சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் + "||" + Day One Information: Cervical cysts affecting women

தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்
இன்றைய இளம் பெண்களுக்கு பிசிஓடி என்று அழைக்கப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் வாழ்வியல் மாற்றங்களே.
பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபட முடியும். இதற்கு பெண்கள் பின்பற்ற வழிமுறைகள் பல உள்ளன.

சர்க்கரை விஷத்துக்கு சமம் என்பதால் அதை அறவே தவிர்ப்பது சிறந்தது. சர்க்கரை தான் வில்லன் என்கிற நினைப்பில் வெல்லம், பனங்கற்கண்டு, தேன், பழச்சாறு இப்படி இனிப்பாக இருக்கும் மற்ற எல்லாம் ஓ.கே. என அர்த்தப்படுத்தி கொள்ள வேண்டாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகள் வேண்டாம். மைதா, பேக்கரி உணவுகள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், உப்பு அதிகம் சேர்த்த நொறுக்குத்தீனிகள் வேண்டவே வேண்டாம். ஒருமுறை உபயோகித்து, மீண்டும் சூடுபடுத்தப்படும் எண்ணெய், சரியாக மூடப்படாத நிலையிலிருக்கும் எண்ணெய் சீக்கிரமே ஆக்சிடைஸ் ஆகும்.

அதனால், எண்ணெயை எப்போதும் காற்றுப்புகாத பாட்டில்களில் நிரப்பிவைக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிட்டு எண்ணெய், மிக குறைந்த அளவு நெய் மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தலாம்.

உணவை தவிர்த்துவிட்டு பெரிய கிண்ணம் முழுக்க பழங்கள் சாப்பிடுவது அவர்களின் பிசிஓடி பிரச்சினைக்கு உதவாது. பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது ஆற்றலை எல்லாம் கொழுப்பாக மாற்றக்கூடிய (குறிப்பாக வயிறு மற்றும் இடுப்பை சுற்றிலும்) இன்சுலின் ஹார்மோன் வெளியேற்றத்தை தூண்டும்.

பெரும்பாலான பருப்பு வகைகளில் 50 முதல் 55 சதவீதம் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது. பெண்கள் சிலருக்கு இவை இன்சுலின் ஹார்மோன் சுரப்பை தூண்டி, அதன் விளைவாக ஆற்றல் எல்லாம் கொழுப்பாக மாறக் காரணமாவதுண்டு என்பதால், அதை தவிர்க்கலாம்.

கார்போ ஹைட்ரேட் உணவுகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மதிய உணவுக்கோ, இரவு உணவுக்கோ சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். சிலருக்கு மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டை கூட உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் அதை தவிர்த்துவிட்டு பழங்கள், காய்கறிகள் மற்றும் மஞ்சள் நிற பருப்புகளை மட்டும் சேர்த்து கொள்ள வேண்டும்.

சரியான புரத உணவுகள் உட்கொள்ளப்படும்போது, ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் தாறுமாறான ஏற்ற, இறக்கங்கள் சமநிலைக்கு வரும். மனநிலையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களும் மாறும். இனிப்பின் மீதான தேடல் குறையும். அடிக்கடி ஏற்படுகிற பசி உணர்வும் குறையும். ஒரே வாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழும். மீன், சிக்கன் அல்லது மட்டன் எதுவானாலும் குறைந்த அளவு எண்ணெயில் வீட்டிலேயே சமைத்து உண்பதுதான் சிறந்தது.

கோதுமை, பார்லி போன்றவற்றையும் பால், சீஸ், கேக், மில்க் ஷேக், கோல்டு காபி, லஸ்ஸி, மில்க் சுவீட்ஸ் போன்றவற்றையும் தவிர்க்கும்போது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை உணரலாம். இரவில் 10 மணிக்கு தூக்கம். காலை வெயில் உடலில் படும்படி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி. தினமும் சில நிமிடங்கள் யோகாசன பயிற்சி என வாழ்வியல் முறையை மாற்றிக்கொண்டால் இந்த கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் பிரச்சினையில் இருந்து பெண்கள் விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.