தினம் ஒரு தகவல் : வாகன என்ஜின் ஆயில்


தினம் ஒரு தகவல் : வாகன என்ஜின் ஆயில்
x
தினத்தந்தி 14 Sep 2019 7:47 AM GMT (Updated: 14 Sep 2019 7:47 AM GMT)

ஒரு என்ஜினின் ஆயுள் அதன் ஆயிலில்தான் இருக்கிறது. என்ஜினின் சுமூக செயல்திறன் ஒரு வாகனத்தின் வாழ்நாளை நீட்டிக்கிறது. எனவே தரமான பெட்ரோல் மட்டுமில்லை, என்ஜின் சிறப்பாக இயங்க ஆயிலும் மிக அவசியம்.

பெட்ரோல்தான் போடுகிறோமே, பிறகு எதற்கு தனியாக ஆயில் வேறு? என்று சிலர் நினைக்கலாம். இங்கே பெட்ரோல் என்பது எரிபொருள். அதாவது, என்ஜினை இயக்குவதற்கு. ஆயில் என்பது என்ஜினின் உராய்வைத் தடுப்பதற்கு. இரண்டு உலோகங்கள் உரசும்போது என்னாகும்? உலோகங்களில் வெப்பம் அதிகமாகி, விரைவில் தேய்ந்து விடும். இதுவே மசகுத்தன்மை இருந்தால்? அதாவது, கொழகொழப்புத் தன்மை இருந்தால், இயக்கமும் எளிதாக இருக்கும். உலோகங்களும் பாதுகாக்கப்படும். அதற்குத்தான் என்ஜின் ஆயில்.

ஒரு சின்ன உதாரணம், நீண்டநாட்களாக பயன்படுத்தப்படாத பூட்டு இருக்கிறது. வெயிலில், மழையில் துருப்பிடித்துப் போய், சாவியை போட்டாலும் திறக்கவே முடியவில்லை. சாவியிலும் பூட்டு துவாரத்திலும் லேசாக எண்ணெய் விட்டு திறந்து பாருங்கள். சட்டென வேலை முடியும். இதுதான் என்ஜினுக்கும்.

என்ஜினில் பிஸ்டன்கள் இயங்கும்போது ஏற்படும் உராய்வு தன்மையை சீராக்க, இந்த என்ஜின் ஆயில் மிக முக்கியம். நாள் ஆக, ஆக இந்த ஆயிலின் மசகுத்தன்மை குறைந்து, உராய்வு சீராக இருக்காது. அதனால்தான் நாள்பட்ட என்ஜின் ஆயில் கொண்ட என்ஜினை, வாகனம் ஓட்டும்போதே கண்டுபிடித்து விடலாம். என்ஜின் சத்தமே ‘நச நச’ என இருக்கும்.

ஆயில் என்றால், வெறும் எண்ணெய் மட்டும் அல்ல. உலோகங்கள் தேய்ந்து விடாதவண்ணம், என்ஜின் சீராக இயங்கும் வண்ணம் இந்த ஆயிலில் சில ரசாயனங்களை சேர்ப்பார்கள். ஆயில் 80 சதவீதம் என்றால், மற்றவை 20 சதவீதம் இருக்கும்.

மைலேஜுக்கு ஏற்ப, என்ஜின் செயல்பாட்டுக்கு ஏற்ப, என்ஜினை கூலாக வைத்திருக்க, உலோக அரிப்பை தடுக்க என்று ஒவ்வொரு ரசயானத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இதைத்தான் ‘லூப்ரிகன்ட் அடிட்டீவ்ஸ்’ என்கிறார்கள். இந்த லூப்ரிகன்ட் ஆயில் மூன்று விதங்களில் இருக்கும். திரவமாக, கெட்டியாக, கொழகொழப்பாக இருக்கும். பெரும்பாலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் உள்ள என்ஜின் கியர் பாக்ஸில் பயன்படுத்துவது திரவ நிலையில் உள்ள லூப்ரிகன்ட் ஆயிலைத்தான். ஏனென்றால், இங்கேதான் உராய்வுகள் அதிகமாக இருக்கும். பொதுவாக, ஆயிலை ‘விஸ்காஸிட்டி இண்டெக்ஸ்’ கொண்டுதான் அளவிடுகிறார்கள். அதாவது, மசகுத்தன்மை. எனவே மசகுத்தன்மை என்பது, ஒரு ஆயில் அதிகபட்சம் எந்த அளவு வெப்பத்தைத் தாங்கி, எவ்வளவு நாட்கள் தனது வழவழப்பு குணத்தை இழக்காமல் இருக்கும் என்பதுதான். இந்த விஸ்காஸிட்டி இண்டெக்ஸின் அளவு அதிகமாக இருந்தால், சந்தேகமே இல்லாமல் அந்த ஆயிலை என்ஜினுக்கு ஊற்றி, ஜாலியாகப் பயணிக்கலாம்.

Next Story