இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள், முக்கிய புள்ளிவிவரங்கள் தீர்மானிக்கும் - சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள், முக்கிய புள்ளிவிவரங்கள் தீர்மானிக்கும் - சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 9:23 AM GMT (Updated: 16 Sep 2019 9:23 AM GMT)

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள், முக்கிய புள்ளிவிவரங்கள் மற்றும் உலக நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்து இருக்கின்றனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நிகர ஏற்றம்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 403.22 புள்ளிகள் அதிகரித்து 37,384.99 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 129.70 புள்ளிகள் முன்னேறி 11,075.90 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், மொத்த விலை பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் உலக நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மொத்த விலை பணவீக்கம்

இன்று (திங்கள்கிழமை) ஆகஸ்டு மாத மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம் வெளிவர உள்ளது. இது பங்குச்சந்தை வட்டாரத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதமாக குறைந்து இருந்தது.

ஆகஸ்டு மாதத்தில் 2,613 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2,781 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 6 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) மொத்தம் 13,354 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 1.53 சதவீதம் குறைவாகும். எனினும், வர்த்தக பற்றாக்குறை குறைந்து இருக்கிறது. இதன் தாக்கத்தை சந்தைகள் வெளிப்படுத்தக் கூடும்.

ஊக்குவிப்பு சலுகைகள்

கடந்த சனிக்கிழமை அன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தார். இன்று இந்த இரண்டு துறைகளைச் சேர்ந்த பங்குகளும் சந்தை வட்டாரங்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.

நிர்மலா சீதாராமன் வரும் 19-ந் தேதி (வியாழக்கிழமை) பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பை ஆக்கப்பூர்வமாக தொழில்துறையினருக்கு கடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இந்தக் கூட்டமும் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்க உள்ளது.

கோவாவில் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகனம் உள்ளிட்ட சில முக்கிய துறைகளுக்கான வரி விகிதங்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் தேக்கம் கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சர்வதேச நிலவரங்கள்

நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் சர்வதேச நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் வட்டி விகிதங்கள் குறித்து அமெரிக்க ரிசர்வ் வங்கி 18-ந் தேதி எடுக்கப் போகும் நிலைப்பாடு சர்வதேச பங்குச்சந்தை வட்டாரங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கும்.

இது தவிர கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னியப் பங்கு முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற மற்ற உலக நிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Next Story