2018-19-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியாவிற்கு ரூ.4,600 கோடி இழப்பு


2018-19-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியாவிற்கு ரூ.4,600 கோடி இழப்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 7:30 AM GMT (Updated: 16 Sep 2019 7:30 AM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர் இழப்பு

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர் இழப்பு கண்டு, ஏராளமான கடன் சுமை உள்ள நிலையில் அதனை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதலில் அதன் 76 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தனியார் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் 24 சதவீத பங்குகள் இந்திய அரசிடம் இருப்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. எனவே மொத்த பங்குகளையும் (100 சதவீதம்) விற்று விட மத்திய அரசு முடிவு செய்தது. அப்போதும் இத்திட்டம் வெற்றி பெறவில்லை.

அந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒத்திவைக்கவும், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்காக போதிய அளவு நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் அதனை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்பு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனை சேவை நிறுவனமான இ.ஒய். நிறுவனமே இப்போதும் நியமிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், 2018-19-ஆம் ஆண்டில் ஏர் இந்தியா சுமார் ரூ.4,600 கோடியை செயல்பாட்டு இழப்பாகக் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் அன்னியச் செலாவணி மாற்று மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் நடப்பு நிதி ஆண்டில் லாப பாதைக்கு திரும்பி விடலாம் என நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய சேவைகள்

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது ரூ.58 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருக்கிறது. இந்நிலையில் இம்மாதம் 27-ந் தேதி முதல் டாரன்ட்டோவிற்கும், நவம்பர் மாதத்தில் இருந்து நைரோபிக்கும் அதன் விமானச் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

Next Story