தினம் ஒரு தகவல் : தாய்ப்பாலும் பொருளாதாரமும்...


தினம் ஒரு தகவல் : தாய்ப்பாலும் பொருளாதாரமும்...
x
தினத்தந்தி 31 Aug 2019 8:50 AM GMT (Updated: 31 Aug 2019 8:50 AM GMT)

தாய்ப்பால் கொடுக்காததன் பாதிப்புகள் உலகளாவிய அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தாய், சேய் உடல்நல பாதிப்புகளும், தாய்ப்பால் கொடுக்காததினால் விளையும் பொருளாதாரச் சுமைகளும் உலக அளவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சாட்சியாக சர்வேக்கள் கொடுக்கும் தரவுகள் நிரூபித்திருக்கின்றன.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் அரசாங்கத்தின் மருத்துவச்செலவு ஓராண்டிற்கு, ரூ.727 கோடி என்றும், மக்களின் மருத்துவ செலவு ரூ.25,394 கோடி எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,47,91,524, நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள்-24,70,429, உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் 40,382, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,976, கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,748, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 87,855.

இவை எல்லாம் தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பதும், குறிப்பாக இந்த மதிப்பீடுகள் கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியான தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் செயல்பாட்டைப் பொறுத்து டபிள்யூ.ஏ.பி.ஏ. என்ற அமைப்பு மதிப்பெண் கொடுக்கும். அதில் இந்தியா பெற்றுள்ள மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? நூற்றுக்கு 45.

உலக நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா பெற்றுள்ளது 78-வது இடம். இது எல்லாவற்றையும் விட மோசமான செயல்பாட்டிற்காக இந்தியாவிற்கு ‘ரெட்’ குறி வேறு கொடுத்திருக்கிறார்கள். 2025-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய நிலைக்கான செயல்திட்டத்தையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பவுடர் பாலின் விலை 1 டின் ரூ.500 என்று வைத்துக் கொண்டால், ஒரு வருடத்திற்கு கணக்குப்போட்டால் எவ்வளவு ஆகும்? பணம் இவ்வளவு செலவாவது தெரியாமலேயே வாங்கிக் கொண்டிருப்பார்கள். பால் பவுடரை அடைத்து விற்கும் கன்டெய்னர்களின் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், அதை அப்புறப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு என பாதிப்புகளின் பட்டியல் நீள்கிறது. அது மட்டுமல்லாமல் பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிறு உப்பிசம், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் என்று அடிக்கடி நோய்கள் வருவதால் அதற்காக அடிக்கடி மருத்துவமனைகளில் அனுமதிக்கும் செலவும் கூடுதல் சுமையாகிறது. இந்தக் குழந்தைகளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறுவதால் அடிக்கடி பசி வந்து அழ ஆரம்பிப்பார்கள். செயற்கை பால் பவுடரில் சோயா, சோளம், காய்கறி எண்ணெய் போன்றவற்றை கலந்து செய்வதால், வயிறு உப்பிசம் வந்து குடித்தவுடன் குழந்தை தூங்கிவிடும். இதைப்பார்த்து, குழந்தைக்கு வயிறு நிரம்பி நிம்மதியாகத் தூங்குகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

பார்க்க வேண்டுமானால் குழந்தை புஷ்டியாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், சுறுசுறுப்பாக விளையாட மாட்டார்கள். ஆனால் தாய்ப்பாலில், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், குழந்தை சுறுசுறுப்பாக விளையாடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு தாய் தன் குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுப்பதை உற்சாகப்படுத்த முடியும்.

Next Story