சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தமிழகம்


சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தமிழகம்
x
தினத்தந்தி 22 Sep 2019 7:05 AM GMT (Updated: 22 Sep 2019 7:05 AM GMT)

2018-ல் தமிழகத்திற்கு இந்தியாவிலேயே, அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

லக சுற்றுலா சந்தை விரிவடைந்து வரும் வேளையில், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுக்க முயற்சி செய்து, தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

2018-ல் தமிழகத்திற்கு இந்தியாவிலேயே, அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 38.59 கோடி உள்நாட்டு பயணிகளும், 60.73 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சென்ற ஆண்டு வந்துள்ளனர்.

ஆனால் பயணிகள் வருகையின் போது துல்லியமான கணக்கெடுப்பு முறை இல்லாததால் இந்த தரவுகள் முழுமையானவை அல்ல என்று சுற்றுலா தொழில்துறையினர் கருதுகின்றனர்.

2014 முதல் தமிழகம் முதல் இடத்தில் தொடர்கிறது. சுற்றுலா பயணிகள் வருகையை கணக்கெடுக்க ஒரு முறையான அளவுகோல் இல்லை. என்ன வேலையாக இங்கு வருகிறார்கள் என்பதை கண்டறியவும் வழியில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தமிழ்நாடு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் மூலம் வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காண தேவையான நுழைவு சீட்டுகளின் விற்பனை அளவு ஆகியவற்றை கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணக்கெடுக்கப்படுகிறது என்று சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

மருத்துவ சிகிச்சை பெற இங்கு வருபவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வழியே இல்லை. மருத்துவமனைகள் இந்த தகவல்களை அளிப்பதில்லை.

“ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி மும்பையில் தரையிறங்கி, பிறகு சென்னை வந்து, இங்கிருந்து திருப்பதிக்கு சாலை மார்க்கமாக சென்றால், அவர் தமிழகத்திற்கு வந்த சுற்றுலா பயணியா அல்லது ஆந்திராவிற்கு வந்தவரா?” என்று கேட்கிறார், இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தலைவரான பழனிவேல் சரவணன்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களின் குடும்பத்தினரை சந்திக்க வரும் போது, அவர்களையும் சுற்றுலா பயணிகள் என்று கணக்கிடும் முறை தவறானது.

முறைப்படுத்தப்படாத துறையாக சுற்றுலா துறை உள்ளது. பெரும்பாலான நாடுகளில் நுழையும் இடங்களிலேயே சுற்றுலா பயணிகளை அடையாளம் காணும் முறை வலுவாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பதையும் கண்டறியும் முறை உள்ளது. ஆனால் இந்தியாவில், நுழைவு வாயில்களில் இதை கணக்கிடும் முறை ஒழுங்காக இல்லை.

சிங்கப்பூர் போன்ற ஒற்றை நுழைவு வாயில் கொண்ட நாட்டில் இதை கணக்கிடுவது எளிது. ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இது கடினம்.

புனித பயணங்களை பொறுத்தவரை தென்இந்தியாவின் நுழைவாயிலாக சென்னை திகழ்கிறது. “60 சதவீதத்திற்கும் அதிகமான வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளை கவரும் தளங்கள் இங்கு உள்ளன. தமிழகத்திற்கு வருகின்றவர்களில் அதிகமான எண்ணிக்கையினர், சிங்கப்பூர், மலேசியா, தென் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாம் என்கிறார் டி.ஏ.ஏ.ஐ அமைப்பின் தலைவரான சாகுல் ஹமீது. இந்த நாடுகளில் இருந்தும், வங்காளதேசத்தில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். சென்னை வழியாக தரையிறங்கும் சுற்றுலா பயணிகள், இதர தென் மாநிலங்களுக்கு செல்வதும் உண்டு.

நமது சுற்றுலா தலங்கள் போதிய அளவு பயன்படுத்தப்படுவதில்லை. இதை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

“தமிழகத்தில் தங்கும் வசதிகள் மற்றும் காலை உணவு அளிக்கும் திட்டங்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தரமான, சுகாதாரமான தங்குமிடங்கள் குறைவாக உள்ளன” என்று தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் வி.அமுதவல்லி கூறுகிறார். “இது அந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்” என்கிறார்.



“இது பாரம்பரியமான சுற்றுலா முறை ஆகும். தமிழகமும், இந்தியாவும் உலக சுற்றுலா சந்தையில் பங்கெடுக்க வேண்டும் என்றால், அதற்கு நவீன சுற்றுலா முறைகளின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்கிறார் ஹமீது. நீர் விளையாட்டுகள், வான்வெளி விளையாட்டுகள், மற்றும் ஏதோ ஒரு வகையான இரவு வாழ்க்கை முறை ஆகியவை இதில் அடங்கும் என்கிறார்.

நீர் விளையாட்டுகளுக்கு உகந்த இடங்கள் சில உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை போதுமான வசதிகள் இல்லாத நிலையில் உள்ளன. தனியார் நிறுவனங்கள் இவற்றை மேம்படுத்த விரும்பினாலும், அதை ஊக்கப்படுத்த தேவையான அரசு திட்டங்களோ, முன் மாதிரிகளோ இல்லை. இங்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பின், அவற்றை பயன்படுத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இந்த சிறிய மையங்களை விமான நிலையங்களில் இருந்து சென்றடைய தரமான சாலை வசதிகள் தேவை.

நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் மூன்று உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவற்றுடன் மொத்தம் ஏழு விமான நிலையங்களை கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்கிறார். ஆனால் இவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.

“உலக அளவில் போட்டியிட நம்முடைய நுழைவாயில்கள் சிறப்பாக இருக்க வேண்டும். நமது விமான நிலையங்கள் சிறப்பான கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில், இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி தேவை. உள்நாட்டு விமான நிலையங்கள் உலக தரத்தில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாளும் தகுதியுடன் இருக்க வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தேவையான அனுமதி விரைவாக அளிக்கப்பட வேண்டும். தங்கும் விடுதிகள் பெரிய அளவில் கட்டப்பட, விரிவுபடுத்த போதுமான இடம் அளிக்கப்பட வேண்டும். தொழில்முறை சுற்றுலா பற்றிய பயிற்சி வகுப்புகளும் நமக்கு தேவைப்படுகிறது. இதன் மூலம் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை உருவாக்க வேண்டும்” என்கிறார் ஹமீது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, ஜெர்மனி, சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இலங்கை, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதை பயன்படுத்தி, உலக சுற்றுலா சந்தையில் பெரும் பங்கை வெல்ல, சரியான இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும், போக்குவரத்து வசதிகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உலக சுற்றுலா சந்தையில் போட்டியிட...

உ லக சுற்றுலா சந்தை வளர்ந்து வரும் நிலையில், அதில் அதிக பங்கை வெல்ல இந்தியா பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

2018-ல் உலக சுற்றுலா ஏற்றுமதிகள் (சுற்றுலா துறையின் வருமானம் மற்றும் பயணிகள் போக்குவரத்து) 1.7 லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு இருந்தது. 140 கோடி சுற்றுலா பயணிகள் வருகைகள் பதிவாகியுள்ளன. உலக சுற்றுலாத் துறை தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக 2018-லும் வளர்ச்சி அடைந்ததாக, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவன அறிக்கை கூறுகிறது.

மூன்று முதல் ஆறு சதவீதம் வரையிலான உலக ஜி.டி.பி. வளர்ச்சி, மிதமான பண பரிமாற்ற விகிதங்கள், விமான பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆறு சதவீத உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வளர்ச்சி அமைந்துள்ளது. விமான சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள, தனித்துவமிக்க இரட்டை நகரங்களின் எண்ணிக்கை இரு மடங்காகியதும் இதற்கு ஒரு காரணம்.

சுற்றுலா நிர்வாகத்தை சீராக்க, பயணிகளின் வருகையை உடனுக்குடன் பதிவு செய்யும் முறையை மேலும் பல நாடுகள் முன்னெடுத்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. எவ்வகையான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்?, அவர்கள் எங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்?. அவர்களுக்கு என்ன வசதிகள் தேவை? என்பதை துல்லியமாக கணிக்கும் திறன் அதிகரித்து வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.

“விசாக்களில் இருந்து தகவல்களை திரட்டுவதன் மூலம் அவர்கள் செல்லும் பகுதிகளை பற்றி கண்டறிய முடியும். ஆனாலும் அவர்கள் இங்கு தரையிறங்கிய பின், எந்த பகுதிகளுக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்” என்று தொழில்துறையை சேர்ந்தவர் ஒருவர் கூறுகிறார்.



தங்கும் விடுதிகள், விருந்தினர் அறைகள், வீடுகளில் தங்குவோர் பற்றிய தகவல்களை சேகரிப்பது மற்றொரு முறை. இங்கு தங்குபவர்கள் பற்றிய விவரங்களை காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

சுற்றுலா துறை மூலம் வருமானம் ஈட்டும் முறை, பல நாடுகளுக்கு வருவாய் ஈட்ட முக்கிய வழியாக உள்ளது. ஆனால் இந்தியா இந்த சந்தையை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை. உலக ஏற்றுமதியில் சுற்றுலா துறை மூன்றாவது இடத்திலும் (1,58,600 கோடி டாலர்கள்) எரிபொருட்களுக்கு (1,90,600 கோடி டாலர்கள்) அடுத்த இடத்திலும் உள்ளன. முதல் இடத்தில் ரசாயனங்கள் (1,99,300 கோடி டாலர்கள்) உள்ளதாக உலக வர்த்தக நிறுவனம் தெரிவிக்கிறது.

உலக சுற்றுலா பயணிகளில் பாதி பேர் ஐரோப்பா செல்கின்றனர். ஆசிய பசிபிக் பிராந்தியம் அடுத்த இடத்தில், நான்கில் ஒரு சுற்றுலா பயணியை ஈர்க்கிறது. இதில் இந்தியா, 5 சதவீததை கொண்டு சிறு பங்கை பெறுகிறது. உலக அளவில் சுற்றுலா துறையின் மொத்த வருமானத்தில் இந்தியா 6.6 சதவீதத்தை பெறுகிறது.

“ஒற்றை சந்தை முறை தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான சாதகமான அம்சம். இதன் மூலம் அவர்களின் குடிமக்கள் எளிதாக எல்லைகளை கடக்க முடிகிறது. மேலும், சுத்தம், சுகாதாரம், பாரம்பரிய சின்னங்களை நன்கு பராமரித்தல், வரலாறு, பாரம்பரியம், சிறப்பான போக்குவரத்து வசதிகள், பிராண்டிங் மூலம் சந்தைபடுத்துதல் போன்றவை அவர்களுக்கு உதவுகின்றன. உலகின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதும் இதற்கு உதவுகிறது.” என்று கோவா பயணம் மற்றும் சுற்றுலா துறை சங்கத்தின் செயலாளரான ஜாக் சுக்கிஜா கூறுகிறார்.

2018-ல் இந்தியாவிற்கு 1.056 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாக சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது. 2017-ம் ஆண்டை விட இது 5.2 சதவீதம் அதிகம் ஆகும்.

“உலக சுற்றுலா சந்தை சுமார் 5 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புடையது. அன்னிய செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி சேவைத்துறை என்பதால் சுற்றுலா துறை முக்கிய துறையாக அறிவிக்கப்பட வேண்டும். உள் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வெளிப்படைதன்மை ஆகியவற்றை நாம் மேம்படுத்த வேண்டும். நினைவுச் சின்னங்கள், தேசிய பூங்காக்கள், கடற்கரைகள், கலாசாரம், வரலாறு மற்றும் உணவு வகைகள் போன்ற சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அருமையான அம்சங்கள் நம்மிடம் உள்ளது. ஆனால் இவற்றை சென்றடைய நல்ல சாலை வசதிகள் இல்லை. இந்த பகுதிகளில் உள்ள வசதிகள் மோசமாக உள்ளன” என்கிறார் சுக்கிஜா.

இதர தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிடும் போது, சுற்றுலா துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது.

“சீனாவிற்கு 6.3 கோடி சுற்றுலா பயணிகளும், தாய்லாந்திற்கு 3.8 கோடி சுற்றுலா பயணிகளும் துருக்கிக்கு 4.6 கோடி சுற்றுலா பயணிகளும், மலேசியாவிற்கு 2.6 கோடி சுற்றுலா பயணிகளும், இந்தோனேசியாவிற்கு 1.2 கோடி சுற்றுலா பயணிகளும் செல்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக அரசாங்கம், புனித தலங்களையும், சாகச விளையாட்டு தலங்களையும், பசுமையான தலங்களையும் மேம்படுத்தி வருகிறது. இவற்றை கொண்டு சுற்றுலா துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றால், தொழில் செய்வதில் உள்ள தடைகளை நீக்குதல், சேவைகளின் விலைகளில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்துதல், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

துறைசார் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க, பிரமிக்கவைக்கும் இந்தியா ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி திட்டத்தை சுற்றுலா துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

ஆனால் சுற்றுலா வழிகாட்டியாக யார் செயல்படலாம் என்பதற்கு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

சுற்றுலா தலங்கள், தங்கும் இடங்கள், உணவு வகைகள் இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றன. ஆனால் பொது சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோவா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அதிகம் செல்கின்றனர். வடகிழக்கு பகுதிகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தொடங்கியுள்ளது என்கிறார் சுக்கிஜா.

சாலை வசதிகள் அதிகரித்திருக்கிறது என்றாலும் ரெயில் வசதிகள் இன்னும் பிரச்சினையாக உள்ளன. முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு என்கிறார்.


Next Story