சந்தை நிலவரங்கள் சரியில்லாததால், எல்.ஐ.சி. வாங்கிய நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி சரிவு


சந்தை நிலவரங்கள் சரியில்லாததால், எல்.ஐ.சி. வாங்கிய நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி சரிவு
x
தினத்தந்தி 18 Sep 2019 5:56 AM GMT (Updated: 18 Sep 2019 5:56 AM GMT)

சந்தை நிலவரங்கள் சரியில்லாததால் எல்.ஐ.சி. வாங்கிய நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி சரிவடைந்துள்ளதாக தெரிகிறது.

முதலிடம்
ஆயுள் காப்பீட்டு துறையில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. 1956-ஆம் ஆண்டில் ரூ.5 கோடி மூலதனத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 4,851 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களும், 11.79 லட்சம் முகவர்களும் உள்ளனர்.

எல்.ஐ.சி. நிறுவனம் தனது பிரிமிய வருவாயில் 94 சதவீதத்தை முகவர்கள் வாயிலாக ஈட்டுகிறது. ஆன்லைன் மற்றும் வங்கிகள் வாயிலாக மீத வருவாய் கிடைக்கிறது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்நிலையில், நடப்பாண்டில், ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.77,221 கோடியை பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளது. இதே காலத்தில், பிரிமிய வருவாய் அடிப்படையில் இதன் சந்தைப் பங்களிப்பு 3.34 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஆயுள் காப்பீட்டுத் துறையில் அதிகபட்சமாக 73.06 சதவீத சந்தைப் பங்கினைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், நடப்புக் காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) எல்.ஐ.சி. நிறுவனத்தின் கைவசம் உள்ள (பட்டியலிடப்பட்ட) பங்குகளின் சந்தை மதிப்பு, அந்தப் பங்குகளின் இன்றைய விலை அடிப்படையில் ரூ.4.86 லட்சம் கோடியாக உள்ளது. 2019 ஜூன் இறுதியில் அது ரூ.5.43 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, அதனிடம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி அளவிற்கு குறைந்துள்ளது.

நிறுவன முதலீட்டாளர்
எல்.ஐ.சி. நிறுவனம் பங்குகள், கடன்பத்திரங்களில் அதிக அளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடவடிக்கைகளுக்கும் பெரும் ஆதரவு அளித்து வருகிறது. ஏராளமான நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ளதால் இந்நிறுவனம் பங்கு வெளியிட்டு நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.

Next Story