“ஆட்டோகிராப்”பை அகற்றி வரும் செல்பி மோகம்


“ஆட்டோகிராப்”பை அகற்றி வரும் செல்பி மோகம்
x
தினத்தந்தி 7 Sep 2019 5:49 AM GMT (Updated: 7 Sep 2019 5:49 AM GMT)

நமக்குப் பிடித்த ஒரு மனிதரைப் பார்த்து விட்டால் ஓடிச் சென்று அவரிடம் கை குலுக்கி, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வோம். அவர் ஒரு வி.ஐ.பி.யாக இருந்தால் அவருடன் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொள்வது இன்றைய பழக்கம்.

அன்றைக்கு நம் பிரியத்திற்குரிய தேசத் தலைவரை, சினிமா நட்சத்திரத்தை, விளையாட்டு வீரரை, பாடகரை, பிரபல கவிஞரை, எழுத்தாளரைக் கண்டால் ஓடிச் சென்று அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு பெறுவோம். செல்பியை விட ஆட்டோகிராப்பில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன. அதில் பொது நோக்கமும் இருக்கின்றன.

காந்தியடிகள் ஜுகுவில் என்ற இடத்தில் தங்கியிருந்த போது ஒரு இளம்பெண் மழையில் நனைந்தபடி அங்கு வந்தாள். அவள் தன்னுடைய டைரியில் ஆட்டோகிராப் போடுமாறு காந்திஜியிடம் வேண்டினாள். காந்திஜி பேனா எடுத்த போது அருகில் இருந்தவர் “பாபுஜி இவளிடம் ஐந்து ரூபாய் வாங்கவில்லையே” என்று நினைவூட்டினார். உடனே நிறுத்திக் கொண்ட காந்திஜி “நீ என் கையெழுத்திற்காக ஐந்து ரூபாய் தர வேண்டும்” என்றார்.

உடனே அந்த இளம்பெண், “பாபுஜி நான் ஒரு ஏழை மாணவி என்னால் பணம் கொடுக்க இயலாது” என்றாள். “இந்தப் பணம் அரிஜன நல முன்னேற்றத்திற்கு செலவிடப்படுகிறது” என்றார் காந்திஜி. “நான் கையெழுத்து பெறத்தான் வந்தேன். ஏழைக்கு தங்கள் கையெழுத்து கிடையாதா?” என்றாள்.

“நீ உன் பெற்றோரிடம் பணம் வாங்கி வா, இல்லையென்றால் கையெழுத்து பெறும் ஆசையை விட்டுவிடு இந்தப் பணம் உன்னைவிட ஏழையான அரிஜனங்களின் முன்னேற்றத்திற்காக, புரிந்து கொள்” என்கிறார் காந்திஜி.

“என் பெற்றோர் ஐந்து ரூபாய் கொடுக்கும் நிலையில் இல்லை. உங்களிடம் கையொப்பம் பெறும் ஆசையை விட முடியாது, தங்களிடம் கையொப்பம் வாங்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்” என்றாள் அந்தப் பெண்.

அங்கு வந்த ஒரு தொண்டர் “சகோதரி உன் காதில் அணிந்துள்ள குண்டலத்தை கழற்றி பாபுவிடம் கொடு” என்றார். அவள் கொடுக்க விரும்பினாள். ஆனால் அக்குண்டலம் எட்டணா மதிப்பு பெறாததாக இருந்தது. இவள் உண்மையிலேயே ஏழையென்று புரிந்து கொண்ட ஒருவர், “இந்தப் பெண்ணுக்காக ஐந்து ரூபாய் நான் தருகிறேன் கடனாக” என்றார். உடனே அந்தப் பெண்ணும் பணம் கிடைத்ததும் கொடுத்து விடுகிறேன், என்றாள்.

பணம் பெற்றுக் கொண்டு காந்திஜி அவள் டைரியில் கையெழுத்திட்டார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் அந்த இளம்பெண் மழையில் நனைந்தபடி போனாள்.

இன்னொரு சமயத்தில் ஒரு பணக்கார சிறுமி மகாத்மா காந்தியின் ஆட்டோகிராப் பெறுவதற்கு தனது தங்க வளையலை கொடுத்த நிகழ்வும் உண்டு. தந்தை பெரியாரும் அப்படித்தான். குழந்தைக்கு பெயர் வைக்க ஒரு ரூபாய், ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்க ஒரு ரூபாய், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள ஐந்து ரூபாய் என கட்சிக்கு நிதி போல பெற்றார்.

கவிஞர் அறிவுமணி என்பவர் பெரியார் திடலுக்கு சென்றிருந்தபோது தந்தை பெரியாரிடம் ‘நோட்புக்’ நீட்டி கையொப்பம் கேட்டார். “ஒரு ரூபாய் கொடுத்தால் எழுதி தருகிறேன்” என்று பெரியார் சொல்ல, தன்னிடம் இருந்த ஒரே ஒரு ரூபாயை கொடுத்து ஆட்டோகிராப் பெற்ற கவிஞர் புரசைவாக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நடந்தே சென்றார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்கிறார்.

பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, காருக்குத் திரும்பிய நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் வேகமாக வந்த ஒரு ரசிகர், ஒரு பேப்பர் நீட்டி ஆட்டோகிராப் கேட்டார். நாகேஷ் அந்தப் பேப்பரை வாங்கித் திருப்பிப் பார்த்தார். அதன் பின்புறம் ஏதோ கணக்கு எழுதியிருந்தது. நாகேஷ் சமயோஜிதமாய் “உங்களுக்கும் எனக்கும் எந்த பற்றுவரவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதி ஆட்டோகிராப் போட்டு அனுப்பினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் கேட்டால், “உழைப்பவரே உயர்ந்தவர்” என்று எழுதி அதன் கீழ் எம்.ஜி.ராமச்சந்திரன் என கையொப்பம் போடுவார். பிரபல பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் “முருகன் அருள்” என்று எழுதி கொடுப்பார்.

ஒரு சமயம் எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் ‘நோட்புக்’ நீட்டி, “ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்றார். குறும்புக்காரர் சுஜாதா “ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று எழுதி ஆட்டோகிராப் போட்டார்.

பிரபல ஓவியர் மாருதி ஒற்றையாக ஒரு கண் வரைந்து, அதன் மேல் பொட்டு வைத்து அன்புடன் வாழ்த்துகள் என வரைந்தளிப்பார். நடிகர் சூர்யா “மனம் போல் வாழ்க” என்று எழுதி கொடுப்பார். இன்றைக்கு ஆட்டோகிராப் வாங்குவது அரிதாகிவிட்டது. அதை செல்பி அகற்றிவிட்டது.

சபீதா ஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்).

Next Story