நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.4% உயர்வு


நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.4% உயர்வு
x
தினத்தந்தி 19 Sep 2019 9:07 AM GMT (Updated: 19 Sep 2019 9:07 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஜூலை) இயற்கை ரப்பர் உற்பத்தி 6.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

இந்தியா 6-வது இடம்

சர்வதேச ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தோனேஷியா இரண்டாவது இடத்திலும், மலேஷியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. வியட்நாம் நான்காவது இடத்திலும், சீனா ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. நம் நாடு உலகின் ஒட்டுமொத்த ரப்பர் உற்பத்தியில் சுமார் 5 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது.

நம் நாட்டில், 2016-17-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.91 லட்சம் டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது (5.62 லட்சம் டன்) அது 23 சதவீத வளர்ச்சியாகும். 2017-18-ஆம் நிதி ஆண்டில் 8 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 6.94 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆனது.

நடப்பு நிதி ஆண்டில், ஜூலை வரையிலான 4 மாதங்களில் 1.83 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி ஆகி இருக்கிறது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட சுமார் 6.4 சதவீதம் அதிகமாகும். அப்போது உற்பத்தி ஏறக்குறைய 1.72 லட்சம் டன்னாக இருந்தது.

ஜூலை மாதத்தில் மட்டும் 60,000 டன் இயற்கை ரப்பர் உற்பத்தியாகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 46,000 டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே மாதத்தில் ரப்பர் பயன்பாடு 95,000 டன்னாக உயர்ந்து இருக்கிறது.

உலக அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்திலும், பயன்பாட்டில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. உலக ரப்பர் பயன்பாட்டில் நமது பங்கு ஏறக்குறைய 8 சதவீதமாக இருக்கிறது. கணக்கீட்டுக் காலத்தில் ரப்பர் பயன்பாடு 3.90 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது.

மதிப்பீடு

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) 7.50 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி ஆகும் என்று ரப்பர் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் ரப்பர் இறக்குமதி 24 சதவீதம் உயரும் என்றும் அந்த வாரியம் தெரிவித்து இருக்கிறது.

Next Story