மந்தம், நிச்சயமற்ற நிலையில் பங்கு சந்தைகள் ஆகியவை ஒரு மோசமான காலகட்டத்தை சுட்டுகின்றன.

‘‘தங்கம் தான் உண்மையான பணம். மற்றவை அனைத்தும் கடன்கள்’’ என்று ஜே.பி.மார்கன் என்ற பழம்பெருமை வாய்ந்த முதலீட்டு வங்கி கூறுகிறது. 

இந்தியர்களின் தங்க மோகத்திற்கு காரணம் இது தான். சிக்கல்கள் அதிகம் உள்ள உலகில் அது தான் பாதுகாப்பான, எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடாக உள்ளது.

தங்க   நகைகள்  செய்யும்  கலை

இந்தியாவில் தங்க நகை செய்யும் முறை 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட கலையாகும். பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில், சோனார், சுனர், ஸ்வரங்கர், பஞ்சல்லர் அல்லது தட்டன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட இந்திய பொற்கொல்லர்கள், கைவினை தங்க நகைகளுக்கு புகழ்பெற்றவர்கள். ஆனால் இன்று தேய்ந்து வருகின்றனர். 

தங்க நகை உற்பத்தியில் எந்திரமயமாக்கல் பெரிய அளவில் நடைபெற்று வருவதால், பாரம்பரியமான பொற்கொல்லர்கள் வேலை இழந்துள்ளனர். உதாரணமாக ஒரு காலத்தில் திருச்சியில் மட்டும் 25 ஆயிரம் பொற்கொல்லர்கள் இருந்தனர். இன்று சுமார் 1,500 பேர் மட்டுமே உள்ளனர்.

வட இந்தியாவில் பொற்கொல்லர் தொழிலில் ஈடுபடும் சுனர் சாதியினர், இந்தியாவில் மிகப் பழமையான சமூகத்தினர் ஆவர். 1851–ல் லண்டனில் நடைபெற்ற மிகப்பெரிய பொருட்காட்சியில், இவர்களின் அற்புதமான தங்க வேலைப்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.  

குச்சிபுடி, கதக் மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடனங்களின் அழகை மெருகூட்ட தங்க நகைகள் பெரிதும் பயன்பட்டன. பல்வேறு செவ்வியல் நாட்டியங்களை ஆடும் நடன கலைஞர்களின் தோற்ற பொலிவை மேம்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன. 

எடை மிகுந்த தங்க நகைகள் மீதான மோகம் இன்று மாறி வருகிறது. எடை குறைந்த நகைகளை இப்போது நாடுகின்றனர். நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த தங்க நகைகளை செய்யும் கலையில், இந்திய பொற்கொல்லர்கள் ஆரம்ப காலங்களிலேயே தேர்ச்சி பெற்றுவிட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன; உலோகங்களை கலக்குதல், வார்த்தல், அரிய கற்களை பதித்தல், தங்கம் மற்றும் வெள்ளியை நுண்ணிய இழைகளாக இழுத்தல், முலாம் பூசுதல், மெருகூட்டல் போன்றவை.

புகழ்பெற்ற நாகர்கோவில் கோவில் நகை செய்யும் முறையில், அரிய வகை ரத்தினங்கள், நுண்ணிய முறையில் தங்க நகைகளில் பதிக்கப்படுகிறது. செவ்வியல் நடனக் கலைஞர்களினால் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

கோவில் நகைகள் செய்யும் கலை சோழர் காலத்தில் தோன்றியது. தமிழக கோவில்களில் உள்ள விக்கிரகங்களை இவை அலங்கரித்தன.

இந்தியாவில் பல பகுதிகளில் தனித்துவமான நகை உற்பத்தி முறைகள் உள்ளன. உதாரணமாக ஒடிசா மற்றும் ஆந்திராவில், வெள்ளியில் செய்யப்படும் நுண்ணிய பிலிகிரி வேலைப்பாடுகள்; ஜெய்ப்பூரில் செய்யப்படும் எனாமல் அல்லது மானாகரி வேலைப்பாடுகள், தமிழகத்தில் நாகர்கோவிலில் கோவில் நகைகள் செய்யும் கலை; டெல்லியில் குந்தன் எனப்படும் தங்கத்தில் அரிய வகை ரத்தினங்களை பதிக்கும் முறை.

இந்திய பெண்கள் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு வடிவிலான  தங்க நகைகளை அணிகிறார்கள். 

தூய்மையை   சோதிக்கும்  முறை

தங்கத்தின் காரட் 10, 12, 14, 18, 22 அல்லது 24 ஆக இருக்கலாம். எண் அதிகரிக்கும் போது தூய்மை அதிகமாக இருக்கும். 24 காரட் தங்கம் தான் மிகத் தூய்மையான தங்கமாகும். இது 99.95 சதவீத தூய்மை வாய்ந்தது.

இந்தியாவில் 22 காரட் தங்கம் மிகவும் பிரபலமானது. நகைகள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 22 காரட் தங்கத்தில் வடிவமைப்பு, வேலைப்பாடுகள் மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் இருக்கும். இது 91.67 சதவீத தூய்மை கொண்டது. (22 பகுதி தங்கம், இரண்டு பகுதி, வெள்ளி, துத்தநாகம், நிக்கல் மற்றும் இதர உலோகங்கள்) இது தங்கத்திற்கு இழுவிசை பலத்தை அளிக்கிறது.

ஹால்மார்க் முத்திரை எனப்படும் தனித்தன்மை சான்று பெறுவதன் மூலம் தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்தலாம். தனித்தன்மை முத்திரை இப்போது மூன்று தரங்களில் கிடைக்கின்றன. 22 காரட் (916) = 22 காரட், 18 காரட் (750) = 18 காரட், 14 காரட் மற்றும் 14 காரட் (585) = 14 காரட். ஜனவரி 1, 2017–க்கு முன்பு வரை, இவை பின்வருமாறு இருந்தன: 958 = 23 காரட், 916 = 22 காரட், 875 = 21 காரட், 585 = 14 காரட் மற்றும் 375 = 9 காரட்.

இந்தியாவில் சுமார் 30 முதல் 40 சதவீத தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரை பெறுகின்றன. 2 கிராம்களுக்கு அதிகமான எடை கொண்ட 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகள் அனைத்துக்கும் கட்டாயமாக ஹால்மார்க் முத்திரை பெறப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு தங்க நகைக்கு ஹால்மார்க் சான்றிதழ் பெற ரூ.35 மட்டுமே செலவாகும்.

தங்கம்  பற்றி...

ஏறக்குறைய, பூமியில் உள்ள அனைத்து தங்கமும், பூமி உருவாகிய பின், 20 கோடி வருடங்கள் கழித்து பூமியை தாக்கிய விண்கற்களில் இருந்து வந்தவை தான்.

இன்னும் 2 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய 62 ஆயிரம் டன் தங்கம், வெட்டி எடுக்கப்படக்கூடிய நிலையில் பூமிக்கடியில் உள்ளது.

ஈரோஸ் என்ற பூமிக்கு அருகே வரும் எரி நட்சத்திரத்தில் 2 ஆயிரம் கோடி டன்கள் எடையுள்ள தங்கம் உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுமானிக்கிறது. தற்போது அது பூமியில் இருந்து 22,34,96,479 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பூமியின் மையப்பகுதியில் உள்ள தங்கத்தை கொண்டு, பூமியின் மொத்த பரப்பை, 1.5 அடி ஆழம் கொண்ட தங்க போர்வையினால் மூட முடியும். 

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்கள் வசம் உள்ளன. அமெரிக்க அரசு, உலக வங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் மொத்த தங்க இருப்பை விட இது அதிகம். 

சுவிட்சர்லாந்துக்கு அடுத்தபடியாக லெபனான் நாட்டில் தான், நபர் ஒன்றுக்கு அதிக அளவு தங்க இருப்பு உள்ளது. அட்டில்லா என்ற புகழ்பெற்ற காட்டுமிராண்டி மன்னன், ரோம சாம்ராஜியத்தின் பகுதிகளை தாக்காமல் இருக்க, பெரிய அளவில் தங்கத்தை ஈடாக பெற்றார்.

தங்கத்தை அதிகம் விரும்புகிறவர் யார்?

இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில், தென் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருப்பதாக தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் அமைப்பு கணிக்கிறது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011–12–க்கான தகவல்களின் படி, நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் தங்க நுகர்வில், கேரளா முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கோவா, கர்நாடகா, இமாசலபிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளன. நகர்ப்புற நுகர்வில் தமிழகம் 2–வது இடத்திலும், அதைத் தொடர்ந்து அரியானா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் உள்ளன.

இந்தியாவில் மொத்தம் 3,50,000 நகை கடைகள் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை குடும்ப நிறுவனங்கள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த துறையில் நுழைந்து, குடும்ப நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளன.

வட கேரளாவில், கோழிக்கோடு அருகே உள்ள கொடுவல்லி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளதால், இது கேரளாவின் தங்க கிராமம் என்று அழைக்கப்படுகிறது. 

தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பில் 25 ஆயிரம் நகை கடைகள் உறுப்பினர்களாக உள்ளனர்.