கசப்பான அனுபவங்களை கணவரிடம் சொன்னால்..?


கசப்பான அனுபவங்களை கணவரிடம் சொன்னால்..?
x
தினத்தந்தி 15 Sep 2019 1:15 AM GMT (Updated: 14 Sep 2019 1:44 PM GMT)

இனிப்பும், கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை. எல்லோரது வாழ்க்கையிலும் கசப்பான இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது.

பெரும்பாலான பெண்கள், ‘திரு மணத்திற்கு முந்தைய தங்களது கசப்பான அனுபவங்களை, திருமணத்திற்கு பின்பு கணவரிடம் சொல்லலாமா? கூடாதா?’ என்று குழப்பம் அடைகிறார்கள்.

நட்பு வட்டத்தினர் ‘சொன்னால் ஒன்றும் தப்பில்லை’ என்றும், ‘சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று உறவினர்களும் சொல்லி பயமுறுத்துவார்கள். இந்தநிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார் மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு.

பெண்கள், தங்கள் கணவரின் கடந்த காலத்தை சுமை தாங்கிகளாக இருந்து ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு. ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப் படுத்த தயங்குகிறாள்.

நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம்காலமான நியதி!

குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக பெண்கள் கருதப்படுகிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

ஆண்களைப் போன்று பெண்களும் உயிரும், உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை சமூகம் ஏற்றுக்கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, அவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது. அதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்த்த ஆண்களும் நமக்கு முன்னால் வாழ்ந் திருக்கத்தான் செய்கிறார்கள்.

பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம். யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும்.

கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால் பெண்கள் கடந்த கால அவலங்களை மனதில் இருந்து தூக்கி எறிந்து அப்புறப்படுத்திவிடவேண்டும். அந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் கணவரிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது!

Next Story