சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு


சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு
x
தினத்தந்தி 16 Sep 2019 9:07 AM GMT (Updated: 16 Sep 2019 9:07 AM GMT)

சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்தது. அதில் பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிக ஏற்றம் கண்டது. இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு கண்டது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

குறியீட்டு எண்கள்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 403.22 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 129.70 புள்ளிகள் முன்னேறியது.

அந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.50,580 கோடி அதிகரித்தது. அதில் பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.15,841 கோடி உயர்ந்து ரூ.2.60 லட்சம் கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.14,062 கோடி அதிகரித்து ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.8,012 கோடி உயர்ந்து ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது.

எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.7,695 கோடி ஏற்றம் கண்டு ரூ.3.60 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.3,036 கோடி அதிகரித்து ரூ.6.17 லட்சம் கோடியாக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு ரூ.1,933 கோடி உயர்ந்து ரூ.7.77 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 4 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. அதில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.21,126 கோடி வீழ்ந்து ரூ.8.04 லட்சம் கோடியாக குறைந்தது. ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.4,914 கோடி குறைந்து ரூ.2.95 லட்சம் கோடியாக இருந்தது.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.4,725 கோடி சரிந்து ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளின் மதிப்பு ரூ.2,998 கோடி குறைந்து ரூ.3.91 லட்சம் கோடியாக இருந்தது.


Next Story