ஆச்சரியப்படுத்தும், மனித உடல் அருங்காட்சியகம்


ஆச்சரியப்படுத்தும், மனித உடல் அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 21 Sep 2019 3:37 PM GMT (Updated: 21 Sep 2019 3:37 PM GMT)

உலக படைப்பினங்களில் ஆச்சரியமானதும், அதிசயமானதுமான மனித உடலின் செயல்பாடுகளை இன்னும் இந்த உலகம் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலர் வருமானம் ஈட்டுவதிலும், வேறு பணிகளிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருவதால் இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அதுவும் விலங்கியல், மருத்துவ படிப்பை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்துகொள்ளக்கூடிய அளவில் இன்றைய எந்திர காலம் அமைந்துள்ளது.

மனித உடலை சிக்கலான எந்திரம் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அது சிக்கலானது மட்டுமல்ல. மனிதர்களால் செயற்கையாக உருவாக்க முடியாத ஒன்றும்கூட. அத்தகைய சிக்கலான, ஆச்சரியங்கள் நிறைந்த மனித உடலை, எளிமையாக புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது, மனித உடல் அருங்காட்சியகங்கள். மனித உடலின் உள்ளே தசைகள், நரம்புகள், உடல் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? எப்படி இருக்கின்றன? என்பதை தத்ரூபமாக விளக்கமளிக்க உருவாக்கப்பட்டதுதான் மனித உடல் அருங்காட்சியகம்.



அந்த காலத்தில் அருங்காட்சியகங்களில் மனித உறுப்புகள் கண்ணாடி ஜாடியில் பார்வைக்கு வைக்கப்படுவது உண்டு. ஆனால் தற்காலத்தில் பதப்படுத்தப்பட்ட மனித உடலையே காட்சிக்கு வைக்கிறார்கள். கடந்த ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் மனித உடல் அருங்காட்சியகம் (பாடி மியூசியம்) உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் அபுதாபி கலீபா பல்கலைக்கழகத்தில் மனித உடல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையான மனித உடல்கள் செய்கைகளுடன் தத்ரூபமாக புறத்தோல் இல்லாமல் ஆச்சரியப்படுத்தும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சரி இந்த உண்மையான மனித உடல் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது? எப்படி பதப்படுத்துகிறார்கள்? எப்படி இந்த பாடி மியூசியம் இயங்குகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்.

மனித உடலை பதப்படுத்தி காட்சிப்படுத்தும் இந்த தொழில்நுட்பமானது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி நாட்டில் தோன்றியது. அந்த காலகட்டத்தில் பிரபலமான வோன் ஹேகன்ஸ் என்ற உடற்கூறு அறிவியலாளர் இதனை கண்டுபிடித்தார். இதுவரை உலகில் மனித உடல் அருங்காட்சியகத்திற்கு 18 ஆயிரம் பேர் தங்கள் உடலையும், உறுப்புகளையும் தானமாக வழங்கியுள்ளனர். 90 சதவீதமானோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

மனித உடல் அருங்காட்சியகம் கல்விக்காக செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் மனித உடலை பதப்படுத்த முதலில் இறந்த உடலில் உள்ள மேற்புறத்தோல், உள்ளே இருக்கும் ரத்தம் உள்ளிட்ட திரவங்கள் மற்றும் கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன் பிறகு நன்கு சுத்தப்படுத்தப்பட்டு பார்மலின் திரவத்தில் நீண்ட நேரம் வைக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. இதனால் கிருமிகள் உடலில் தங்குவதில்லை. மேலும் துர்நாற்றம் வீசி அழுகி போவதுமில்லை. நன்கு கெட்டியான பிறகு நீக்கப்பட்ட உடல் உறுப்புகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் அல்லது சிலிகான் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட தத்ரூபமான பாகங்கள் மிக கச்சிதமாக பொருத்தப்படுகிறது. இதற்கு ‘பிளாஸ்டினேசன்’ என்று பெயர். இந்த உடல்கள் உட்கார்ந்து இருப்பது போன்றும், படம் வரைவது போன்றும், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றும் என பல நிலைகளில் நிறுத்தப்படுகிறது. பொதுவாக இந்த மனித உடல்கள் ஆராய்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்விக்காகவும் வைக்கப்படுகிறது. இன்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற உடல்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

அமீரகத்தில் முதல் முறையாக மருத்துவ படிப்பிற்காக மட்டுமல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு மனித உடற்கூறுகளை பற்றி துல்லியமாக அறிந்துகொள்ள அபுதாபி கலீபா பல்கலைக்கழக வளாகத்தில் மனித உடல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே உயரம் தாண்டும் வீரர், படம் வரையும் ஓவியர் என இறந்தும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர், இந்த உடல் தானம் செய்த இறவா மனிதர்கள்.

-மர்யம்.சா

Next Story