தினம் ஒரு தகவல் : சிற்றரத்தையின் மருத்துவம்


தினம் ஒரு தகவல் : சிற்றரத்தையின் மருத்துவம்
x
தினத்தந்தி 9 Sep 2019 10:17 AM GMT (Updated: 9 Sep 2019 10:17 AM GMT)

இஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவ குணத்தில் இஞ்சிக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் ‘சுகந்த அஸ்திரம்’ அரத்தை.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறை பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.

அரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் சீன அரத்தை ஆகியன உள்ளன. சிற்றரத்தையைவிட, பேரரத்தையின் வீரியம் சற்று குறைவே. உணவுக்குத் தேவைப்படும் நெடி மற்றும் மணத்துக்கேற்ப சமையலில் அரத்தையின் பிரிவுகளை சமயோசிதமாகப் பயன்படுத்துவது அவசியம். சமையலில் இஞ்சியை போலவும், இஞ்சிக்கு மாற்றாகவும் அரத்தை ரகங்கள் நம்மிடையே பயன்பாட்டில் இருந்தன. தற்காலத்தில், சமையலில் பயன்படுவதைவிட மருந்தாகவே அதிக புழக்கத்தில் இருக்கின்றன.

மஞ்சளுக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் தாய்லாந்து மக்கள் சிற்றரத்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தாய்லாந்து நாட்டின் சிவப்பு மற்றும் பச்சை மசாலா பசைகள், புகழ்பெற்ற தேங்காய் சிக்கன் சூப்பில் சிற்றரத்தை தவிர்க்கமுடியாத உறுப்பினர். இந்தோனேசியாவின் பண்டிகைக் காலத்தில், பிரசித்திபெற்ற ‘ரெண்டங்’ எனப்படும் குழம்பு வகையை வாசனையின் உச்சத்தில் நிறுத்துவது சிற்றரத்தைதான். 17-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரஷிய கேக் ரகங்கள் தேன், உணவு வகை என பலவற்றுக்கும் தனித்துவம் அளித்திருக்கிறது சிற்றரத்தை. அக்காலத்தில் சிற்றரத்தையை ‘ரஷிய வேர்’ என்று அழைக்கும் அளவுக்கு அந்நாட்டுச் சமையலில் பின்னிப்பிணைந்திருந்தது. ஆனாலும், சீனாதான் சிற்றரத்தையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாக சிற்றரத்தையின் சமையல் பயணம் தொடர்கிறது. நொதிக்கவைத்த பானங்களில் சிற்றரத்தையைச் சேர்த்து, பானத்தின் மதிப்பைக் கூட்டும் யுக்தி சில நாடுகளில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. கார்ப்புச் சுவையுடன் எச்சில் ஊறவைக்கும் சிற்றரத்தை, செரிமானத்தைப் பாதிக்கும் காரணிகளுக்கு முக்கிய எதிரி. மூட்டுவாத நோய்களில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் உள்காரணிகளைத் தடுக்கும் வன்மை, சிற்றரத்தையின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் சாரத்தைக் கொடுத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், எலும்புகளின் உறுதியான கட்டமைப்புக்குத் தேவைப்படும் வேதிக்கூறுகளைச் சுரக்கச்செய்வது தெரிய வந்துள்ளது. வயிற்றுப் புண்களுக்குக் காரணமான ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’யின் செயல்பாடுகளை அழிக்கும் திறமையும் சிற்றரத்தைக்கு உண்டு.

புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசயக் கூறுகளை சிற்றரத்தை கொண்டிருப்பதாக நேச்சுரல் மெடிசின்‘ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. இதிலுள்ள ‘அசிடாக்ஸிகவிக்கால் அசிட்டேட்’ என்னும் பொருள், புற்றுநோய் மரபணுக்களைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இரட்டைக் குழல்‘ துப்பாக்கியாகச் செயல்பட்டு புற்று செல்களை அழிப்பதுடன், ஆரோக்கியமான செல்களின் வீரியத்தையும் அதிகரித்து, புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தனித்துவம் சிற்றரத்தைக்கு இருப்பதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவு சுட்டிக்காட்டுகிறது.

Next Story