கோடிகள் புரளும் மொய் விருந்தின் பின்னணி ரகசியங்கள்


கோடிகள் புரளும் மொய் விருந்தின் பின்னணி ரகசியங்கள்
x
தினத்தந்தி 15 Sep 2019 1:00 AM GMT (Updated: 14 Sep 2019 12:31 PM GMT)

பாரம்பரியமிக்க மொய் விருந்தின் இன்னொரு பக்கம் ருசிகரமானது. அதைபற்றி விளக்கம் தருகிறார், ஆண்டிப்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் முத்துநாகு.

முத்துநாகு சொல்கிறார்:

‘‘நல்லதுக்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டதுக்கு போய் விட வேண்டும், இல்லை என்றால் உறவு விட்டுப் போய்விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். திருமணம், காதணி விழா போன்றவை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தும் விழாக்கள். ஆனால் இறப்பு என்பது எதிர்பாராமல் நடப்பது. இப்படி எதிர்பாராமல் நடக்கும் மரணத்தால் இறுதி காரியம் செய்வதற்கான பணம் இல்லாமல் துன்பப்படக்கூடாது என்பதற்காக உறவினர்கள் தங்களால் இயன்றதை கொடுத்து உதவும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதில் கருமாந்திர காரியத்துக்கு மொய் எழுதுவது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தில் மொய் எழுதியதாக ஆவணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கருமாந்திர மொய் எழுதிய ஆவணம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில் 1917-ம் ஆண்டு கருமாந்திர மொய் எழுதியது தொடர்பான ஓலைச்சுவடி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு வாழ்ந்த பிச்சை பண்டிதர் மனைவி குட்டச்சி என்பவரின் கருமாந்திரத்திற்காக மொய் எழுதியவர்களின் பெயர்கள் நீளமான ஓலைச்சுவடியில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இறப்பில் தொடங்கிய மொய் பழக்கம், பிற் காலத்தில் இயலாமையில் உள்ள உறவினர்களை அரவணைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது’’ என்றார்.

சிறையில் இருந்து மீண்டவர்களுக்காகவும் மொய் எழுதும் வழக்கம் இருந்திருக்கிறது.

தமிழகத்தில் சில சமூகத்தினரிடம் சிறைக்கு சென்று திரும்பி வரும் நபர்களுக்கு தாய் மாமன், மைத்துனன் மூலம் ‘சிறை மீட்பு மொய்’ செய்யப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போராடி சிறை சென்று திரும்பும் போது, தங்களின் உறவினர்களுக்கு புத்தாடை எடுத்து கொடுத்து, தங்களால் இயன்ற பொன், பொருள், பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். அத்துடன் சிறையில் அடி, உதையால் காயம் ஏற்பட்டிருக்கும் என்பதால், உடலுக்கு வலிமைகொடுக்கும் விதத்தில் உறவினர்களால் ஆடு, கோழி இறைச்சியை சமைத்து கொடுக்கப்படும் வழக்கமும் இருந்துள்ளது. இந்த வழக்கம் தற்போதும் அரிதாக நீடிக்கிறது. நேர்மையாக வாழும் நபர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டால், திரும்பி வரும் போது மொய் செய்து அவர்கள் வாழ்க்கையை சீராக்குவார்கள்.

பொதுவான மொய் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அடிக்கும் போது, அதில் தாய்மாமா உள்பட உறவினர்கள் பெயர்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கும். திருமணத்தோடு மொய் வசூலிப்பதாக இருந்தால் ‘விருந்துண்டு மொய் பெய்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்’ என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருப்பார்கள். மற்றபடி வசந்த விழா, இல்ல விழா என்ற பெயரில் நடத்தப்படும் மொய் விருந்து நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழில் சிலர், நேரடியாக கடைசியாக தாங்கள் மொய் விருந்து வைத்த ஆண்டை குறிப்பிடும் வாசகத்தை இடம்பெற செய்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு ‘2012-ம் ஆண்டுக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’, ‘2014-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள செய்முறை நோட்டை பார்க்கவும்’ என்பதுபோல் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். அதாவது, இந்த ஆண்டுகளில் இருந்து தற்போது வரை உறவினர்கள் வீடுகளில் நடந்த விழாக்களில் செய்துள்ள மொய் பணத்தை கணக்கிட்டு பார்த்து திருப்பிச் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுவது போன்று அந்த வாசகங்கள் இருக்கும்.

மொய் விருந்து அன்றும்.. இன்றும் எப்படி எல்லாம் வித்தியாசப்படுகிறது என்பதை இனி காணலாம்!

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மொய்விருந்து, ‘செய்முறை’ விழா என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒருமுறை உறவினருக்கு நாம் செய்யும் மொய்யை அவர் முறை வரும்போது திருப்பிச் செய்வார். இவ்வாறு அவரவர் முறைக்கு செய்வது செய்முறை என்றானது. மொய் விருந்து எனப்படும் செய்முறை விழாக்கள் எப்படி ஏற்பாடு செய்யப்படுகிறது? என்பது குறித்து திரைப்பட நகைச்சுவை நடிகரும், தேனியை சேர்ந்த விவசாயியுமான செவ்வாழை ராசு சொல்கிறார்:

‘‘பல தலைமுறைகளாக மொய் செய்யும் பழக்கம் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக தான் அதிக அளவில் பணம் புரளும் வழக்கம் உள்ளது. என்னுடைய அப்பா காலத்தில் மொய் செய்வது என்பது பெரும்பாலும் பணமாக இருக்காது. அப்போது நெருங்கிய உறவுகளுக்குள் தான் இந்த பழக்கம் இருந்துள்ளது.

அன்றைய கால கட்டத்தில் தாய்மாமன் சீர் அல்லது அக்கா, தங்கைக்கு செய்யும் சீர் என்பது நிலமாக இருந்தது. அவரவர் தகுதிக்கு ஏற்ப நிலம் எழுதிக் கொடுப்பார்கள். சிலர் ஆடு, மாடுகளையும் வழங்குவார்கள். அதன்பிறகு பணமாக வழங்கும் பழக்கம் வந்தது. ஆரம்ப காலத்தில் ரூ.1, ரூ.2 மொய் செய்வதே பெரிதாக பேசப்படும். தாய்மாமன் ரூ.4, ரூ.5 செய்வது கொண்டாடப்படும் அளவுக்கு இருக்கும். அப்போது பணத்தின் மதிப்பு அதிகம் இருந்தது. தற்போது தான் பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது.

மொய் செய்வதை பொறுத்தவரை தந்தை தனது மகளுக்கும், மகள் வழி பேரன் - பேத்திகளுக்கும் செய்வது கணக்கில் வராது. அதை திருப்பி பெறக்கூடாது. அண்ணன், தம்பிகள் தங்களின் திருமணத்துக்கு முன்பு வரை அக்கா, தங்கைக்கு செய்யும் மொய்யும் திரும்பப் பெற வேண்டிய கணக்கில் வராது. ஆனால், அண்ணன், தம்பிகள் தங்களின் திருமணத்துக்கு பிறகு அக்கா, தங்கைக்கு செய்யும் மொய் திரும்ப பெறக்கூடிய கணக்கில் வரும்.

எனது திருமணத்தின் போது எனக்கு ரூ.80, என் மனைவிக்கு ரூ.75 என மொத்தம் ரூ.155 மொய் வசூலானது. இந்த பணத்தில் ஒரு ஆடு வாங்கினோம். அது 2 குட்டிகள் போட்டது. பின்னர் குட்டிகளையும் ஆட்டையும் ரூ.600-க்கு விற்பனை செய்தோம். அந்த பணத்தை கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தோம். இதற்கிடையே மனைவியின் வீட்டில் இருந்து சீர்வரிசையாக ரூ.900 கொடுத்தனர். அதில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தோம்.

40 ஆண்டுக்கு முன்பு மூத்த மகன் காதணி விழாவுக்கு மொய் பணம் ரூ.2 ஆயிரம் வசூலானது. அப்போது அது மிகப்பெரிய தொகை. அந்த தொகையை வைத்து வட்டித் தொழில் நடத்தினோம். அப்படியே படிப்படியாய் வளர்ந்து தான் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தோம். அதன்பிறகு பொழுதுபோக்கிற்காக தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை.

விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்போம். அதிலும் நாம் யாருக்கு எல்லாம் மொய் செய்து இருக்கிறோமோ அவர்களுக்கு தவறாமல் அழைப்பிதழ் கொடுத்துவிட வேண்டும். பெரும்பாலும் அசைவ உணவு விருந்துதான் அளிக்கப்படும். வீடுகளில் ‘செய்முறை நோட்டு’ பராமரிப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் நாம் செய்துள்ள பணத்தை அதில் குறித்து வைத்துக் கொள்வோம். நம் வீட்டு விழாக்களில் அவர்கள் செய்த தொகையையும் குறித்து வைப்போம். ஒருவர் அழைப்பிதழ் கொடுக்கிறார் என்றால் நோட்டை எடுத்து அவர் நமக்கு எவ்வளவு செய்து இருக்கிறார் என்பதை பார்த்து விட்டு அதில் இருந்து கொஞ்சம் பணம் கூடுதலாக வைத்து திருப்பிச் செய்வோம். பெரும்பாலும் அவர்கள் செய்ததை இரண்டு மடங்காக திருப்பிச் செலுத்தும் பழக்கம் உள்ளது.

ஒரு குடும்பத்துக்கு முதல்முறை மொய் செய்யும்போது ‘புதுநடை’ எனக் குறிப்பிட்டு கொடுப்பார்கள். அதே குடும்பத்தில் அடுத்த நிகழ்ச்சி வந்தால், ‘இரண்டாம் முறை’ என்று சொல்லிக் கொடுப்பார்கள். இப்படி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் மூன்றாம் முறை, நான்காம் முறை எனச் சொல்லி கொடுக்கப்படும். மொய் கொடுத்தவர் வீட்டில் நிகழ்ச்சி வரும்போது, முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள கடைசி நிகழ்ச்சி நோட்டை எடுத்து முதலில் பார்ப்பார்கள். பிறகு 3-வது, 2-வது, முதல் நிகழ்ச்சி என்ற வரிசையில் நோட்டுக்களை எடுத்து பார்ப்பார்கள். இதில் ஒரு நோட்டில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு முந்தைய நிகழ்ச்சி நோட்டுகளை எடுத்துப் பார்க்கமாட்டார்கள். எனவே, முதல் நிகழ்ச்சிக்கு செய்தால் அதன்பிறகு வரும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமல் மொய் செய்துவிட வேண்டும்.

இந்த மொய் வரிசையில் இருந்து விலக வேண்டும் என்று விரும்பினால், நமக்கு ஒருவர் ரூ.1000 செய்திருந்தால், திரும்பச் செய்யும்போது மொத்தமாக ரூ.1100 செய்துவிட வேண்டும். ‘மேற்படியார் புதுநடை’ எனத் தனியாகக் குறிப்பிடவில்லை என்றால் மொய்யில் இருந்து முறித்துக்கொண்டு விட்டார் எனப் புரிந்துகொள்வார்கள்.

பெரும்பாலும் குழப்பங்கள் நடப்பதில்லை. முறை களைப் பின்பற்றவில்லை என்றால் நாணயம் இல்லாத ஆள் என்று பெயராகிவிடும். தங்கள் நாணயத்தைக் கெடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. மொய் பணத்தைப் போடும் குவளைச் சட்டியில் புதுத்துண்டு, பூக்கள் சுற்றி, கையில் ஒரு நோட்டுடன் மொய் பிரிப்பவர்கள் அமர்ந்து இருப்பார்கள். பெரிய குடும்பங்களில், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், ஒரே அரங்கத்தில் 6, 7 இடங்களில் உட்கார்ந்து மொய் பிரிப்பார்கள். இப்போது, ‘ஸ்வைப் மிஷின்’ மூலம் மொய் பெறும் நவீன பழக்கமும் வந்து விட்டது" என்கிறார்.

Next Story