தந்தை பெரியாரிடம் கற்றதும், பெற்றதும்...!


தந்தை பெரியாரிடம் கற்றதும், பெற்றதும்...!
x
தினத்தந்தி 16 Sep 2019 5:36 AM GMT (Updated: 16 Sep 2019 5:36 AM GMT)

நாளை (செப்டம்பர் 17-ந் தேதி) தந்தை பெரியார் பிறந்தநாள்; 1943-ல் கடலூர் முதுநகரில் நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது, என்னை கல்வியிலும், கழகத்திலும் பக்குவப்படுத்திய எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அறிஞர் அண்ணா 1942-ல் தொடங்கிய ‘திராவிட நாடு’ வார ஏட்டிற்கு கடலூர் தோழர்கள் வாசகர்கள் சார்பில் ரூபாய் 112 திரட்டியதை ஒரு பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவிடம் அளித்தார்.

பொதுக்கூட்ட மேடையில் மேசைமீது என்னை ஏற்றி, அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேச வைத்தார். அதுதான் எனது கன்னிப்பேச்சு மேடை அரங்கேற்றமும்கூட.

சாரங்கபாணி என்று என் வீட்டார் எனக்கு வைத்த பெயரை, ‘வீரமணி’ என்று மாற்றி வைத்தார் எனது ஆசிரியர். தந்தை பெரியாரைப்பற்றிப் படித்தும், எனது ஆசிரியர் சொல்லியும் அறிந்த எனக்கு ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பு தென்ஆற்காடு மாநாட்டுக்காக முதல் நாள் இரவே வந்து திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தினார்.

அய்யாவைப் பார்த்தவுடன் ஒரு பயம் கலந்த மரியாதை, சிங்கத்தைப் பார்த்து பயந்தும், மகிழ்ந்தும் உள்ள ஒரு சிறுவனின் மனநிலை. அய்யா அன்புடன் என்னை அழைத்து அருகில் நிறுத்தி, என்னைப்பற்றிய விவரங்கள் கேட்டு, ‘நல்லா படியுங்கள்!’ என்று கூறி அனுப்பினார். என் வாழ்வின் திருப்பமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்த நாள். அன்றைய மாநாட்டில் நான் மேசைமீது ஏற்றி நிறுத்தப்பட்டு, அய்யா, அண்ணா மற்றும் இயக்க முக்கியஸ்தர்கள், தோழர்கள் சுமார் ஆயிரம் பேருக்குமேலே கூடிய கூட்ட அரங்கில், பேசினேன். உற்சாகக் கைதட்டல்கள் என்னை பயமறியாத இளங்கன்றாக ஆக்கியது.

அடுத்துப் பேசிய அறிஞர் அண்ணா என் பேச்சைக் குறித்து, “இப்போது பேசிய இந்த சிறுவன், வைதீக மேடையில் இப்படிப் பேசினால், பார்வதி பாலை உண்ட திருஞானசம்பந்தன் என்று கூறியிருப்பார்கள் அவர்கள்; அவன் உண்டது பெரியாரின் பகுத்தறிவுப் பால்; இளம் வயதிலேயே இப்படித்தான் பகுத்தறிவுப் பால் மாணவச் சிறுவர்கள் முதற்கொண்டு ஊட்டப்படவேண்டும்” என்றார். அன்று முதல் பலர் “திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தன்” என்று இன்றுகூட அண்ணா சொன்னதை நினைவூட்டியே வருகிறார்கள்.

அடுத்த சில வாரங்களில் சேலத்தில் 1944-ல் திராவிடர் கழக பெயர் மாற்றப்பட்ட நீதிக்கட்சி மாநாடு. அதற்கும் எங்களை ஆசிரியர் அழைத்துச்சென்றார்; தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்ட தோழர்களின் உணர்ச்சிக் கடல் என்னைப் போன்றவர்களின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்தது.

தந்தை பெரியார், எதையும் வீணாக்கக்கூடாது; செல்லும் ஊர்களில் சிக்கனமாகவும், எளிமையாகவும் ஏற்பாடு செய்யும் கழகத் தோழர்களை சங்கடத்திற்கு ஆளாக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சியானாலும் ஒப்புக்கொண்டு விட்டால் கட்டாயம் சென்று கலந்துகொள்ளவேண்டும் என்ற ஒழுங்கு, கட்டுப்பாட்டை எங்களுக்குப் போதிப்பார்கள்!

ஒருமுறை, அய்யாவிடமிருந்து கடலூருக்குத் தந்தி, “சேலத்திற்கு உடனே புறப்பட்டு வந்து என்னை சந்தியுங்கள்” என்று. அதன்படி கடலூரிலிருந்து சென்றேன்; அன்னை மணியம்மையார் சொன்னார், “அய்யாவுக்கு 102 டிகிரி காய்ச்சல் வயிற்றுப் போக்கும் உள்ளது. சேலம் மாவட்டச் சுற்றுப்பயணத்தில் 3, 4 ஊர்கள் அரூர் பகுதியில் பொதுக்கூட்டங்களை அய்யா தள்ளி வைக்க விரும்பவில்லை; நீங்கள் பேசினால், பிறகு கொஞ்ச நேரம் அய்யாவும் பேசி, முடித்துவிடலாம்; ஏற்பாடு செய்த தோழர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்கும் என்பதற்காகத்தான் உங்களை வரவழைக்கச் சொன்னார்” என்றார். அய்யா எதையும் மறைத்துப் பேசவே மாட்டார். என்ன நினைக்கிறாரோ அதை தமது தோழர்களிடம் வெளிப்படையாகவே கூறத் தயங்கமாட்டார்!

“கோவை மில் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து வட்டியை இயக்கத்தின் செலவுகளுக்குப் பயன்பட வழி செய்தேன். அம்மில் அதிபர் இன்சால்வெண்ட் கொடுத்துவிட்டார். அதை நினைத்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி, அதுவும் எனது சுகவீனத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்றவர், சிறிதுநேர அமைதிக்குப் பின், அவரே அந்தக் கவலையிலிருந்து நீங்கிய நிலையில் பளிச்சிட்டதைப்போலச் சொன்னார், “உம் அவர்கள் பல ஆண்டுகளாகத் தந்த ஆண்டு வட்டியே இழந்த ஒரு லட்சத்திற்குமேல் வந்திருக்கும். பரவாயில்லை” என்று தனக்குத்தனே சமாதானம் அடைந்தார். அய்யாவை, “கஞ்சன், கருமி” என்றெல்லாம் கூறுபவர்கள், அவரை அறிந்துகொள்ளத் தவறியவர்கள். அல்லது மேம்போக்காக நுனிப்புல் மேய்பவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

தனது முழுச் சொத்தையும் பொது அறக்கட்டளையாக்கி, அதில் தனது சொந்த பந்தங்களை இடம்பெறச் செய்யாது பொதுமக்களுக்கே ஆக்கி வைத்த தலைவர் வேறு யார்?

எதற்குச் செலவழிக்கவேண்டுமோ அதற்குத் தாராளமாய்ச் செலவு செய்வார்; ஆடம்பரம், தேவைக்கு அதிகமாகச் செலவழித்துத் தகுதிக்கு மீறி வாழ்வது பொதுத் தொண்டர்களுக்கு ஏற்றதல்ல என்பதை வகுப்பில் பாடம் எடுப்பதுபோல் உணர்த்துவார்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு என்னை அவர்கள் ‘விடுதலை’க்கு ஆசிரியராக நியமித்தபோது, ‘வரவேற்கிறேன்’ என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை விடுத்தது மட்டுமல்லாது, “விடுதலை”யை அவரது ஏகபோகத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்றும் எழுதினார். அந்த நாளில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ‘விடுதலை’ அலுவலகத்திற்கு அழைத்து வந்து, என்னை நாற்காலியில் அவருக்கு எதிரில் அமர வைத்தார்; அதுபோலவே, எனது பணிகளை இறுதிவரை ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தினார்களே தவிர, ஒருநாள்கூட கண்டித்ததே இல்லை.

‘ஆசிரியர்’ என்ற அடைமொழி அய்யா தந்தது; பயன்படுத்தியது. பெரியார் திடலில் வந்து தங்கும்போதுகூட, ‘ஆசிரியர் வந்துவிட்டாரா?’ என்றுதான் கேட்பார். இது எனக்குப் பெருமையைத் தர அல்ல ஒரு பொறுப்பை ஒருவரை நம்பி கொடுத்துவிட்டால், அப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நாம் மரியாதை தந்தால்தான், மற்றவர்கள் அவரை மதிப்பதோடும், ஒழுங்காக ஒத்துழைப்பு நல்கவும் ஆன சிறந்த நிர்வாக முறையும்கூட என்பதால்தான். பிறர் கற்கவேண்டிய பாடம் இது!

ஒரு தடவை, பல ஆண்டுகள் அய்யாவை தெரிந்த பணி செய்யும் ஒரு தோழர் அலுவலகத்தில் ஏதோ சம்பள உயர்வு கேட்க அய்யாவிடம் சென்று பேச்சைத் தொடங்கியவுடன், தந்தை பெரியார், “நீங்கள் என்னை வந்து சந்திப்பதற்குமுன் ஆசிரியரிடம் சென்று அனுமதி பெற்று வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டு, திருப்பி அனுப்பியதை, அந்த நண்பரே பிறகு என்னிடம் கூறி, தனது தவறான நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்!

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண்

அய்யுறவும்

தீரா விடும்பை தரும்” என்ற குறளுக்கு ஏற்ப, இவரது தலைமை ஆளுமையில் அவர்கள் ஒருவரை நம்பி பொறுப்புக் கொடுத்துவிட்டால், பிறர் சொல்வதைக் கேட்டு, நம்பி தன் கருத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளவோ, அதை வைத்து அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கவோ முன்வரமாட்டார்.

எதையும் ஆழமாகக் கவனிப்பார்; மனிதர்களை சரியாக எடைபோடத் தவறமாட்டார்!

ஒருமுறை நான், அய்யாவிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புகின்றனர் சிலர் என்று (பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு) கூறிக்கொண்டிருந்தபோது, என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதைக் கவனித்துவிட்டு, என்னை அமைதிப்படுத்தும் வகையில் சொன்னார்,

“அடப் பைத்தியக்காரா, உன்னை பெரிய புத்திசாலி என்று நினைத்தேன் நீங்கள் இதற்கெல்லாம் மனவருத்தம் அடையலாமா? மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று கவலைப்படுபவர்களால் எதையும் சரியாகச் செய்ய முடியாது. (பைத்தியக்காரா என்பது அவரது வாஞ்சை பொங்கும் சந்தர்ப்பங்களில் அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் ஆகும்!) நான் என்ன உன்னைப்பற்றி நினைக்கிறேன் என்பதைப்பற்றி மட்டும் யோசித்துப் பார்; மற்றவர்கள் என்ன பேசினால், எழுதினால் என்ன?” என்று கூறியது மிகப்பெரிய அறிவுரை அனுபவத்தின் முத்திரையோடு முகிழ்ந்த அறிவுரை அல்லவா!

ஒருமுறை எனக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம். அய்யா என்னை அழைத்து மிகப்பெரிய பொறுப்பில் இருந்த ஒருவரிடம் சென்று, “நான் சொல்வதை அப்படியே அவரிடம் கூறுங்கள். அவருக்கு அது பயனளிக்கும்” என்று கூறினார்கள். நான் எனது சிறுகுறிப்பு ஏட்டில் அந்த வாசகங்களை அப்படியே எழுத்து மாறாமல் குறித்துக்கொண்டு, அவரைத் தனியே சந்தித்து, அய்யா கூறிவரச் சொன்னதை அப்படியே சொன்னேன். அவரும், அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்; இன்ப அதிர்ச்சியோடு அய்யாவுக்கு நன்றியும் சொல்லச் சொன்னார்!

“நீங்கள் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளுங்கள் அதை நாம் எதிர்கொண்டு சமாளித்துவிடலாம்; ஆனால், நண்பர்களாகப் பழகுபவர்களை மாத்திரம் மிகவும் கவனமாகப் பார்த்து தேர்வு செய்து பழகுங்கள்; இன்றேல் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு, பிறகு அது வேதனையைத் தரும்.”

பொதுவாழ்வில் பெரிய பொறுப்பில் உள்ளவருக்குத் தந்தை, தலைவர் என்ற நிலையில் இருந்தவர் எத்தகைய பயனுறு அறிவுரையை அளித்தார் பார்த்தீர்களா?

என்னை செதுக்கிக் கொள்ள இந்தப் பாடங்கள், அன்றும், இன்றும், என்றும் துணை நிற்கின்றன.

‘இளமை முதலே தந்தை பெரியார் தொண்டனாக, பெரியாரின் வாழ்நாள் மாணாக்கனாக இருந்துவரும் அரிய வாய்ப்பினால், தனி வாழ்க்கையில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடவோ, முறையற்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டதோ கிடையாது. எங்களைப் பொறுத்தவரை, ‘சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு’ என்று தந்தை பெரியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையாகும்!

அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற பெற்ற பாடங்கள் உற்ற துணையாக என்றும் வழிகாட்டும்!

இப்படி எத்தனை எத்தனையோ, பல்கலைக்கழகப் படிப்பும், பட்டங்களும் தராத பாடங்கள் எங்களை இந்த இயக்கத்தை கட்டுப்பாடு காத்து, “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்” இரட்டை வேடதாரிகளாக இல்லாது, பேசுவதும், செயல்படுவதும் சுயமரியாதை, பகுத்தறிவு வாழ்க்கை நெறி என்பதையே அடித்தளமாக வாழ்ந்து வருவதற்கு அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற பெற்ற பாடங்கள் உற்ற துணையாக என்றும் வழிகாட்டும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

Next Story