6 வயதில், அசாத்திய சாதனை ஓட்டம்


6 வயதில், அசாத்திய சாதனை ஓட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2019 12:25 PM GMT (Updated: 21 Sep 2019 12:25 PM GMT)

பெங்களூருவில் வசிக்கும் 6 வயது சிறுமி, ஹரிணிக்கு ஓட்டப்பந்தயம் என்றால் கொள்ளை பிரியம். அதனால்தான், பெங்களூருவை சுற்றி எங்கு ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட்டாலும், அதில் தவறாமல் கலந்துகொண்டு, வெற்றிக் கோப்பையை வென்றுவிடுகிறார்.

ஓட்டப்பந்தயம் என்றால், 100 மீட்டர், 500 மீட்டர் பந்தயம் அல்ல. இது கிலோமீட்டர்களில் கணக்கிடப்படும், மாரத்தான் ஓட்டப்பந்தயம். அதிலும் 5 கி.மீ. மாரத்தான் போட்டியை ஹரிணி வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார்.

போட்டியில் கலந்து கொண்டவர்களிலேயே மிகவும் வயது குறைந்த இந்த சிறுமிதான், 5 கி.மீ. தூரம் கொண்ட மாரத்தான் போட்டியின் வெற்றியாளர் என்பது அதில் பங்கேற்ற பலருக்கும் தெரியாத விஷயம். அசாத்தியமான சாதனை செய்துவிட்டு, வெற்றிக் கோப்பையுடன் போஸ் கொடுக்கிறார் அவர். 6 வயதிலேயே, 5 கிலோமீட்டர்களை ஓடி முடித்திருக்கும் ஹரிணியிடம் பேச முயற்சித்தோம். அவர்

* ஒருநாள் பொழுது, ஹரிணிக்கு எப்படி கழிகிறது?

‘‘அதிகாலை 4.45 மணிக்கு கண்விழித்துவிடுவாள். 5.30 மணிக்கு மைதானத்திற்குள் நுழைந்துவிடுவதுடன், ஓட்டப்பயிற்சிக்காக உடலை தயார் படுத்துவாள். காலை 7 மணி வரை ஓட்டப்பயிற்சி நடைபெறும். பிறகு பள்ளிக்கு தயாராகி, 8.30 மணிக்கு புறப்பட்டு செல்வாள். மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்பியவுடன், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகு நடன பள்ளிக்கு சென்று விடுவாள். அங்கிருந்து வீடு திரும்ப இரவு 7 மணி ஆகிவிடும். 9 மணி வரை பள்ளிப்பாடங்களை படித்துவிட்டு, தூங்க சென்றுவிடுவாள்.’’ மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில் பிசியாக இருந்ததால், அவரது தந்தை சிவபிரேம் கணேஷ் நம்மிடம் பேசினார். அவை...

* ஹரிணியின் ஓட்டப்பயிற்சி தொடங்கியது எப்படி?

‘‘நானும், என் மகன் ஹர்ஷித்தும் வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில், தினந்தோறும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்படி ஒருநாள், ஹரிணியும் எங்களோடு ஓட்டப்பயிற்சிக்கு வந்தபோது, அவளது அண்ணனுக்கு இணையாக ஓடினாள். அதாவது 5 வயது குழந்தையான ஹரிணி, 10 வயதுடைய அண்ணன் ஹர்ஷித்துடன் போட்டி போட்டாள். இதை பார்த்தபோதுதான், ஹரிணிக்கு இயல்பாகவே வேகமாக ஓடும் திறன் இருப்பதை உணர்ந்தேன். அதற்கு பிறகு, தினமும் காலையில் ஹரிணியை மைதானத்திற்கு அழைத்து சென்று ஓட்டப்பயிற்சியை வழங்கினோம். இதற்காக பிரத்யேக பயிற்சியாளரையும் நியமித்தோம்.’’

* எப்போது பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்?

‘‘ஓட்டப்பயிற்சியை தொடங்கிய சில மாதங்களிலேயே, பந்தயங்களில் கலந்து கொள்ள செய்தேன். பெங்களூருவை சுற்றி நடைபெறும் மழலைகளுக்கான ஓட்டப்பந்தயம், மாரத்தான் பந்தயம் போன்றவற்றில் பங்கேற்க வைத்தேன். ஆரம்பத்தில், வெற்றி என்பது சவால்கள் நிறைந்த ஒன்றாக தெரிந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளை தன் வசப்படுத்தினாள். 3 கிலோமீட்டர் மாரத்தான் பந்தயம், 4 கி.மீ. பந்தயம், 5 கி.மீ. பந்தயம் என ஹரிணி அடுத்தடுத்த நிலைகளுக்கு தன்னை உயர்த்தி கொண்டதோடு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறாள்.’’

* இதுவரை எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள்? எத்தனை போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளாள்?

‘‘இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்துதான், ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்கிறாள். இதுவரை மொத்தம், 8 ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறாள். 3 கி.மீ. பந்தயங்கள் ஆறிலும், 4 மற்றும் 5 கி.மீ. பந்தயங்கள் தலா ஒன்றிலும் பங்கெடுத்திருக்கிறாள். இதில் 3 பந்தயங்களில் முதலிடத்தையும், மற்ற பந்தயங்களில் இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடித்தும் சாதனை படைத்திருக்கிறாள்.’’

* பள்ளிப்படிப்புகளில் ஹரிணி எப்படி?

‘‘ஓட்டப்பயிற்சியில் மட்டுமல்ல, பள்ளிப்படிப்பிலும் ஹரிணிதான் முதலிடம். எதையும் நாங்கள் திணிப்பதே இல்லை. ஓட்டப்பயிற்சி, நடனம், படிப்பு என அனைத்தும் அவளது ஆசைப்படியே நடக்கிறது’’

* இன்று ஹரிணி ஓட்டப்பந்தயத்தில் அசத்தி கொண்டிருக்கிறாள். ஆனால் நீங்கள் ஹரிணியின் எதிர்காலம் எப்படியிருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

‘‘ஹரிணிக்கு இயல்பாகவே ஓட்டத்திறன் இருந்தது. நான் அதை அடையாளம் கண்டு ஊக்கப் படுத்தினேன். நாளை வேறு ஏதாவது திறமை அவளிடம் பளிச்சிட்டால், அதையும் ஊக்கப் படுத்துவேன். குழந்தைகளை ஊக்கப்படுத்துவது மட்டுமே என்னுடைய வேலை. அந்த ஊக்கத்தின் மூலம் எதிர்காலத்தை கட்டமைத்து கொள்வது, குழந்தைகளின் வேலை’’ என்று முடித்தார்.

தென்காசிக்கு அருகில் இருக்கும் ஆவுடையானூர், சிவபிரேம் கணேஷின் சொந்த ஊர். வேலை நிமித்தமாக பெங்களூருக்கு சென்றவர், அங்கேயே தங்கிவிட்டார். மனைவி செந்தில் தேவிகாவும் ஹரிணிக்கு பக்கபலமாக இருந்துவருகிறார்.

Next Story