அங்கோர்வாட் கோவில்: கல்லிலே கலைவண்ணம்- 23.சிற்பக் கலையின் உச்சம்


பார்வதி சிலையின் தலை துண்டிக்கப்படும் முன்பு எடுத்த படம்; பண்டி ஸ்ரீ கோவில் சுவர்; சிவன்-பார்வதி சிலை
x
பார்வதி சிலையின் தலை துண்டிக்கப்படும் முன்பு எடுத்த படம்; பண்டி ஸ்ரீ கோவில் சுவர்; சிவன்-பார்வதி சிலை
தினத்தந்தி 15 Sep 2019 8:43 AM GMT (Updated: 15 Sep 2019 8:43 AM GMT)

அத்துவானக் காட்டுக்குள் இப்படி ஓர் அழகிய கோவிலா?

இவ்வளவு கலை நுணுக்கத்துடன் ஒரு கோவில், மனிதர்களால் கட்டப்பட்டது என்பது நம்பக்கூடியது தானா?

மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஓர் இடத்தில் வைத்து கட்டப்பட்டு, அப்படியே வான்வழியாகக் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்ட அதிசயமா?

அளவில் சிறியது என்றாலும், அழகில் உன்னதமான இடத்தை வசப்படுத்த இதைப்போல வேறு ஒரு கட்டிடத்திற்கு சாத்தியம் ஆகுமா?

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சிற்ப வேலைப்பாடு மிக்க எந்தக் கோவிலும், இந்தக் கோவிலின் சிற்ப வேலைப் பாடுகளுக்கு சவால் விட முடியுமா?

இப்படி எல்லாம் வியக்க வைக்கும் வினாக்கள், சிவனுக்காகக் கட்டப்பட்ட பண்டி ஸ்ரீ என்ற அதிசயக் கோவிலைப் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் நிச்சயம் எழும்.

கம்போடியாவில், தமிழர்களின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கோவில்கள் பிரமாண்ட அளவில் கட்டப்பட்டு இருக்கும் நிலையில், சிறிய அளவிலானது என்ற போதிலும் இந்தக் கோவில் அனைத்துக் கோவில்களிலும் இருந்து தனித்து நோக்கப்படுகிறது.

கம்போடியாவில் கட்டப்பட்ட கோவில்களிலேயே அங்கோர் வாட் கோவில் ‘பிரமாண்டம்’ என்றால், பண்டி ஸ்ரீ கோவில் அனைத்துக் கோவில்களிலும் ‘பிரமாதம்’ ஆகும்.

“பண்டி ஸ்ரீ கோவிலை நீங்கள் பார்க்கவில்லை என்றால், பழங்காலக் கோவில்களைப் பார்ப்பதற்காக நீங்கள் கம்போடியாவுக்கு வந்ததற்கு அர்த்தமே இல்லை” என்பது, சுற்றுலாப் பயணிகளிடம் கம்போடிய மக்கள் தெரிவிக்கும் ஏகோபித்த கருத்து.

உலகிலேயே மிகச்சிறந்த வேலைப்பாடு மிக்க கோவில்கள் என்ற குறுகிய பட்டியலில், பண்டி ஸ்ரீ கோவில் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, கோலாகலச் சிறப்புடன் திகழ்ந்த இந்தக் கோவில், பின்னர் காடுகளால் சூழப்பட்டதால், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனது.

100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இந்தக் கோவில் மீண்டும் புகழ் வெளிச்சம் பெற்று இருக்கிறது.

அதி அற்புதமான சிற்பங்களையும், பல அதிசயத் தகவல் களையும் சுமந்து கொண்டு இருக்கும் பண்டி ஸ்ரீ என்ற இந்தக் கோவில், தன்னைக் காண வருபவர்களை பல வகைகளிலும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது.

பண்டி ஸ்ரீ என்ற கெமெர் மொழி சொல்லின் பொருள், ‘பெண்களின் கோட்டை’ அல்லது ‘அழகிகளின் மாளிகை’ என்பதாகும்.

அழகிய பெண்களின் சிலை ஏராளமாகக் காணப்படுவதால் இந்தக் கோவில், பண்டி ஸ்ரீ என்ற பெயரால் அழைக்கப்பட்டு இருக்கலாம்.

தமிழர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், பெண்டிர் களைப் பெருமைப்படுத்தும் இந்தக் கோவில், பண்டி ஸ்ரீ என்று அழைக்கப்படுவது முற்றிலும் பொருத்தமானது தான்.

ஆனால் பண்டி ஸ்ரீ என்ற பெயர் சமீப காலத்தில் சூட்டப்பட்ட பெயர் ஆகும்.

இந்தக் கோவில் கட்டப்பட்ட போது அதன் பெயர், ‘திரிபுவன மகேசுவரம்’ என்பதாகும்.

திரிபுவனம்- அதாவது மூன்று உலகத்திற்கும் மகா ஈசுவரனான சிவனை வழிபடுவதற்காகக் கட்டப்பட்ட கோவில் என்பதால், இந்தக் கோவில் திரிபுவன மகேசுவரம் என்று பெயரிடப்பட்டது.

கோவிலின் மூலஸ்தானத்தில் திரிபுவனேசுவரர் என்ற லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பெரும்பாலான கோவில்கள், அங்கோர் நகர வளாகத்தைச் சுற்றியே அமைந்து இருக்கும் நிலையில், பண்டி ஸ்ரீ கோவில் மட்டும், அந்தப் பகுதியில் இருந்து தொலைவில் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது சியம் ரீப் என்று அழைக்கப்படும் அங்கோர் நகரில் இருந்து வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அங்கோர் நகரக் கோவில்கள் எல்லாம் கட்டப்படுவதற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குலென் என்ற மலையின் அடிவாரப் பகுதியிலும் பண்டி ஸ்ரீ கோவில் அமைந்து இருக்கிறது.

பண்டி ஸ்ரீ கோவிலைச் சுற்றி ‘ஈசுவரபுரம்’ என்ற பெயரில் சிறிய ஊர் ஒன்று இருந்தது.

14-ம் நூற்றாண்டில் ஏதோ ஒரு காரணத்தால் அங்கோர் நாகரிகம் அழிந்த போது, ஈசுவரபுரத்தில் இருந்த மக்களும் அந்தச் சமயத்தில் கூண்டோடு மாயமாகிவிட்டனர். பின் வந்த நூற் றாண்டுகளில் அவர்களின் குடியிருப்புகள் எல்லாம் காலப்போக்கில் மண்ணோடு மண் ஆகிவிட்டன.

கற்களால் கட்டப்பட்ட கோவில் மட்டும் அழிவைச் சந்திக்காமல் அப்படியே இருந்தது. ஆனால், அந்தப் பகுதியை சுற்றி வளைத்த மரங்களும் செடி கொடிகளும் மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் கோவிலை மறைத்துக் கொண்டன.

இதனால், 400 ஆண்டுகளாக இந்தக் கோவில் காடுகளுக்குள் சிக்கிக் கொண்டு இருந்தது.

1914-ம் ஆண்டு, ஒரு நாள் பிரான்ஸ் நாட்டின் நிலவியல் நிபுணர் கேப்டன் மாரெக் என்பவர், நில ஆய்வுக்காக அந்த வழியாகச் சென்ற போது, கட்டிடத்தின் சில பகுதிகள் மண் குவியலாலும், மரங்களாலும் சூழப்பட்டு இருப்பதைப் பார்த்தார்.

அப்போது தான் அழகிய கோவில் ஒன்று இடிபாடு களுடன் அங்கே புதைந்து இருப்பது தெரியவந்தது.

அந்தக்கோவில் அதிக அளவில் சேதம் அடைந்தும், யாரும் எளிதில் செல்ல முடியாத அளவு புதர் மண்டிக் கிடந்த நிலையிலும் இருந்ததால், அங்கே ஆய்வுப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படவில்லை.

கோவிலின் அமைப்பைப் பார்த்த அதிகாரிகள், இந்தக் கோவில் மிகப் பழமையானது அல்ல; இது 13 அல்லது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து மெத்தனமாக இருந்துவிட்டனர்.

அங்கே அழகிய சிற்பங்கள் ஏராளம் இருப்பது தெரிய வந்தபிறகு, அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகே புதர்களை அகற்றும் உழவாரப்பணிகள் தொடங்கப்பட்டன.

அப்போது தான் அந்தக் கோவில், 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையானது என்பது தெரிய வந்தது.

கோவிலின் நான்காம் பிரகாரத்தில் உள்ள கோபுரத்தில் ஒரு கல்வெட்டு இருப்பது தொல்லியல் பணி களின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

சமஸ்கிருத மொழியிலான அந்தக் கல்வெட்டு, மன்னர் ஐந்தாம் ஜெயவர்மன் ஆட்சியின் கடைசி ஆண்டான கி.பி.968-ம் ஆண்டு எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கி.பி.967-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி அந்தக் கோவில் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறும் கல்வெட்டு செய்தியில், அன்றைய தேதியில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வானத்தில் எந்த இடத்தில் இருந்தன என்ற வானவியல் விவரம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்தக் கல்வெட்டு செய்திகள் மூலமாகத்தான் கோவிலின் முழுமையான வரலாறு அறியப்பட்டது.

கம்போடியாவில் ஏராளமான கோவில்கள், அங்கு ஆட்சியில் இருந்த மன்னர் களால் கட்டப்பட்டவை என்ற நிலையில் பண்டி ஸ்ரீ கோவில், மன்னர் அல்லாத ஒருவரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மன்னர் ஹர்ஷவர்மனின் பேரன்களில் ஒருவர் யஜ்னவராகர். இவர் தமிழக அந்தணர்களிடம் சிறப்பான பயிற்சி பெற்று, அனைத்துத் துறைகளிலும் வல்லவராக விளங்கினார்.

மன்னர் ராஜேந்திரவர்மனின் மத குருவாக இருந்த யஜ்னவராகர், ஆயுர்வேத மருத்துவர், வானசாஸ்திர நிபுணர், மாயாஜாலம் தெரிந்தவர் என்று பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றினார்.

இதனால் அவருக்கு மன்னர் ஏராளமான நிலத்தை தானமாக வழங்கினார்.

தனக்குத் தானமாகக் கிடைத்த இடத்தில், சிவனுக்கு அழகிய கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று யஜ்னவராகர் தீர் மானித்தார்.

தனது சகோதரர் விஷ்ணுகுமார் உதவியுடன் அவர் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார்.

இந்தப் பணிக்கு தமிழகத்தில் இருந்து சிற்பக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கோவில் கட்டி முடிய ஓர் ஆண்டு இருந்த நிலையில் மன்னர் ராஜேந்திரவர்மன் மரணம் அடைந்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து பட்டத்திற்கு வந்த ஐந்தாம் ஜெயவர் மனுக்கும் மத குருவாக யஜ்னவராகர் பணிபுரிந்தார். இந்த மன்னரின் காலத்தில் தான் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவல்கள் எல்லாம், கோவில் கல்வெட்டில் காணப்பட்டவை ஆகும்.

1931-ம் ஆண்டு முதல் 1936-ம் ஆண்டு வரை கோவிலில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

இடிந்து விழுந்த கோவில் கற்களுக்குப் பதில் புதிய கற்களை வைக்காமல், அந்தக் கோவில் கற்களையே பயன்படுத்தும் நவீனமுறை இந்தக் கோவிலில் தான் முதன் முறையாக அமல்படுத்தப்பட்டது.

சீரமைப்புப் பணிகளின் போது தான் மிக அழகாக ஜொலிக்கும் இந்தக் கோவிலின் முக்கியத்துவம் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

கோவிலின் அனைத்து சுவர்கள் முழுவதும், ஒரு அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

கோவில் கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருக்கிறது. 210 அடி நீளம் உள்ள நடைபாதையைக் கடந்து கோவில் வளாகத்திற்கு செல்ல வேண்டும்.

கோவிலின் நான்காம் பிரகாரத்தில் ஒரு கோபுரம் உள்ளது. அதைத் தாண்டி மூன்றாம் பிரகாரத்திற்குச் சென்றால் அதனை அடுத்து பெரிய அகழி உள்ளது.

இந்த அகழி காரணமாக, கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரம் ஆகியவை ஒரு தீவின் நடுவே அமைந்து இருப்பது போலக் காட்சி அளிக்கின்றன.

கோவிலின் மையத்தில் வடக்கு-தெற்காக மூன்று கோபுரங்கள் உள்ளன. தெற்குப் பகுதியிலும் மையத்திலும் உள்ள கோபுரங்கள் சிவனுக்கும், வடக்குப் பகுதியில் உள்ள கோபுரம் விஷ்ணுவுக்கும் கட்டப்பட்டு இருக்கிறது.

மற்ற கோவில்களில் இல்லாத வகையில் கோபுரத்தின் மீது கலசம் ஒன்றும் காணப்படுகிறது.

இதன் காரணமாக, பண்டி ஸ்ரீ கோவில் பெரும்பாலும் தமிழகக் கோவில்களின் அமைப்பிலேயே கட்டப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

1941-ம் ஆண்டு, அப்போது கம்போடியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்த பிரான்ஸ் நாட்டுக்கும், தாய்லாந்துக்கும் இடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினையை ஜப்பான் நாடு தீர்த்து வைத்தபோது ஏற்பட்ட உடன்படிக்கைப்படி பண்டி ஸ்ரீ கோவில் இருந்த இடம், தாய்லாந்து எல்லைக்குள் வந்து இருந்தது. பின்னர் ஒரு வழியாக அந்த இடத்தை மட்டும் விட்டுக் கொடுக்க தாய்லாந்து முன்வந்தது.

இதனால், 1946-ம் ஆண்டு பண்டி ஸ்ரீ கோவில் கம்போடியாவின் ஓர் அங்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கோவிலில் தான் கையில் மாங்கனி ஏந்திய காரைக்கால் அம்மையாரின் உருவச் சிலை உள்பட ஏராளமான அபூர்வச் சிலைகள் உள்ளன.

சிலை திருடர்களால் கொள்ளையடிக்கப்படும் ஆபத்து இருப்பதாலும், சேதப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவும் பல சிலைகள் அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக மாதிரி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அபூர்வ சிலைகள், புனாம் பென் நகர அருங்காட்சியகத்திலும், பிரான்ஸ் நாட்டு அருங்காட்சியகத்திலும் உள்ளன.

சிவன் அமர்ந்த நிலையில், அவரது இடது பக்க தொடையில் பார்வதி உட்கார்ந்து இருக்கும் அழகிய சிலை, புனாம் பென் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அந்த அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த கயவர்கள், பார்வதியின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்று கொள்ளை விலைக்கு விற்றுவிட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல எழுத்தாளர் ஒருவர், பண்டி ஸ்ரீ கோவிலில் இருந்து ஏராளமான சிலைகளை எடுத்துக் கொண்டு கம்போடியாவில் இருந்து தப்பிச் செல்லும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டார்.

அது பற்றிய விரிவான தகவலையும், பண்டி ஸ்ரீ கோவிலின் ஆச்சரியமான சிற்ப வேலைப்பாடுகள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)

Next Story