மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் 100 நாட்கள்


மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் 100 நாட்கள்
x
தினத்தந்தி 14 Sep 2019 4:44 AM GMT (Updated: 14 Sep 2019 4:44 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்தது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்பதை மனதில் கொண்டு அமைச்சர்கள் இந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

நாட்டில் முந்தைய 70 ஆண்டுகளின் அரசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த அரசின் முதல் 70 நாட்கள் செயல்பாடு இதுவரை மிகச் சிறந்ததாக உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்திய மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை மோடி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது. 17-வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடர் தேசிய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, நிதித்துறை உத்வேகம், சமூக நீதி, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. கூட்டத் தொடரின்போது நாடாளுமன்ற அலுவல்கள் 281 மணி நேரம் நடைபெற்றது. மக்களவையில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. (1952-ல் இருந்து இது அதிகபட்ச எண்ணிக்கை). மாநிலங்களவையில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், ஷியாமபிரசாத் முகர்ஜி, அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவான ஒன்றுபட்ட இந்தியா என்பது 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நனவானது. அரசியல்சாசனத்தின் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டதை அடுத்து அந்தக் கனவு நனவானது. லே லடாக்குடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில், வரலாற்று முக்கியத்துவமான இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடு முழுக்க உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் சமூக நீதி கிடைக்கவும், அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்வதிலும் மோடி அரசு உறுதியாக இருக்கிறது. தனது 60 நாட்களுக்குள் நரேந்திர மோடி, ‘முத்தலாக்’ நடைமுறையை ஒழித்துக்கட்டும் வகையில் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்பு மசோதா 2019-ஐ நிறைவேற்றி அமல்படுத்தினார். முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் உதவும் வகையில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இந்த மசோதா அவர்களுடைய வாழ்வில் நம்பிக்கை ஒளியைக் கொண்டு வந்தது. இதே நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (திருத்தச் சட்ட) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தச் சட்ட திருத்தம் அமைந்துள்ளது. புதிய விதிகளின்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். போஸ்கோ வழக்குகளை துரிதமாக விசாரித்து, தீர்ப்பு அளிக்கும் வகையில் நாடு முழுக்க 1023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களை பிரதான நீரோட்டத்தில் சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, கடந்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நிலையை உயர்த்துதல் மற்றும் அதிகாரமளித்தலில் சாதனை படைத்துள்ளது. அரசின் முதல் 10 நாட்களுக்கான குறிக்கோள்களை மனதில் கொண்டு, இந்த அமைச்சகம் இரண்டு முக்கிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டது. இந்தியாவின் முதலாவது தேசிய மனநலம் குன்றியோருக்கான மறுவாழ்வு மையம் தொடங்குவதும் அதில் அடங்கும். மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் இந்த மையத்தைத் தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன. மதுவுக்கும், போதைப் பொருட்களுக்கும் தடை விதித்து, அதுபோன்ற சமூக அவலங்களுக்கு இரையாகாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது அடுத்த முக்கியமான பணியாக உள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு நாடு முழுக்க முகாம்கள் நடத்தப்படுகின்றன, சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நீர் வள மேலாண்மை மற்றும் குடிநீர் வழங்கல் பிரச்சினை நமது நாட்டில் அடுத்த பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பெரிய கவலையை மனதில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆட்சி நிர்வாகத்தின் முதலாவது நாளிலேயே ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. அமைச்சகம் தொடங்கி 30 நாட்களுக்குள், தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் மேலாண்மைக்காக, ‘ஜல் சக்தி அபியான்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த அரசின் முக்கியமான கவனத்துக்குரிய மையமாக நமது விவசாயிகள் உள்ளனர். உழவர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நீதி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த, இந்திய தலைமை நீதிபதியுடன் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு மற்றும் தேசவிரோத செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அரசு சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் 2019-ஐ கொண்டு வந்து அமல்படுத்தியது. இப்போது ஒரு அமைப்பை மட்டுமின்றி, தனியொருவரையும் கூட அரசு இனி ‘பயங்கரவாதி’ என அறிவிக்க முடியும். மோட்டார் வாகனங்கள் (திருத்த) சட்டம் திருத்தம் செய்யப்பட்டதன் விளைவாக, சாலைகளில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைகளுடன் மக்கள் சேவைகளைப் பெறும் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது; தானியங்கி, கணினிமயமாக்கப்பட்ட வசதிகள் ஊரகப் பகுதிகளிலும், பொதுப் போக்குவரத்து முறைமைகளிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் சேவைகள் மூலமான தொடர்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 100 நாட்களில், ரூ.5 டிரில்லியன் பொருளாதார நிலையை எட்டுவது என்ற இலக்கை நோக்கி அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ரூ.100 லட்சம் கோடிக்கும் மேல் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் “வளர்ச்சியின் வழிகாட்டியாக” ரெயில்வே துறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 2019 மத்திய பட்ஜெட்டில் 2030 வரையிலான பத்தாண்டுகளுக்கு ரூ.50 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பொலிவுறும் நகரங்கள் திட்டத்தின் கீழ், ரூ.609 கோடி மதிப்பிலான 88 திட்டங்கள் கடந்த 75 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளன. தேச பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் குறித்த விஷயங்களில் முதல் 100 நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசு வரலாற்றில் இல்லாத அளவுக்குச் சாதனைகள் படைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தபோதிலும், சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்பதற்காக மோடி அரசு பாடுபடவில்லை. மாறாக, முந்தைய அரசுகளால் மதிக்கப்படாமல், அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த 130 கோடி குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றுபட்டுள்ளது. எல்லா குடிமக்களும் சமமானவர்கள், அனைவருக்கும் சம உரிமைக்கான உத்தரவாதம் உண்டு என்ற நிலையை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள தொலைநோக்கு சிந்தனை காரணமாக இவையெல்லாம் நடந்துள்ளன. அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற குறிக்கோளை நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இந்தியா தூக்கிப் பிடித்துள்ளது.

- தாவர்சந்த் கெலாட், மத்திய மந்திரி, சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை.

Next Story