அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் குறையுமா?


அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் குறையுமா?
x
தினத்தந்தி 14 Sep 2019 10:34 AM GMT (Updated: 14 Sep 2019 10:34 AM GMT)

போக்குவரத்து சிக்னல் முன்பு முதல்வரிசையில் நீங்கள் எப்போதாவது இருந்ததுண்டா? பல நேரங்களில் இது, கார் பந்தய மைதானத்தில் இருப்பதை நினைவுபடுத்தும். என்ஜின்கள் உறுமும் சத்தம் காதை பிளக்கும்.

சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறும் முன்பே பல இருசக்கர வாகனங்கள் கோட்டை தாண்டி, வேகமாக கடந்து செல்லும். இது போக்குவரத்து விதிமீறல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் யாரும் இதை பற்றி கவலைபடுவதில்லை. இது ஒரு அரிதான நிகழ்வு அல்ல. தினமும் பல வகையான போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கின்றன. வாகனத்தை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வது, சரக்குவாகனங்களில் மக்களை ஏற்றிச்செல்வது, வாகனங்களில் அதிகஅளவில் பயணிகளை ஏற்றிச்செல்வது போன்ற விதிமீறல்கள் நடக்கின்றன.

சாலைகளில் ஆட்டோ டிரைவர்களின் சுறுசுறுப்பை எப்போதும் காணலாம். நெரிசல் மிகுந்த தெருக்களிலும் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு லாவகமாக அவர்கள் கூட்டி செல்வார்கள். அது பாதுகாப்பான முறையா? என்ற கேள்விக்கே இடம் இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் எப்படி? அவர்கள் எங்கும் நிறைந்துள்ளவர்கள். சாலைகளில், சாலைகளுக்கு வெளியே, நடைமேடைகளில், இரு தெருக்களை இணைக்கும் வீடுகளுக்கு இடையே உள்ள சந்து என எந்த இடைவெளிகளிலும் அதீத வேகத்தில் செல்வார்கள்.



இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனி இப்படி செல்ல முடியாதபடி சென்னை போக்குவரத்து காவல் துறை, நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மாநில போக்குவரத்து துறை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை குறைக்க, போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு (2019) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சென்னையில் மட்டும், 3,814 விபத்துகளால், 692 உயிரிழப்புகள், 1,098 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் (2018) 7,580 சாலை விபத்துகளில் 1,260 உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹெல்மெட் அணியாததால் சென்னையில் இந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் வரை நடந்த சாலை விபத்துகளில் 36 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் புள்ளியியல் பிரிவு வெளியிட்டுள்ள ‘தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்’ அறிக்கை கூறுகிறது. 70 முதல் 80 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணம், சாலையை பயன்படுத்துபவர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்கள் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னையில் தினமும் 9,000 முதல் 10,000 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகின்றன. இவர்களில் 60 சதவீதத்தினர் ஹெல்மெட் அணியாததால் பிடிபடுகின்றனர்.

இந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 406 போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் பதிவாகி உள்ளன. இதில் 96,487 பேர் போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக பிடிபட்டு உள்ளனர். ஆகஸ்டு 20-ந் தேதி மட்டும் சென்னையில் 11,347 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2018-ம் ஆண்டு சென்னையில் பதிவான போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 4,96,783 ஆக இருந்தது.

‘சென்னையில் 237 போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான போக்குவரத்து விதிமீறல்களில் கவனம் செலுத்துகிறோம்’ என்கிறார் போக்குவரத்து இணை கமிஷனர் அ.அருண்.

‘வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். இதுவரை நகரில், 4,712 சாலைவிபத்துகளும், 841 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக சென்னை உள்ளது. 55 லட்சம் வாகனங்கள் இங்கு உள்ளன. எனவே விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது’ என்கிறார்.

அதீத வேகம், மது குடித்துவிட்டு ஓட்டுவது, சிக்னல்களில் சிகப்பு விளக்கை மீறுவது, ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது, சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிச்செல்வது, வாகனங்களில் அதிகஅளவில் பயணிகளை ஏற்றிச்செல்வது போன்ற விதிமீறல்களுக்கு வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டின் சாலை பாதுகாப்பு கமிட்டி கூறுகிறது.



இதன்படி கடந்த ஜனவரி மாதம் சென்னையில் மொத்தம் 3,140 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் 1,671 டிரைவிங் லைசென்சுகள் சிக்னல்களில் சிகப்பு விளக்கை மீறியதற்காகவும், 524 டிரைவிங் லைசென்சுகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், அதீத வேகத்தில் சென்றதற்காக 141 பேரின் லைசென்ஸ்களும், ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதற்காக 306 பேரின் லைசென்சுகளும், சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் சென்றதற்காக 442 பேரின் டிரைவிங் லைசென்ஸ்களும், சரக்கு வாகனங்களில் அதீத எடையுள்ள சரக்குகளை ஏற்றிச்சென்றதற்காக 56 பேரின் டிரைவிங் லைசென்ஸ்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறலை தடுக்க புதிய ஆன்லைன் தளங்கள்

கடந்த ஜூன் மாதம் முதல் உடனடியாக அபராதம் விதிக்க ‘எலக்ட்ரானிக் செல்லான்’ முறையை மாநகர போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். ‘இ-செல்லான்’களை உற்பத்தி செய்யும் 352 உபகரணங்களை டெல்லியின், தேசிய தகவலியல் மையம், சென்னை மாநகர காவல்துறைக்காக தயாரித்துள்ளது. கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உடனடியாக அபராதம் செலுத்தும் முறை இந்த இ-செல்லான் முறையுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, பதிவு செய்யப்படும் வழக்குகளை ஆன்-லைன் மூலம் உயர்அதிகாரிகள் உடனடியாக கண்காணிக்க முடியும்.



இந்த இ-செல்லான் முறை, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடனும், வாகன மற்றும் சாரதி ஆன்-லைன் அமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. வாகன் என்பது ஆன்-லைன் மூலம் வாகனங்களை பதிவு செய்யும் முறை. சாரதி என்ற அமைப்பில் டிரைவிங் லைசென்ஸ் பற்றிய தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இ-செல்லான் அமைப்பில், வாகன பதிவு எண்ணையும், டிரைவிங் லைசென்ஸ் எண்ணையும் பதிவு செய்த உடனே, வாகன உரிமையாளரின் பெயர், புகைப்படம் மற்றும் டிரைவிங் லைசென்சின் தற்போதைய நிலை ஆகியவை போக்குவரத்து காவலரின் பார்வைக்கு புலப்படும்.

போக்குவரத்து விதிமீறல் செய்பவர்கள் அபராதத்தொகையை கட்டத்தவறினால், வாகன தகுதி சான்றிதழ்கள், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் போன்ற சேவைகளை பெறுவது தடை செய்யப்படும். டிரைவிங் லைசென்சுகளை இடைநீக்கம் செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காவல்துறை கோர முடியும். பிற மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடியும். பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களையும் இந்த அமைப்பின் மூலம் பெற முடியும்.



ஜூன் மாதத்தில், ‘ஜி.சி.டி.பி. சேவைகள்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக போக்குவரத்து காவல்துறையை அணுக முடியும். இந்த செயலியை இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்யப்பட்டுள்ளது. நகரத்தில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் பற்றிய புகார்களை பொதுமக்கள் இதன்மூலம் அளிக்க முடியும். விதிமீறல்கள் பற்றிய உடனடி புகைப்படங்கள், வீடியோக்களை தரவேற்ற முடியும். விதிமீறல் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்கள் ஜி.பி.எஸ். மூலம் தானியங்கி முறையில் பதிவாகி விடும்.

இதுவரை 2000-க்கும் அதிகமான புகார்கள், இந்த செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2000-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 500 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தங்களின் புகார் எந்த நிலையில் உள்ளது என்ற தகவலையும் பொதுமக்கள் இதன் மூலம் அறிய முடியும்.



சென்னையில் 336 சாலைகளில் மொத்தம் 20 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 50 மீட்டருக்கு ஒரு கேமரா நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ‘சம்பவ இடத்தில் விதிக்கப்படும் உடனடி அபராத கட்டண முறையில் இருந்து நேரடி தொடர்பற்ற அமலாக்க முறைக்கு மாறி வருகிறோம்’ என்கிறார் போக்குவரத்துக்கான இணை போலீஸ் கமிஷனர்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகள் மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. மக்கள் இவற்றை பின்பற்றினால், சாலை பாதுகாப்பு அதிகரிக்கும். நாங்கள், அமலாக்கத்தை விட ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்களில் ஏ.என்.பி.ஆர். (தானியங்கி முறையில் வாகன எண்களை அடையாளம் காணுதல்) மென்பொருள் உள்ளது. போக்குவரத்து விதிமீறல் செய்பவர்கள் தானியங்கி முறையில் கேமராக்களால் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செல்லான்கள் அனுப்பப்படும். அபராதத்தொகைகளை ஆன்-லைன் வங்கி சேவைகள் அல்லது இதர ஆன்-லைன் முறை மூலம் செலுத்தலாம்.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைகளை குறைக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 620 விபத்துகளும், 128 உயிரிழப்புகளும் நடந்தன. இந்த போக்கு கவலை தருவதாக இருந்தாலும், கடுமையான கண்காணிப்புகள் மற்றும் கடும்நடவடிக்கைகள் மூலம் இவற்றை குறைக்க முடியும் என்று போக்குவரத்து காவல் துறை நம்பிக்கை தெரிவிக்கிறது.



அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால், விதிமீறல்கள் குறையுமா?

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகையை உயர்த்த சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் சட்ட திருத்த மசோதா உறுதியளிக்கிறது. “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து நம் மாநில அரசுக்கு அறிவிப்பாணை வந்துவிட்டால், இதை செயல்படுத்துவோம். மாநில அரசின் ஆணை கிடைத்த உடன் புதிய அபராதங்களை விதிப்போம். அதுவரை பழைய அபராதங்கள் வசூலிக்கப்படும்” என்று போக்குவரத்து இணை காவல் ஆணையர் தெரிவித்தார்.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், விதிமீறல் செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர். கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

இதனால் விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story