நிலவில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பில்லா உலோகங்கள்...


நிலவில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பில்லா உலோகங்கள்...
x
தினத்தந்தி 16 Sep 2019 9:09 AM GMT (Updated: 16 Sep 2019 9:09 AM GMT)

நிலவை ஒரு அழகான முகமாக, ஒரு பெண்ணாக, ஒரு காதலியாக இப்படி பலவிதமாக வர்ணித்த கவிஞர்களை, கவிதைகளைத்தான் நமக்குத் தெரியும்.

ஆனால் அந்த நிலவில் உண்மையில் என்னதான் இருக்கிறது என்று பல்லாண்டுகால ஆய்வு களுக்குப் பின்னரும் இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

முதல் மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்து இன்று 50 வருடங்கள் 50 நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஐம்பது வருடத்துக்குப் பின்னும் நிலவு தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கின்றன.

அத்தகைய ஆய்வுகளில் ஒன்று, நிலவில் எந்த வகையான தாதுக்கள் இருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் சொல்ல முயன்றிருக்கிறது. மிகப்பெரிய விண்கற்கள் அல்லது சிறுகோள்கள் வந்து பூமியைத் தாக்கிவிட்டால் ஏற்படக்கூடிய அழிவை, ஆபத்துகளைத் தவிர்க்கவும், முடிந்தால் தடுக்கவும் பல்வேறு வசதிகளை நாசா உள்ளிட்ட பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கி பரிசோதித்து வருகின்றன.

ஆனால் அதேசமயம், பூமியில் வளங்கள் வேற்று கிரகங்களிலும், சிறுகோள் போன்ற விண்வெளி அமைப்புகளிலும் இருக்கும் என்று யூகித்து அவற்றை சேகரிக்கும் சுரங்கங்களை விண்வெளியிலேயே அமைக்கலாம் என்ற ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் முயற்சி செய்து வருவதும் மற்றொருபுறம் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொண்ட ஒரு சர்வதேச ஆய்வுக்குழு, 50 வருடங்களுக்கு முன்பு நிலவுக்குச் சென்ற அப்போலோ 15 மற்றும் 17 விண்கலங்கள் நிலவில் இருந்து கொண்டுவந்த சுமார் நானூறு கிலோ எடைகொண்ட மண் மற்றும் பாறை மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது.

நிலவில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை சேகரித்து கொண்டுவருவதல்ல இந்த புதிய ஆய்வின் நோக்கம். மாறாக, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் உட்புறத்தில் உள்ள வேதியல் அமைப்பு என்ன என்பதை கண்டறிவதே இந்த புதிய ஆய்வின் குறிக்கோளாக இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் தினசரி நிலவைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தாலும், அரை நூற்றாண்டுக்கு முன்பு நிலவில் இருந்து பூமிக்கு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்ட பல நூறு கிலோ எடைகொண்ட பாறைகளில்தான் நிலவு குறித்த முக்கியமான ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன என்பதுதான் உண்மை என்கிறார் கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ப்ரென்னான்.

மேலும், நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள் மீதான ஒரு ஆய்வு கடந்த 2007-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், நிலவின் பெரும்பகுதி இரும்பு விரும்பிகள் ('iron-loving') என்று அழைக்கப்படும் சைடரோபைல் (siderophile) தாதுக்களால் ஆனது என்று கண்டறியப்பட்டது.

முக்கியமாக, நிலவு உருவான உடனே அது விண்வெளியில் எந்த விதமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கும் சைடரோபைல் தாதுக்கள் சூரிய மண்டலத்தின் எச்சங்களில் இருந்து வந்திருக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டது. ஆனாலும், ஆய்வாளர்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் பல மடங்கு வேறுபாடுகள் கொண்டதாய் ஆய்வு முடிவுகள் இருந்தது.

இதற்குக் காரணம், நிலவின் நிலப்பரப்பு பூமியை ஒத்ததாக இருக்கும் என்ற பொதுவான கணிப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், நிலவும் பூமியும் பல ஒற்றுமைகளைக் கொண்டவையாய் இருந்தாலும், நிலவுக்கும் பூமிக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

எனவே, இந்த புதிய ஆய்வினை மேற்கொண்ட சர்வதேச ஆய்வுக்குழுவினர், நிலவின் வேதியல் மூலக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறிய அழுத்தம் சார்ந்த மற்றும் தெர்மோடைனமிக் ஆய்வு முறைகளைக் கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், நிலவிலுள்ள எரிமலைப் பாறைகளில் உள்ள கந்தகம் (sulphur), நிலவின் உட்புறத்தில் உள்ள இரும்பு சல்பைடுகளை (iron sulphide) அடையாளம் காட்டும் ஒரு கைரேகை போலவே உள்ளது என்றும், நிலவின் எரிமலைகளில் லாவா குழம்பு உருவானபோது, நிலவில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் பின்தங்கி இருக்கலாம் என்றும் கூறுகிறார் ஆய்வாளர் ப்ரென்னான்.

துரதிர்ஷ்டவசமாக, நிலவில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் எவை என்று இந்த புதிய ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டவில்லை என்றாலும்கூட, தற்போது நம் கைவசம் உள்ள நிலவுப் பாறைகளை ஆய்வு செய்வதன் மூலமாக நிலவின் வேதியல் அமைப்பையோ, அங்கு எந்தவிதமான விலைமதிப்பற்ற உலோகங்கள் இருக்கின்றன என்பதையோ கண்டறிய முடியாது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

எனவே, நிலவு குறித்த மேலதிக உண்மைகளை, முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால் நிலவுக்கு மீண்டும் சென்று அங்குள்ள பல நூறு அல்லது பல்லாயிரக்கணக்கான பாறை, மண் மாதிரிகளை கொண்டு வந்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் ஆய்வாளர் ப்ரென்னான்.

மேலும், நிலவின் தென் துருவத்துக்குச் சென்று அங்குள்ள மாதிரிகளை கொண்டுவர வேண்டியது அவசியம் என்கிறார் ப்ரென்னான். முக்கியமாக, நிலவுக்குச் சென்று ஆயிரக்கணக்கான மாதிரிகளைக் கொண்டுவந்து பின்னர் அதன்மீதான ஆய்வுகளில் அங்கு விலைமதிப்பற்ற உலோகங்கள் இருக்கின்றன என்று தெரியவந்தாலும்கூட, அவை சுலபமாக சேகரித்துவிடும் அளவுக்கு செரிவான மூலக்கனிமமாக இருக்காது என்றும், அவை எவ்வளவு செரிவாக இருக்கும் என்பதை எதிர்கால நிலவுத் திட்டங்கள்தான் உறுதி செய்ய வேண்டும் என்கிறார் ப்ரென்னான்.

ஆக மொத்தத்தில், நிலவு குறித்த முழுமையான உண்மைகளைக் கண்டறிய அதன் தென் துருவம்தான் சரியான இடம் என்பது பல ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனால்தான் இந்தியாவின் சந்திரயான்-2 திட்டம் நிலவின் தென்துருவத்தை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story