சிறப்புக் கட்டுரைகள்

தமிழக தொழில் வளர்ச்சியில் தலைவர்களின் தொலைநோக்கு பார்வை... + "||" + In the development of Tamil Nadu industry The vision of leaders ...

தமிழக தொழில் வளர்ச்சியில் தலைவர்களின் தொலைநோக்கு பார்வை...

தமிழக தொழில் வளர்ச்சியில் தலைவர்களின் தொலைநோக்கு பார்வை...
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் முயற்சியால், தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ளது.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் முயற்சியால், தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ளது. தாராளமயமாக்கலுக்கு பின், அன்னிய நேரடி முதலீடுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. புதுயுக நிறுவனங்கள் மற்றும் ‘ஆட்டோமொபைல்’ (வாகன உற்பத்தி தொழில்) பெரு நிறுவனங்கள் இங்கு உற்பத்தியை தொடங்கி உள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.8,830 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ள நிலையில், இதை பற்றி அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதம் உருவாகி உள்ளது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்த தி.மு.க., தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை பெற முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் செல்ல வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, வெளிநாடு செல்லாமலேயே பெரிய அளவில் முதலீடுகளை வரவழைத்து, ‘டைட்டல் பார்க்கை’ (தகவல் தொழில்நுட்ப பூங்கா) உருவாக்கி, ‘ஆட்டோமொபைல்’ துறையின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்களிப்பை செய்த வரலாற்றை சுட்டி காட்டுகிறது.

பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ள தமிழ்நாடு, நகரமயமாதலில் முதல் இடத்தில் உள்ளது. காமராஜர் ஆட்சி முதல் ஒரு துடிப்பு மிகுந்த தொழில்துறை கலாசாரம் இங்கு தொடர்கிறது.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்கள் மற்றும் புதிய மாநிலமான தெலுங்கானா ஆகியவை வேகமாக வளர்ந்து, பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய 2 செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் மரணத்திற்கு பிறகு, தமிழகம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

செயல்முறை பொருளாதார ஆராய்ச்சிகளுக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஏ.ஆர்) வெளியிட்டுள்ள மாநில முதலீடுகளுக்கான குறியீடு 2018 அறிக்கை, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகம் முதலீட்டாளர்களை கவரும் மாநிலம் என்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த குறியீடு அறிக்கை, இந்திய மாநிலங்களின் போட்டி திறன்களை, நிலம், தொழிலாளர்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழல், அரசியல் நிலைத்தன்மை, நிர்வாகம், தொழில்துறையினரின் கருத்துகள் ஆகிய ஆறு பிரிவுகளில் மதிப்பிட்டு உருவாக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் சிறந்த நிர்வாக முறை ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதை இது உறுதி செய்கிறது.அன்னிய நேரடி முதலீடுகளை பொறுத்த வரை, 2011-18-ல் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்துள்ள மொத்த அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு 2,975 கோடி டாலர்கள் என்று தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டு துறையின் தரவுகள் கூறுகிறது “தமிழகத்தில் கொள்கை தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய அரசுகள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும், அடுத்ததாக உருவாகும் அரசுகள் தொடர்ந்து செயல்படுத்துகின்றன” என்று தமிழக தொழில்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தரமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறமையான மனித வளம் ஆகியவை வளர்ச்சியை உந்துகின்றது.

தமிழகத்தை சேர்ந்த ‘ஆட்டோமொபைல்’ நிறுவனங்களான அசோக் லேலாண்ட், டி.வி.எஸ். மோட்டார்ஸ், டி.ஏ.எப்.இ, ராயல் என்பீல்ட் ஆகியவற்றுடன் போர்ட், மிட்ஷுபிசி, டாய்ம்லர், நிசான், ஹுண்டாய், ரெனால்ட் மற்றும் பி.எம்.டபிள்யூ போன்ற பன்னாட்டு ‘ஆட்டோமொபைல்’ நிறுவனங்களும் இங்கு உள்ளன. இன்று தமிழகம் உலகின் மிகப்பெரும் ‘ஆட்டோமொபைல்’ உற்பத்தி மையங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பயணிகள் கார் உற்பத்தியில் 25 சதவீதத்தையும், ‘ஆட்டோமொபைல்’ உதிரி பாகங்கள் உற்பத்தியில் 30 சதவீதத்தையும் தமிழகம் அளிக்கிறது. ஆண்டுக்கு 17.1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் தமிழகத்தில் உள்ளது. மூன்று நிமிடங்களுக்கு ஒரு கார் தயாரிக்க முடியும். 20 ஆண்டுகளில் இந்த சாதனையை தமிழகம் செய்துள்ளது.

சென்னை அருகே ஒரகடத்தில், ரூ.450 கோடியில், தேசிய வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இங்கு வாகன பாதுகாப்பு, புகை உமிழ்வு அளவு, செயல் திறனின் தரம் ஆகியவற்றை உலகத்தரத்தில் நிலைநிறுத்தவும், இந்திய ‘ஆட்டோமொபைல்’ தொழில்துறையை உலக தொழில்துறையுடன் நேர்த்தியான முறையில் ஒன்றிணைக்கவும் உதவுகிறது.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட முதலீடுகள் ஒரு ஆட்சியில் மட்டும் நடைபெறவில்லை. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சிகளில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிலையான கொள்கைகள், தொழில்துறை சூழலில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றை இரு தலைவர்களும் ஊக்குவித்ததே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் (ஜெயலலிதா ஆட்சி), 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை எதிர்நோக்கி, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2019 ஜனவரியில், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.8,830 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

தொழில்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், ‘2014 முதல் உற்பத்தி துறையில் 10 சதவீத வளர்ச்சி இலக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இதை அடைந்து வருகிறோம்’ என்று கூறினார். கடந்த திங்கட்கிழமை அன்று தமிழக அரசு மின்சார வாகன கொள்கையை அறிவித்தது. இத்துறைக்கான கொள்கையை வெளியிட்டுள்ள முதல் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 1.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு கூறுகிறது.