வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு


வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2019 6:43 AM GMT (Updated: 22 Sep 2019 6:43 AM GMT)

வெளி மாநில வீரர்களை இதில் சேர்ப்பதினால், போட்டிகள் மீது ஒரு கவர்ச்சி உருவாகும்.

வெளி மாநில வீரர்களை இதில் சேர்ப்பதினால், போட்டிகள் மீது ஒரு கவர்ச்சி உருவாகும். பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு அரங்கங்களுக்கு அதிக அளவில் பார்வையாளர்களை வரவழைக்கும்.

விளிம்பு நிலை ஆட்டக் காரர்கள் தங்களின் திறமையை பெரிய அரங்கில் நிரூபிக்கின்றனர். தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் வெளி மாநில வீரர்களை சேர்ப்பதன் மூலம், அவர்களின் செயல் திறன் அதிகரிக்கும்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளில் வெளிமாநிலங்களை சேர்ந்த நட்சத்திர ஆட்டக் காரர்களை சேர்க்க கோரி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு, அதன் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

ப ல நகரங்களில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களையும், தொலைகாட்சியில் பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்களையும் கொண்டு, வெற்றிகரமாக நடந்து வருகிறது இந்த கிரிக்கெட் போட்டிகள். துவக்கபட்ட நான்கே ஆண்டுகளில் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டிகள் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தின் விளைவாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐ.பி.எல். போல், இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு டி.என்.பி.எல். உருவெடுத்துள்ளது. ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணியிலும் எட்டு வெளிநாட்டு வீரர்களை சேர்க்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியும். ஆனால் டி.என்.பி.எல்.லில் இதற்கு அனுமதி கிடையாது. ஐ.பி.எல்.லுக்கு அளிக்கப்படும் உரிமைகள் டி.என்.பி.எல்.லுக்கு மறுக்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல, வெளிமாநில வீரர்களையும், டி.என்.பி.எல்.லில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பிடிவாதமாக மறுத்து வருகிறது. கர்நாடகா பிரிமியர் லீக் மற்றும் டி20 மும்பாய் லீக் போட்டிகளுக்கும் இதே போல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்களை டி.என்.பி.எல். அணிகளில் சேர்ப்பதன் மூலம், அதற்கு வலுச்சேர்த்து, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் தரத்தை உயர்த்தும்.

மாநிலம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்திற்கு ஏற்ப, அனைத்து மாவட்டங்களின் கடைக்கோடி வரை கிரிக்கெட் விளையாட்டை டி.என்.பி.எல். கொண்டு சென்றுள்ளது. “மாவட்ட அளவில் கிரிக்கெட் மீது கவனம் குவிக்க செய்வதே எங்களின் நோக்கம். அணிகளுக்கு மாவட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட இதுவே காரணம். இது நல்ல பலன்களை அளித்துள்ளது. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம் வருகிறது.” என்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளரான ஆர்.ஐ.பழனி.

ஒரு ஆட்டத்தொடரின் வெற்றி, அதில் விளையாடும் வீரர்களை பொருத்தே அமைகிறது. வீரர்களிடையே போட்டி பலமாக உருவானால், அது பார்வையாளர்களின் கவனத்தை தொடர்ந்து தக்க வைக்கும். இன்றைய தேதியில், டி.என்.பி.எல். போட்டிகள், தமிழக வீரர்களின் பலத்தை பறைசாற்றுகிறது. வெளிமாநில வீரர்களை இதில் சேர்ப்பதன் மூலம், போட்டிகளின் மட்டத்தை உயர்த்துவதோடு, இதன் மீது ஒரு கவர்ச்சியையும் உருவாக்கும். ஐ.பி.எல்.லுக்கு வெளிநாட்டு வீரர்கள் மூலம் இது நடந்தது. தமிழக கிரிக்கெட் சங்கம் பல முறை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இதை பற்றி கோரிக்கை வைத்தும், சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. பி.சி.சி.ஐ. பிடிவாதமாக மறுக்கிறது.

நிபுணர்களும், டி.என்.பி.எல். பங்குதாரர்களும் பி.சி.சி.ஐ.யின் போக்கை கேள்விக்குள்ளாக்கி, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட பி.சி.சி.ஐ. மேலானதா? இந்தியாவை சேர்ந்த வீரர் ஒருவர் டி.என்.பி.எல். மற்றும் கே.பி.எல்.லில் விளையாடுவதை எப்படி தடுக்க முடியும் எந்த அடிப்படையில், இவற்றில் விளையாட வீரர்களை தடுக்கிறார்கள்?” என்று கேட்கின்றனர்.



தேர்வு என்பது வேலைவாய்ப்பு

“நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த குடிமகன், மற்றொரு பகுதியில், வேலையில் சேர முடியாது என்று அர்த்தமா? இந்தியாவில் எந்த ஒரு குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல முடியும். யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. அப்படி தானே?” என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கேட்கிறார்.

“டி.என்.பி.எல். போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க, பி.சி.சி.ஐ. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது” என்கிறார் டி.என்.பி.எல்.லின் நிர்வாக குழு தலைவரான பி.எஸ்.ராமன்.

வெளிமாநில வீரர்கள் விளையாட தொடங்கினால், உள்ளூர் வீரர்கள் அவர்களுக்கு இணையாக விளையாட முயற்சிப்பார்கள். “பிற மாநிலங்களை சேர்ந்த ரஞ்சி கோப்பை வீரர்கள் மற்றும் ஐ.பி.எல்.லை சேராத வீரர்களை இங்கு விளையாட பி.சி.சி.ஐ. அனுமதித்தால், இந்த போட்டிகளின் மதிப்பு கூடும். ஐ.பி.எல்.லில் சேர தொடர்ந்து முயற்சி செய்யும், நன்கு விளையாடும் ரஞ்சி கோப்பை வீரர்களை சேர்ப்பதன் மூலம், இதர வீரர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள அருமையான வாய்ப்பு உருவாகும். ஐ.பி.எல். அணிகளுக்கு தகுதியான வீரர்களை அடையாளம் காணும் வேலையையும் இது எளிதாக்கும்.” என்கிறார் ராமன்.

இன்று, ஐ.பி.எல். அணிகளுக்கு தகுதியான வீரர்களை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. மேகாலயா போன்ற மாநிலத்தில் இருந்து ஒரு வீரரை அடையாளம் கண்டால், அவரின் விளையாட்டை நேரில் பார்த்து, எடை போட வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. எனவே, அந்த வீரரை ஒரு வலை பயிற்சிக்கு அழைத்து, பிறகு ஒரு பயிற்சி போட்டியில் விளையாட செய்து, சோதனை செய்ய வேண்டியுள்ளது. அவரின் திறமை எத்தகையதாக இருந்தாலும் வலை பயிற்சிகளிலும், பயிற்சி போட்டிகளிலும் அந்த வீரர் நன்கு விளையாடினால் மட்டுமே அணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

டி.என்.பி.எல். போட்டிகளில் அந்த வீரர் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால், குறைந்தது ஏழு போட்டிகளில் விளையாட முடியும். அனைத்து போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், அவரின் திறன் நேரலையில் பதிவாகி, தேர்வாளர்கள் எளிதாக அவரை அடையாளம் காண முடியும் என்று ராமன் விளக்குகிறார்.

“டி.என்.பி.எல்.லில் எட்டு அணிகள் உள்ளன. ஒரு அணிக்கு நான்கு வெளிமாநில வீரர்கள் அனுமதிக்கப்பட்டால், பிறகு 32 வீரர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் அமையும். நாங்கள் இதை எடுத்துச் சொல்லியும், இந்த எளிய விஷயத்தை பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அங்கு ஒரு மாற்றம் நடக்க காத்திருக்கிறோம். அது சரியாக நடந்தால், ஒவ்வொரு அணிக்கும், நான்கு வெளிமாநில வீரர்கள் அடுத்த டி.என்.பி.எல். போட்டிகளில் இருந்து கிடைப்பார்கள்.” என்கிறார் பழனி.

கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்துவதில் கவனம் குவிந்துள்ளதால், வெளிமாநில வீரர்களை அறிமுகம் செய்வது அனைவருக்கும் நன்மையளிக்கும். விளையாட்டு வீரருக்கும், அணிகளுக்கும் உதவும். “நாங்க ஐ.பி.எல். வீரர்களை கேட்கவில்லை. பாபா அபராஜித் மற்றும் இந்திரஜித் போன்ற, சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் வீரர்களை தேடுகிறோம். பி.சி.சி.ஐ. நேர்மறையாக சிந்திக்க வேண்டும். இது கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை மேம்படுத்தும். இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பழனி.

“கண்டிப்பாக இது உள்ளூர் ஆட்டக்காரர்களின் தரத்தை, தொடர்ச்சியான சோதனைகளின் மூலம் மேம் படுத்தும்.” என்கிறார் முன்னாள் இந்திய பன்னாட்டு கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்.லின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளருமான எம்.வெங்கட்ராமன்.



பி.சி.சி.ஐ.யின் ஜூன், ஆகஸ்டுக்கான அட்டவணை

ஜூன், ஆகஸ்டு மாதங்களில் பி.சி.சி.ஐ.யின் அட்டவணை முற்றிலும் காலியாக உள்ள நிலையில், இதர மாநிலங்களில் வானிலையின் காரணமாக போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தமிழகத்தில் இந்த மாதங்களில் மழை மிகவும் குறைவு என்பதால், தமிழகத்திற்கு சாதகமான சூழல் உள்ளது. “பி.சி.சி.ஐ. ஒரு முடிவுக்கு வர வேண்டும். வீரர்களுக்காக ஒரு சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும். ஐ.பி.எல்.லில் விளையாடும் வீரர், தன் சொந்த மாநில பிரிமியர் லீக்கை தவிர, இதர மாநில பிரிமியர் லீக்குகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது. உதாரணமாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஆர்.அஸ்வின் ஆகியோர் டி.என்.பி.எல்.லில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். இதர மாநில பிரிமியர் லீக்குகளில் விளையாட அனுமதிக்க கூடாது. இதர வீரர்கள் தம் சொந்த மாநிலத்திலும், கூடுதலாக ஒரு இதர மாநில பிரிமியர் லீக் அணியிலும் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து பி.சி.சி.ஐ. உள்நாட்டு போட்டிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கிறார் பழனி.

“வெளிமாநில வீரர்களை அறிமுகம் செய்வது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.” என்கிறார் மாவட்ட செயலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான என்.வெங்கட்ராமன்.

ஒரு மாநிலத்திற்காக விளையாட விரும்பும் வீரர் அந்த மாநிலத்தில் பிறந்திருக்க வேண்டும். அல்லது அந்த மாநிலத்தில் குடியேறி, தான் பிறந்த மாநிலத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு பி.சி.சி.ஐ. விதிமுறை உள்ளதாக ராமன் கூறுகிறார். இந்த விவகாரத்தில், பிற மாநில பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட ஒரு மாநில வீரருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கக்கூடாது என்ற நிலைபாட்டை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது. “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பிரிவு லீக் போட்டிகளில் ஏற்கனவே விளையாடும் பிற மாநிலத்தை சேர்ந்த வீரரை, டி.என்.பி.எல்.லில் விளையாட எப்படி நீங்கள் தடுக்க முடியும்? உதாரணமாக பியூஸ் சாவ்லா தி இந்து கோப்பைக்கான போட்டிகளில் கெம்பிளாஸ்ட் அணிக்காக விளையாடுகிறார். வி.ஐ.பி. கோப்பை மற்றும் பாலையம்பட்டி கேடயத்திற்கான போட்டிகளிலும் ஆடுகிறார். வருடத்தின் ஐந்து மாதங்கள் இங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார். ஆனால் டி.என்.பி.எல்.லில் மட்டும் விளையாட முடியாது. டி.என்.சி.ஏ முதல் பிரிவு லீக் ஆட்டங்களில் 18 முதல் 20 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்றனர்.” என்கிறார் ராமன்.

“இது ஒரு அடிப்படை உரிமை. ஒரு வீரரை எப்படி தடுக்க முடியும்? அடுத்த டி.என்.பி.எல். போட்டிகள் துவங்கும் முன்பு இதில் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் கூறுகிறார்.

ஐ.பி.எல்.லுக்கு, டி.என்.பி.எல். எந்த விதத்திலும் போட்டியாக இருக்காது என்பதை பி.சி.சி.ஐ. புரிந்துகொள்ள வேண்டும். ஐ.பி.எல்.லின் தீவிரத்தை எந்த விதத்திலும் நீர்த்துப்போக செய்யாது. கிரிக்கெட்டின் நன்மைக் கருதி, பி.சி.சி.ஐ. பரந்த மனப்பான்மையோடு இதை அணுக வேண்டும்.

Next Story