வானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க்


வானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:28 PM GMT (Updated: 28 Aug 2019 3:28 PM GMT)

சுற்றுச் சூழல் மாசில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவது காற்று மாசுதான். இதனால் நுரையீரல் சார்ந்த, சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களையும் இப்பிரச்சினையானது பாதிக்கிறது. இதிலிருந்து காத்துக் கொள்ள மாசு வடிகட்டிகளை (மாஸ்க்) அணிய வேண்டியது அவசியமாகிறது. இதுவரை தலைநகர் டெல்லியில் மட்டுமே இருந்த இப்பிரச்சினை இப்போது அனைத்து பெரு நகரங்களுக்கும் பரவி வருகிறது. இப்பிரச்சினையிலிருந்து அவரவர் தங்களைக் காத்துக் கொள்ள மாஸ்க் அணிவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

இதை உணர்ந்த பிராணா ஏர் நிறுவனம் சிறுவர்களுக்கு ஏற்ற முகமூடிகளை (மாஸ்க்) தயாரித்துள்ளது. இதில் 5 அடுக்கு வடிகட்டி உள்ளது. இதனால் மிகவும் நுண்ணிய மாசுக்களை 2.5 பி.பி.எம். அளவு வரையானதையும் இது வடிகட்டிவிடும். காற்றில் உள்ள மாசுக்களை இது 96 சதவீத அளவுக்கு வடிகட்டி விடுவதால் சுவாசம் சார்ந்த பிரச்சினையிலிருந்து பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளையும் காக்க முடியும். இதில் உள்ள மோட்டார் காற்றை சுத்தப்படுத்தி சீரான சுத்தமான காற்று கிடைக்க செய்கிறது. அதேசமயம் கரியமில வாயு வெளியேறவும் இதில் வழி உள்ளது.

இதில் உள்ள மோட்டார் 3 விதமான வேகத்தில் சுழலக் கூடியது. இது 5 வோல்ட் லித்தியம் பேட்டரியால் இயங்குகிறது. இது 8 மணி நேரம் தொடர்ந்து செயல்பட உதவும். இது முழுதும் சார்ஜ் ஆக 2 மணி நேரமாகும். இதன் விலை சுமார் ரூ.3,490 ஆகும். அறிமுக சலுகையாக நான்கு மாதங்களுக்கு ரூ.1,000 விலையில் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story