வாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...!


வாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...!
x
தினத்தந்தி 10 Sep 2019 9:23 AM GMT (Updated: 10 Sep 2019 9:23 AM GMT)

இன்று (செப்டம்பர் 10-ந்தேதி) உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம். மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. 

இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக இடத்தையும், தற்கொலை செய்யும் முறையையும் மிகவும் கடினமானதாக அமைத்துக்கொள்வர். ஒருமுறை தற்கொலை முயற்சியை மேற்கொண்டவர்கள் தகுந்த ஆற்றுபடுத்துதல் இல்லாவிட்டால் மறுபடியும் தற்கொலை முயற்சி எடுப்பது திண்ணம். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையை வழிவகுப்பது அல்லது யோசிக்காமல் எடுக்கும் முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த இரு வகையினருக்கும் உள்ள ஒற்றுமைகள் தங்கள் பிரச்சினைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு என்று நம்புவது தான். மன வலியில் இருந்து விடுதலை பெறுவதற்கும், உடல் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வாழ்க்கையை சரியான முறையில் கையாளத் தெரியாமையால் இந்த விபரீத முடிவை மேற்கொள்கின்றனர். தாங்கள், அதிகம் நேசிக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரின் பிரிவை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதை தாங்கி கொள்ளமுடியாத இளைஞர்கள் தற்கொலை முடிவை மேற்கொள்கின்றனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி, சில இடங்களில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒருவர் மன அழுத்தம் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டால் அது அவர்கள் செய்த பாவத்துக்கு கிடைத்த சன்மானம் என்று கருதுகிறார்கள். அது தவறு. சர்க்கரை நோய், இருதய நோய் ஏற்படுவதைப் போல் மூளையில் ஏற்படும் ரசாயன குறைபாட்டாலும், மாற்றத்தாலும் விளைவதே இந்த நோய். இதைக்கண்டு வெட்கப்பட வேண்டாம். அவர்களை ஒதுக்கவும் வேண்டாம், உதாசினப்படுத்தவும் வேண்டாம். அவர்களை நம்மில் ஒருவராக கருதி தகுந்த மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிப்பது அவசியம் என்பதால் இந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் தற்கொலையை தடுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதை கருத்தாக அறிவித்து உள்ளது. ஆகவே தற்கொலை எண்ணம் உள்ளவர்களும் அதை மறந்துவிட்டு தகுந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் நட்பு வட்டாரங்கள் அல்லது உறவினர்கள் இவர்கள் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் அதை லேசாக ஒதுக்கிவிடாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசி தகுந்த ஆலோசனைகளை பெற அழைத்து செல்வது அவசியம். இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு. ஆகையால் ஒவ்வொரு தனிமனிதனும், அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதலில் ஒரு பிரச்சினை உண்டு என்று இருந்தால் அதற்கு தீர்வு உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஆயினும் தற்கொலையை தடுப்பது இந்நாளின் முக்கிய நோக்கமாகும். தற்கொலை செய்து கொள்ள தூண்டும் காரணங்களில் இன்றளவும் இதுவே முக்கிய காரணம் என்று எவராலும் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை. ஆயினும் மன அழுத்தம், மனச்சிதைவு நோய், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமை, போதை பழக்கம், குடும்ப உறவில் சிக்கல் போன்ற காரணங்கள் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணிகள் என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது என்பதை நாமும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்வது தலையாய கடமையாகும். உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தகுந்த உளவியலாளரிடம் சென்று அவர்களின் வழிகாட்டுதல் மூலமும், ஆற்றுப்படுத்துதல் மூலமும் தெளிவு பெற இயலும் என்பதை உணர்ந்து மனநலத்தைப் பேணவேண்டியது அவசியம்.

உளவியல் வல்லுனரை அல்லது மனநல மருத்துவரை சந்திப்பதைக்கண்டு வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மன நோயையும், மற்ற நோய் போன்றே என்று புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவர் தற்கொலை முயற்சி செய்தால் அவரைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டும்?முதல் 48 மணி நேரத்திற்கு தகுந்த மருத்துவமனையில் அனுமதித்து தீவிரமாக அவர்களைக் கண்காணிக்கவேண்டியது அவசியம். இல்லையேல் மறுமுறை தற்கொலை முயற்சி செய்ய முனைவார்கள். பின்னர் சிலகாலம் அதாவது சில வாரங்கள் வரை தற்கொலை செய்ய உதவும் உபகரணங்களை அவர்கள் முன் வைக்காமல் இருப்பது, குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்கள் உணர்வை புரிந்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது. பின்னர் இந்த தற்கொலை செயலுக்குக் காரணமாக ஏதாவது உடல் ரீதியான பிரச்சினை அல்லது மனரீதியான பிரச்சினை அல்லது போதைப்பழக்கம் உள்ளதா என்று ஆராயவேண்டும். பலநாள் வரை அதாவது சில மாதங்கள் வரை குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே அவர்கள் இருத்தல் அவசியம். மன நோய் அல்லது போதைப்பழக்கத்திற்கான மருத்துவப் பரிந்துரை அவசியம். பின்னர் பிரச்சினைகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல் முக்கியமான படிகளாகும். சற்று ஆராய்ந்து பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றத்தை எளிதில் ஏற்கும் பக்குவம் இல்லாமை, வேலை இல்லாமை, சமுதாயத்தில் இருந்து விலகி அல்லது விலக்கி வைக்கப்படுவது, ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு தீரா காயத்தை ஏற்படுத்தி விடுவது இயல்பு. ஆனால் இந்த காரணங்கள் தன் திடமனத்தாலும், தன் மீது நம்பிக்கை வைத்தாலும் ஜெயிக்க இயலும் என்பது முற்றிலுமாக நம்ப மறுக்கிறார்கள்.

இவர்களை இனம் கண்டு நாம் நேசக்கரம் நீட்டி, ஆதரித்து வெற்றிப்பாதையில் பயணிக்க உறுதுணையாக நிற்போம் என்று இந் நாளில் உறுதி எடுக்கவேண்டும் என்பதே நமது நோக்கம். பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வர தற்கொலை எண்ணமும் வரும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றுவது அவசியம். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சிறார்களும் இதை வெளியில் சொல்ல பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இன்றளவும் நடந்து வருகிறது. ஆகையால் ஆற்றுப்படுத்துதலும், வழிகாட்டுதலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிப்பதால், இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு,

ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் மனநோய் வல்லுனர்கள் இருப்பது அவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவரை மனநோயில் இருந்து காப்பாற்ற ஏதுவாக இருக்கும். நாம் வாழப்பிறந்தவர்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி, அதில் கிடைக்கும் அனுபவத்தைக்கொண்டு நம் வாழ்க்கையை நேர் செய்ய இயலும். நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு வெற்றிநடை போட ஒவ்வொருவரும் உறுதி எடுக்கவேண்டும். சோதனைகளை தடைக்கற்களாக எண்ணாமல் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நிச்சயம் தற்கொலை எண்ணம் நம் மனதில் உருவாகாது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. வாழ்ந்து பார் வாழ்க்கை சுகமானது. வாழ்வோம் மற்றவரையும் வாழ செய்வோம்.

- டாக்டர் நற்பின்னை சேரன், உளவியல் வல்லுனர், தனியார் மருத்துவ கல்லூரி, காஞ்சீபுரம்.

Next Story