போதை பொருட்களை ஒழித்தார், விழிப்புணர்வு அளித்தார், கின்னஸ் சாதனை படைத்தார்..!


போதை பொருட்களை ஒழித்தார், விழிப்புணர்வு அளித்தார், கின்னஸ் சாதனை படைத்தார்..!
x
தினத்தந்தி 21 Sep 2019 1:10 PM GMT (Updated: 21 Sep 2019 1:10 PM GMT)

‘‘இந்திய நாட்டின் பலமாக கருதப்படும் இளைய தலைமுறை, போதைப் பொருள் பழக்கத்தால் பலவீனமாக மாறி வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளிக்குழந்தைகளும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

புதுப்புது பெயர்களில் சமூகத்திற்குள் நுழையும் போதைப்பொருட்களும், பள்ளி பருவத்திலேயே பழக்கப்படும் போதைப்பொருள் பழக்கமும், இளம் தலை முறையினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி விடுகிறது. இந்த ஆபத்தில் இருந்து இளைஞர்களை காக்கவும், போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் நான் கள மிறங்கியிருக்கிறேன்’’ என்று தன்னை அழுத்தமாக அறிமுகப்படுத்தி கொண்டார், டாக்டர் வெங்கடேஷ்பாபு.

மதுரை விமான நிலைய சுங்க புலனாய்வு துறை தலைவரான இவர், கல்லூரிகளில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை 160-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், போதைப்பொருளுக்கு எதிரான சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருப்பதோடு, அதன்மூலம் ஏராளமான மாணவர்களை போதைப்பழக்கத்தில் இருந்தும் மீட்டெடுத்திருக்கிறார்.

மாணவர்களின் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நிற்கும் வெங்கடேஷ்பாபு, இதற்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையின் தென்மண்டல தலைவராக பணியாற்றியவர். அங்கு கிடைத்த பணி அனுபவமே இவரை போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வைத்திருக்கிறது.

‘‘மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையில் மூன்று வருடங்கள்தான் பணியாற்றினேன் என்றாலும், அப்போது அங்கு கிடைத்த பணி அனுபவம், என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம். ஏன்...? மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், கட்டாயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அனுபவம்’’ என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு உந்துசக்தியாக இருக்கும், பணி அனுபவத்தை அசைபோட்டார். இவரது பணி அனுபவம், ‘கடத்தல்’ வகை திரைப்படங்களைவிட சுவாரசியமாக இருந்தது.



‘‘நான், 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையின் தென்மண்டல தலைவராக பணியாற்றினேன். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. மேலும் தென்கிழக்கு மாநிலங்களின் தலைமையிடமான கொல்கத்தா அலுவலகத்திற்கும் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்தேன். அதனால் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தது. அந்த ரகசிய கூட்டத்தில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ஹெராயின் போதைப்பொருளுக்கான மூலப்பொருளான ‘ஓபியம்’ செடிகள் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டுள்ளதை பற்றியும், அந்த செடிகளை அழிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், அந்த செடிகளை அழிக்கும் ஆபரேஷனுக்கு என்னை தலைவராக நியமித்தனர்’’ என்றதோடு, இங்குதான் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்கும் விதை என் மனதில் விழுந்தது என்றார்.

இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க, இவருக்கு முழுசுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆபரேஷனுக்கு தேவையான குழுவை தேர்வு செய்யும் அதி காரம், மற்ற மத்திய-மாநில, மாவட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பை கோரும் அதிகாரம், ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை செலவு செய்யும் அதிகாரம், ஆயுதங்கள், பாதுகாப்பு படை என பலவழிகளில் தன்னிச்சையாக இயங்கும் அதி காரம் வழங்கப்பட்டது. அதனால்தான், சர்வதேச போதைப்பொருள் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த, பல கோடி மதிப்பிலான மூலப்பொருட்களை தடுக்க முடிந்தது.

‘‘குறுகிய காலத்திற்குள் அந்த செடிகளை அழிக்க வேண்டும் என்பதால், உடனடியாக வேலையை தொடங்கினோம். முதலில், இந்த ஆபரேஷனுக்கான குழுவை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நான் தேர்வு செய்தேன். அவர்களை அசாம் மாநிலத்தில் உள்ள திபுருகார் விமான நிலையத்திற்கு வரவழைத்து, அங்கிருந்து திட்டம் தீட்டி எங்கள் பணியை தொடங்கினோம்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லோகித் மற்றும் நம்சாய் மாவட்டங்களில்தான், ஓபியம் செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு கள ஆய்வுகளை தொடங்கினோம். இந்த 2 மாவட்டங்களின் எல்லைகளும் சீனா மற்றும் மியான்மருடன் பகிரப்பட்டிருந்ததால், எங்களுக்கு பல இன்னல்கள் காத் திருந்தன. குறிப்பாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெருக்கடியும், காடுகளில் ‘ஓபியம்’ செடிகளை பயிர் செய்திருந்த ஆதிவாசி மக்களின் ஈட்டி, அம்பு ஆயுதங்களும் எங்களை நோக்கி குறிவைக்கப்பட்டிருந்தது’’ என்றவர், நெருக்கடிகளை வெகுசுலபமாக கையாண்ட விதத்தை விளக்கினார்.

‘‘நாங்கள் கள ஆய்வு பணிகளில் இறங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ‘ஓபியம்’ செடிகளை அழிக்க சென்ற அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அங்கிருந்த சமூக விரோதிகள் கத்தியால் தாக்கியிருந்தனர். அவர் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகுதான் உயிர்பிழைத்து வந்தார். ஆபத்துகள் அதிகமாக இருந்ததால், எங்கள் குழுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து, 5 பேரை மட்டுமே முதலில் தேர்வு செய்தேன்.

அடர்ந்த வனப்பகுதிக்குள், ‘ஓபியம்’ செடிகள் பயிரிடப்பட்டிருந்ததால், அதை கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக இருந்தது. நாங்கள் 5 பேரும், காட்டுப்பகுதியின் பல இடங்களில் பதுங்கியிருந்து, கள ஆய்வை தொடங்கினோம். இதற்காக உயிரை பணயம் வைத்து, பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறோம். எங்களை சந்தேக பார்வையோடு பார்த்தவர்களிடம், செல்போன் கோபுரம் அமைக்க வந்திருக்கிறோம், என பொய் சொல்லி தப்பி யிருக்கிறோம். இப்படி 16 நாட்கள் ரகசிய கள ஆய்வு நடத்தியதில், நம்சாய், லோகித் மாவட்டங்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் ‘ஓபியம்’ செடிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே செடிகளை அழிக்கும் பணிக்கு தயாரானோம்’’ என்றவர், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பின்றி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் ‘ஓபியம்’ செடிகளை அழித்த கதையை கூறினார்.

‘‘மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் என பல கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு, ‘ஓபியம்’ செடிகளை அழிப்பதற்கான திட்டங்களை உறுதி செய்தோம். இந்த முயற்சியில் எங்களுக்கு அந்த மாநிலங்களின் முதன்மை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரது ஒத்துழைப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, 150 துணை ராணுவப்படையினர், 50 போலீசார் கொண்ட குழுவினரை வரவழைத்தோம். மேலும், மாஜிஸ்திரேட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பயிர்களை அழிக்கும் பணிக்காக உள்ளூர் மக்களை உதவிக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. மாறாக அவர் களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக நினைத்து எங்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர். இருப்பினும் அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக வந்திருந்த பிற மாநிலங்களை சேர்ந்த 200 பணியாளர்களின் துணையோடு களத்தில் இறங்கினோம். திடீரென ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு அதிரடியாக எங்கள் படைகளுடன் அந்தந்த இடங்களுக்கு சென்றோம். சுதாரித்து கொண்ட ஊர்மக்கள், நாங்கள் செல்லும் பாதையில் மரங்களை வெட்டிப் போட்டனர். மறைந் திருந்து தாக்கினர். கற்களை வீசினர். இப்படி பல சவால்களை எதிர்கொண்டுதான், ஓபியம் செடிகளை நெருங்கினோம்.

ஓபியம் செடியில் இருக்கும் பூக்கள் மற்றும் மொட்டுகளை அழித்தால் போதும். முழுமையாக செடியை அழிக்க வேண்டியதில்லை. அதனால் கம்புகளை பயன்படுத்தி செடியில் பூத்திருந்த பூக்கள், மொட்டுக்களை அழித்தோம். சுமார் 1,150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ‘ஓபியம்’ செடிகளை, 5 நாட்கள் போராடி அழித்தோம்.

நாங்கள் அழித்த ‘ஓபியம்’ செடி களின் மூலம் 2 ஆயிரத்து 700 கிலோ ஹெராயின் போதைப்பொருள் தயாரிக்கலாம். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரத்து 580 கோடி. அவற்றை இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது’’ என்று ‘திக் திக்’ பணி அனுபவத்தை கூறிய வெங்கடேஷ் பாபு, இந்த ஆபரேஷனுக்கு பிறகு, மதுரை விமான நிலைய சுங்க புலனாய்வு துறைக்கு தலைவராக மாற்றப்பட்டார். அதுவரை போதைப்பொருள் உற்பத்தியை கட்டுப்படுத்தியவர், பணி மாறுதலுக்கு பிறகு மாணவர்களிடம் பரவியிருக்கும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

‘‘பொதுவாக பொருட்களின் தேவை அதிகமாக இருந்தால் தான் அந்த பொருட்களின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். எனவே தான், போதைப் பொருளின் தேவையை குறைக்கும் விதமாக மாணவர்களிடம் சென்று போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இதன் மூலம் போதைப்பொருட்களை பயன்படுத்த நினைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். போதைப்பொருட்களை பயன் படுத்துவது குறைந்து விட்டால் அதன் உற்பத்தியும் குறைந்து விடும் என்பது என்னுடைய கருத்து. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 160 கல்லூரிகளுக்கு சென்று போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். ’’ என்றவர், இதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு பணியில் கிடைத்த மனநிறைவை உணர்வதாகவும் கூறினார்.



கூடவே, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் புது கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் திருகுறுங்குடி பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தலட்சுமி, எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஸ்ரீராம்பாபு, ஸ்ரீஸ்பாபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.

‘‘என்னுடைய போதை விழிப்புணர்வு பேச்சை கேட்ட பிறகு என்னை தொடர்பு கொண்டு பேசும் மாணவ-மாணவிகள் போதைப்பொருட்களை இனி எங்கள் வாழ்க்கையில் எடுத்து கொள்ள மாட்டோம் என்று உறுதி கூறுவதும், போதைப்பொருட்கள் எடுத்து கொண்டிருப்பவர்கள் அதை விட்டு விட்டோம் என கூறுவதும் என்னுடைய பேச்சுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். ”

‘‘போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம், நோக்கம். இந்த இலக்கை அடைவதற்கு போதைப்பொருள் குறித்து 8 மற்றும் 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடம் கொண்டு வரவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அப்போது தான் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும். அதற்காகவே போராடினேன். போராடுகிறேன். இனியும் போராடுவேன்’’ என்ற வரிகளோடு விடை கொடுத்தார்.

Next Story